“ராமர் ஒரு காவியத் தலைவன்” - இயக்குநர் மிஷ்கின்

By செய்திப்பிரிவு

சென்னை: “ராமபிரான் பெரிய அவதாரம். ஒரு காவியத் தலைவன். அரசியல் ரீதியாக எனக்கு கருத்து சொல்லத் தெரியாது. சினிமாக்காரனாக என்னுடைய கதைகள் மூலம் என் அரசியல் வெளிப்பட வேண்டும் என நினைக்கிறேன்” என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

மிஷ்கினின் சகோதரர் ஆதித்யா இயக்கியுள்ள படம் ‘டெவில்’. இப்படத்துக்கு மிஷ்கின் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மிஷ்கின், “25 வருடமாக நான் சினிமாவில் இருக்கிறேன். விஜய்சேதுபதி போன்ற ஒரு சிறந்த நடிகரை நான் பார்க்கவில்லை. நாளுக்கு நாள் அவரது நடிப்பு மெருகேறிக்கொண்டே போகிறது. அவருக்காக ‘ட்ரைன்’ படம் பெரிதாக இருக்க வேண்டும் என இயற்கையை வேண்டிகொள்கிறேன்.

நான் எழுதியதிலேயே வேகமான படம் இதுவாக இருக்கும்” என்றார். அவரிடம் ‘ராமர் கோயில் திறப்பு’ குறித்து கேட்டபோது, “ராமர், அல்லா, ஏசு என் மனதில் இருக்கிறார்கள். ராமர் பெரிய அவதாரம். ஒரு காவியத் தலைவன். நிறைய என்னென்னமோ சொல்வார்கள். அரசியல் ரீதியாக எனக்கு கருத்து சொல்லத் தெரியாது. இதில் எதிர்ப்பு உள்பட எல்லாமே இருக்கத்தான் செய்யும். சினிமாக்காரனாக அரசியல் சார்ந்து எதையும் சொல்லக் கூடாது என முடிவெடுத்திருக்கிறேன்.

என் அரசியல் நான் எடுக்கும் சினிமாதான். என் கதாபாத்திரங்கள் எல்லா காலக்கட்டத்திலும் இருக்கும், மனித அவலம், மனிதர்கள் நேசிக்கதவறியது, சக உயிர்கள் மீது அன்பு செலுத்தாமை குறித்து பேச நினைக்கிறேன். தற்போதைய அரசியல் குறித்து பேச வேண்டாம் என நினைக்கிறேன். நான் அரசியல் பேசும் இடம் என்னுடைய வாக்குப்பதிவு மையம் மட்டும் தான். அரசியல் பேசாததால் நான் பயப்படுகிறேன் என அர்த்தமில்லை. சினிமாக்காரனாக என்னுடைய கதைகள் மூலம் என் அரசியல் வெளிப்பட வேண்டும் என நினைக்கிறேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE