அயோத்தியில் ரூ.14.5 கோடிக்கு வீட்டுமனை வாங்கிய அமிதாப் பச்சன் - விவரம் என்ன?

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அயோத்தியில் வரும் 22ஆம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெறவிருக்கும் நிலையில், பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான அமிதாப் பச்சன் அயோத்தியில் சொந்தமாக வீட்டுமனை வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் திறப்பு விழா ஜனவரி 22-ம்தேதி நடைபெற உள்ளது. கோயிலில் அன்று ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். இந்த நிலையில், அமிதாப் பச்சன் அயோத்தியில் 10 ஆயிரம் சதுர அடியில் வீட்டுமனையை வாங்கியிருப்பதாகவும், இதன் மதிப்பு ரூ.14.5 கோடி இருக்கும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.

கோயில் திறப்பு விழாவுக்குப் பிறகு, உலகின் மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக அயோத்தி உருவெடுக்கப்போகிறது. இதையடுத்து இங்கு பெரிய பொருளாதார நடவடிக்கைகளை அரசும் பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர். இதனால் இங்கு நிலங்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அயோத்தியின் சராயு பகுதியில் இந்த வீட்டுமனை அமைந்திருக்கிறது. ராமர் கோயிலில் இருந்து சுமார் 10 நிமிட தொலைவிலும், விமான நிலையத்தில் இருந்து 20 நிமிட தொலைவிலும் அமிதாப் பச்சன் வாங்கியிருக்கும் இடம் அமைந்துள்ளது எனச் சொல்லப்படுகிறது.

மும்பையைச் சேர்ந்த வீட்டு மேம்பாட்டு நிறுவனமான ஹவுஸ் ஆஃப் அபிநந்தன் லோதா (The House of Abhinandan Lodha - HoABL) நிறுவனம் அயோத்தி ராமர் கோயிலுக்கு அருகே 51 ஏக்கர் பரப்பளவில் வீட்டுமனை திட்டத்தை செயல்படுத்த உள்ளது என்றும் இந்த இடத்தில் ஐந்து நட்சத்திர ஹோட்டலுடன் மிகப் பிரம்மாண்டமான வீடுகள் கட்டப்பட உள்ளன என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அமிதாப் பச்சன் அயோத்தியில் சொந்தமாக வீட்டுமனை வாங்கியிருப்பது பாலிவுட்டில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE