ராமர் கோயில் திறப்பு விழா | அயோத்தி புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்

By செய்திப்பிரிவு

சென்னை: நாளை (ஜனவரி 22) அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை விழா நடைபெற உள்ள நிலையில், இன்று சென்னையில் இருந்து அயோத்தி புறப்பட்டுச் சென்றார் நடிகர் ரஜினிகாந்த்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோயிலில் நாளை (ஜன 22) கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. நண்பகல் 12.20 மணி அளவில் கோயில் கருவறையில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்க, இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் சந்தித்த அயோத்தி - ஶ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்‌ஷேத்ரா நிர்வாகிகள் அவருக்கு ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினர்.

இந்த நிலையில், இன்று (ஜன.21) நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் இருந்து அயோத்திக்கு புறப்பட்டுச் சென்றார். முன்னதாக காரில் இருந்தபடியே செய்தியாளர்களை சந்தித்த அவர், “ராமஜென்ம பூமிக்கு செல்வதில் மிக்க மகிழ்ச்சி. 500 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த ஒரு பிரச்சினை இது. உச்சநீதிமன்றம் இதற்கு தீர்வு கொடுத்தது. தற்போது அது நிறைவேறியிருக்கிறது. இந்த நாள் வரலாற்றில் மறக்க முடியாத முக்கியமான நாள்” என்று தெரிவித்தார். நாடு முழுவதிலும் இருந்து முக்கிய பிரமுகர்கள் வருகை தருவதால் அயோத்தி நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE