அஜித்தின் ‘விடாமுயற்சி’ உரிமையை கைப்பற்றிய நெட்ஃப்ளிக்ஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: அஜித்குமார் நடித்துவரும் ‘விடாமுயற்சி’ படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படம் திரையரங்குகளில் வெளியான பிறகு நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்துக்கு ‘விடாமுயற்சி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியான இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஆனால், அதன் பிறகு படப்பிடிப்பு தொடங்குவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இதையடுத்து இப்படத்திலிருந்து தயாரிப்பு நிறுவனமான லைகா விலக உள்ளதாக தகவல் பரவியது. மேலும், இப்படம் கைவிடப்பட்டதாகவும் வதந்திகள் பரவின. இதனைத் தொடர்ந்து வதந்திகளுக்கு லைகா நிறுவனம் முற்றுப் புள்ளி வைத்தது.

தற்போது ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இப்படத்தை முடித்த கையோடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அடுத்த படத்தில் அஜித் நடிக்க உள்ளார். இந்த நிலையில், ‘விடாமுயற்சி’ படம் குறித்த அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘விடாமுயற்சி’ படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிமுடிந்த பிறகு நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடிக்கும் ‘The GOAT', ரஜினியின் ‘வேட்டையன்’, சூர்யாவின் ‘கங்குவா’ உள்ளிட்ட பெரிய படங்களின் போஸ்டர்கள் வெளியான நிலையில், அஜித்தின் ‘விடாமுயற்சி’ தொடர்பாக அப்படியான போஸ்டர்கள் எதுவும் வரவில்லை. இது அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இப்படி ஒரு அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE