“என் விருப்பப் பட்டியல்ல வெற்றிமாறன் இருக்கார்” - மனோஜ் பாஜ்பாய் பேட்டி

By செ. ஏக்நாத்ராஜ்

தமிழில் சமர், அஞ்சான் படங்களில் வில்லனாக வந்து மிரட்டியவர் இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய். ‘தி ஃபேமிலிமேன்’ வெப் தொடர் மூலம் அதிகம் கவனம் பெற்ற அவர் இப்போது நடித்துள்ள வெப் தொடர், ‘கில்லர் சூப்’. நெட்பிளிக்ஸில் வெளியாகி இருக்கும் இதில், கொங்கனா சென் செர்மா, நாசர், சாயாஜி ஷிண்டே, அன்புதாசன் உட்பட பலர் நடித்திருக்கின்றனர். ‘உட்தா பஞ்சாப்’ படத்தை இயக்கிய அபிஷேக் சவுபே இயக்கி இருக்கிறார். இந்த தொடரின் புரமோஷனுக்காக சென்னை வந்திருந்த மனோஜ் பாஜ்பாயிடம் உரையாடினோம்.

சமர், அஞ்சான் படங்களுக்குப் பிறகு தமிழ்ல உங்களைப் பார்க்க முடியலையே?

சரியான வாய்ப்புகள் வரலைங்கறதுதான் உண்மை. ‘அஞ்சான்’ பெரிய வெற்றி பெற்றிருந்தா நிறைய வாய்ப்புகள் வந்திருக்கலாம். இருந்தாலும் சில வாய்ப்புகள் வந்தன. நல்ல கேரக்டர்கள்தான். ஆனா, மொழி தெரியாம நடிக்கறதுல நிறைய சிரமம் இருக்கு. அதுல என்னால நூறு சதவிகிதம் நடிப்பை கொடுக்க முடியுமான்னு தெரியல. அதுமட்டுமில்லாம, உடனடியா ஒரு மொழியை கற்கவும் முடியாது. அதனால தமிழ்ல தொடர முடியலை.

இரட்டை வேடம்னா அப்பா -மகன், ஹீரோ- வில்லன் அப்படித்தான் இருக்கும். ‘கில்லர் சூப்’ல கணவன், காதலன்-னு டூயல் ரோல் பண்ணியிருக்கீங்களே?

இதுல, முதன் முறையா ‘டபுள் ரோல்’ பண்ணியிருக்கேன். இந்த கதை சுவாதி ஷெட்டி (கொங்கனா சென் சர்மா) அப்படிங்கற பெண்ணைச் சுற்றி நடக்கிறதுதான். அவருக்கு ரெஸ்டாரண்ட் தொடங்கணும்னு கனவு இருக்கு. அவர் வாழ்க்கையில் இரண்டு ஆண்கள் வர்றாங்க. அதனால என்ன பிரச்சினைகள் ஏற்படுதுன்னு கதை நகரும். இதுல மூன்றாவது பரிமாணமும் இருக்கும். அது எனக்கு சவாலானதா இருந்தது. ஒரு நடிகனா ரசிச்சுப் பண்ணியிருக்கேன். ஸ்கிரிப்ட்டும் அதற்கான நடிப்பை சரியா என்கிட்ட வாங்கியிருக்கு.

இயக்குநர் அபிஷேக் சவுபே-யுடன் 2-வது முறையா இணைஞ்சிருக்கீங்க?

இல்ல. மூன்றாவது முறையா சேர்ந்திருக்கோம். முதல்ல அவர் இயக்கிய ‘சோன் சிரியா’ படத்துல நடிச்சேன். அடுத்து நெட்பிளிக்ஸுக்காக அவர் இயக்கிய ஆந்தாலஜியான ‘ரே’ படத்துல நடிச்சேன். இப்ப ‘கில்லர் சூப்’.

பெரும்பாலான வெப் தொடர்கள் த்ரில்லர் கதைகளைக் கொண்டதாவே இருக்குதே... இதுவும் கூட த்ரில்லர்தான்...

உண்மைதான். 90 சதவிகித வெப் தொடர்கள் அப்படித்தான் உருவாகுது. இது த்ரில்லரா இருந்தாலும் பிளாக் காமெடிக்கும் முக்கியத்துவம் இருக்கும். ரொமான்டிக் விஷயங்களும் இருக்கு. அதுமட்டுமில்லாம இதுல வேற சில ரசனையான சம்பவங்களை இயக்குநர் வச்சிருக்கார். அதனால மற்ற வெப் தொடர்களை விட, இது வேற மாதிரிதான் இருக்கும்.

ஓடிடி -க்கு சென்சார் தேவைன்னு தொடர்ந்து கோரிக்கைகள் வருது. நீங்க என்ன நினைக்கிறீங்க?

ஆன்லைன் விஷயங்களுக்கு எப்படி சென்சார் பண்ணுவீங்க? ஒரு வெப் தொடர்ல ஆட்சேபனைக்குரிய விஷயம்னு நினைச்சா அதை சென்சார் பண்ணிடலாம். ஆனா, ஆன்லைன் மிகப்பெரிய உலகம். அதுல கொட்டிக் கிடக்கிற எல்லாத்தையும் சென்சார் பண்ணிட முடியுமா? அதனால சர்டிபிகேட்டுகள் மூலமா அதைக் கட்டுப்படுத்த முடியும்னு நினைக்கிறேன். இதுக்கு , 18 பிளஸ், 14 பிளஸ் அப்படிங்கற மாதிரி வயசு தொடர்பான சான்றிதழ்கள் கொடுக்கலாம். அப்படி கொடுத்த பிறகு அமெரிக்காவுல இது வெற்றிகரமா போய்கிட்டு இருக்கு. அதுமட்டுமில்லாம , இந்த சான்றிதழ்கள் மூலமா தங்கள் குழந்தைகள் அதை பார்க்கலாமா வேண்டாமா அப்படிங்கறதைப் பெற்றோர்கள் தீர்மானிக்கலாம்.

பான் இந்தியா படங்கள் நிறைய உருவாகிட்டு வருது...

‘பான் இந்தியா’ங்கற பெயர்தான் புதுசு. மற்றபடி அது பழசுதான். ‘ஷோலே’ மாதிரியான படங்கள் அப்பவே இந்தியா முழுவதும் ஓடியிருக்கு. அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் இந்தியா முழுவதும் தெரிந்த முகங்கள்தான். நான் பிஹாரைச் சேர்ந்தவன். அங்கேயும் கமல் சார், ரஜினி சார் ரொம்ப பிரபலம். பாகுபலி, கே.ஜி.எஃப், ஆர்ஆர்ஆர், புஷ்பா படங்கள்ல நடிச்சவங்கள்லாம் பிஹார், ஹரியானா கிராமங்கள்ல கூட பிரபலமாகி இருக்காங்க. எப்படின்னா, அவங்க டிவியில டப் பண்ணி வெளியாகும் படங்களை அதிகமா பார்க்கிறாங்க. ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன், ஆர் ஆர் ஆர், புஷ்பா படங்கள் வர்றதுக்கு முன்னாலயே அங்க ரொம்ப பாப்புலர்.

நீங்க, நாடக (தியேட்டர்) பின்னணியில இருந்து வந்தவர். ஒரு நடிகனா தன்னை வளர்த்துக்க அது எந்தளவுக்கு உதவுது?

என்னைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நடிகரும் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னால அஞ்சு வருஷமாவது ‘தியேட்டர்’ல நடிச்சுட்டு வரணும். ஏன்னா, சினிமா அதிக செலவுல எடுக்கப்படுது. அங்க போய் பரிசோதனை பண்ணிட்டு இருக்க முடியாது. அதுக்கான வாய்ப்பை அது கொடுக்காது. மனரீதியா, உடல் ரீதியா சரியா இல்லைன்னா, ‘தியேட்டர்’ல தொடர முடியாது. சினிமா, இயக்குநர்கள் மீடியம். அங்க ஒரு நடிகனோட நடிப்பு ஒரு ஷாட்ல சரியில்லைனா, பின்னணி இசையை வச்சு அதை சரிபண்ணிட முடியும். ‘தியேட்டர்’ல அது முடியாது. அதனால அதுதான் திறமையை வளர்க்கிற நடிகனின் மீடியம்.

தமிழ்ப் படங்களை கவனிக்கிறீங்களா?

கண்டிப்பா. ஒரு நடிகனா அக்கம் பக்கம் கவனிக்கிறது என் வேலை. தமிழ், மலையாளம், கன்னடப் படங்களைத் தொடர்ந்து பார்க்கிறேன். என் விருப்பப் பட்டியல்ல இயக்குநர் வெற்றிமாறன் இருக்கார். நான் கமர்ஷியல் படங்கள் அதிகமா பண்றதில்லை. குறைவாகத்தான் பண்றேன். வெற்றிமாறன் மாதிரி திறமையான இயக்குநர்களை நான் தனிப்பட்ட முறையில் கொண்டாடுறேன். ஏன்னா, தரமான படத்தைக் கொடுக்கிறார் அப்படிங்கறதுக்காக மட்டும் இல்லை. அவர் எல்லோருக்குமான படங்களை எடுக்கிறார். அவர் படங்கள் கமிர்ஷியலாகவும் வெற்றி பெறுது.

சீனியர் நடிகரான நாசரோட நடிச்ச அனுபவம் எப்படி இருக்கு?

அவர் நடிப்புக்கு நான் ரசிகன். அவர் நடிச்ச பல படங்களை பார்த்திருக்கேன். சாச்சி 420 (தமிழில் அவ்வை சண்முகி) படத்துல அவர் நடிப்பை பார்த்து ஆச்சரியப்பட்டேன். அவரை முதன் முதலா சந்திச்சதும் அதை அவர்கிட்ட சொல்லியிருக்கேன். அவருக்கும் ஓம் புரிக்கும் இடையிலான காட்சிகள் அந்தப் படத்துல ரொம்ப ரசிக்கும் படியா இருக்கும். என் காலத்து நடிகர்கள் நாசர், கமல்ஹாசன், நஸீர் சார், ஓம்பூரி போன்றோர் நடிப்பை பார்த்துதான் வளர்ந்தோம். அப்படி வியந்த நாசர் சாரோட இப்ப சேர்ந்து நடிக்கறது மகிழ்ச்சியா இருக்கு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE