அயலான் Review: நேர்த்தியான கிராபிக்ஸ் உடன் ‘நிறைவு’ தந்ததா ஏலியன் கதைக்களம்?

By செய்திப்பிரிவு

தமிழ் சினிமா அதிகளவில் கையில் எடுக்காத ஜானர் என்றால், அது சயின்ஸ் ஃபிக்‌ஷதான். அந்தக் குறையை போக்கும் வகையில் 2015-ஆம் ஆண்டு ஒரு முழுமையான சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமாக வெளியானது ‘இன்று நேற்று நாளை’. காலப் பயணத்தை எளிய ரசிகனுக்கும் புரியும் வகையில் மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட அந்தப் படம் வெளியாகி சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு தனது இரண்டாவது படத்துடன் வந்துள்ளார் இயக்குநர் ரவிகுமார். இந்த நீண்ட காத்திருப்புக்கான பலனை ‘அயலான்’ அறுவடை செய்ததா என்பதை பார்ப்போம்.

விண்வெளியில் இருந்து பூமியை வந்து தாக்கும் ஒரு விண்கல்லில் இருந்து சிதறிய ‘ஸ்பார்க்’ என்ற ஒரு வஸ்து வில்லனின் கையில் கிடைக்கிறது. அதைக் கொண்டு பூமியின் மையப்பகுதி வரை தோண்டி, அதில் கிடைக்கும் வளங்களை அபகரிப்பதே வில்லனின் நோக்கம். இன்னொரு பக்கம், கிராமத்தில் தாயுடன் விவசாயம் செய்து வரும் நாயகன் தமிழ் (சிவகார்த்திகேயன்) சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் தீவிர அக்கறை கொண்டவர். பிழைப்பு தேடி சென்னை வரும் அவர், பிறந்தநாள் சர்ப்ரைஸ் பார்ட்டிகள் ஏற்பாடு செய்யும் கருணாகரன், யோகிபாபு டீமுடன் சேர்ந்து கொள்கிறார்.

பூமியில் இருக்கும் ஸ்பார்க் என்ற வஸ்துவை தேடி வேற்று கிரகத்தில் இருந்து வரும் ஒரு ஏலியன், அதனை எடுக்க வில்லனின் இடத்துக்கு செல்லும்போது, வில்லனின் ஆட்களால் தாக்கப்பட்டு அவர்களிடம் தனது விண்கலத்தையும் இழக்கிறது. இதன்பிறகு சிவகார்த்திகேயனை சந்திக்கும் ஏலியன், அவருடன் சேர்ந்து வில்லனின் நோக்கத்தை முறியடித்ததா? ஏலியனின் விண்கலம் மீண்டும் கிடைத்ததா என்பதே ‘அயலான்’ சொல்லும் திரைக்கதை.

இந்தப் படம் 2017-ஆம் ஆண்டு வாக்கில் தொடங்கப்பட்டது. கிராபிக்ஸ் தாமதம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களில் இருந்து மீண்டு ஒரு வழியாக இப்போது வெளியாகியுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் இயக்குநர், இப்படத்தை விட்டுவிட்டு வேறு படத்தில் இறங்கவில்லை. முழுமூச்சாக இந்தப் படத்தை திரைக்கு கொண்டு வரவேண்டும் என்று படக்குழு தீவிரமாக உழைத்ததன் விளைவு, தொழில்நுட்ப ரீதியாக தரமான ஒரு படமாக ‘அயலான்’ வந்துள்ளது.

தமிழில் இதுவரை பார்த்திராத அளவு கிராபிக்ஸ் காட்சிகளில் அத்தனை நேர்த்தி. குறிப்பாக, ஏலியனின் உடல் பாகங்கள் தொடங்கி அதன் அசைவுகள், உடல்மொழி வரை துல்லியமாக உருவாக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பக் குழுவினருக்கு ஸ்பெஷல் பாராட்டுகள். வழக்கமாக இந்திய சினிமாக்களில் கிராபிக்ஸ் சொதப்ப காரணம், அதன் லைட்டிங்கில் கவனம் செலுத்தாததுதான் என்று கூறப்படுவதுண்டு. ஆனால் இதில் படம் முழுக்க அப்படியான குறை எதுவும் இல்லாமல் துல்லியமான கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது சிறப்பு. ஏலியனும் கியூட்டாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் குழந்தைகளை கவர வாய்ப்புள்ளது.

படம் தொடங்கி முதல் 30 நிமிடங்கள், விவசாயம், கார்ப்பரேட் வில்லன், தமிழ் சினிமாவின் டிபிக்கல் ஹீரோயின் என அதே புளித்துப் போன க்ளிஷே காட்சிகள். சுற்றுச்சூழல் ஆர்வலராக இருக்கும் ஹீரோ, பிழைப்பு தேடி சென்னை வருகிறார். அங்கு வரும் ஏலியனுக்கும் இவருக்குமான நட்பு எப்படி ஏற்படுகிறது என்பதை சொல்ல ஏன் இவ்வளவு இழுபறி என்று தெரியவில்லை. சென்னையில் சிவகார்த்திகேயன் ஏலியனை சந்தித்த பிறகு படம் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. அதனைத் தொடர்ந்து வரும் காட்சிகள், குறிப்பாக யோகிபாபு - கருணாகரன் கூட்டணி ஏலியனை முதன்முறையாக சந்திக்கும் காட்சிகள் தொடங்கி இடைவேளை வரை வரும் காட்சிகள் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன.

இடைவேளைக்குப் பின்பு, அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில காட்சிகள் கைகொடுத்திருந்தாலும், க்ளைமாக்ஸை நோக்கி நகரும் காட்சிகள் உள்ளிட்ட பல காட்சிகள் அழுத்தமாக இல்லை. அதேபோல, படத்தில் ஏலியன் தொடர்பான காட்சிகளில் கிராபிக்ஸ் தவிர்த்து புதுமையாகவோ, புத்திசாலித்தனமாகவோ அந்த அம்சமும் இடம்பெறாதது குறை. சிவகார்த்திகேயன் - ஏலியன் இடையிலான எமோஷனல் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். வில்லனின் கதாபாத்திரமும் வலுவாக வடிவமைக்கப்படாததால் ஹீரோ - வில்லன் - ஏலியன் மோதல் காட்சிகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

சிவகார்த்திகேயன் வழக்கமாக தனக்கு எது வருமோ அதை குறையில்லாமல் செய்திருக்கிறார். முதல் பாதியில் வரும் யோகிபாபு - கருணாகரன் கூட்டணியின் நகைச்சுவை காட்சிகள் படத்தை கலகலப்பாக கொண்டு செல்ல உதவுகின்றன. வழக்கம்போல கமர்ஷியல் தமிழ் படத்தில் ஹீரோயினுக்கு என்ன வேலையோ அதேதான் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு. படம் முழுக்க ஹீரோவுக்கு துணையாக வந்து செல்வதை தவிர உருப்படியான வேலை எதுவும் செய்யவில்லை.

வில்லனாக வரும் ஷரத் கெல்கர் பளபள ஹேர்ஸ்டைலுடன் வழக்கமான கார்ப்பரேட் வில்லனாக வந்து செல்கிறார். வில்லன் கைகாட்டுபவர்களை கொன்று கொண்டே இருக்கும் கேரக்டர் இஷா கோபிகருக்கு. ஒரு டயலாக் கூட இல்லாத பரிதாபமான கதாபாத்திரம். சித்தார்த்தின் குரல் ஏலியனுக்கு சிறப்பாக பொருந்துகிறது.

முன்பே குறிப்பிட்டதைப் போல தரமான கிராபிக்ஸ் இப்படத்தின் பெரும் பலம். அதனை படம் முழுக்க கைகொடுத்து தூக்கி நிறுத்துகிறது நீரவ் ஷாவின் சிறப்பான ஒளிப்பதிவு. ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையில் குறிப்பிட்டுப் பாராட்டும்படி எதுவும் இல்லை. பாடல்கள் ஒன்றுகூட நன்றாக இருக்கக் கூடாது என்பதற்காக கடுமையாக உழைத்திருக்கிறார். வில்லனின் ஆய்வகம், கருணாகரனின் வீடு / ஆபீஸ், ஏலியன் விண்கலம் ஆகியவற்றில் கலை இயக்குநர் முத்துராஜின் உழைப்பு தெரிகிறது.

சயின்ஸ் பிக்‌ஷன் என்றதும் புதுமையான, ஆழமான விஷயங்கள் ஏதேனும் இருக்கும் என்று எதிர்பார்த்துச் சென்றால் ஏமாற்றமே கிடைக்கும். ஆனால், ஒரு பொழுதுபோக்குப் படமாக எதிர்பார்த்து செல்வோர் குடும்பத்துடன் ஜாலியாக ‘அயலானை’ பார்த்து ரசித்துவிட்டு வரலாம். படத்தின் கிராபிக்ஸின் தரத்துக்கு சமரசமில்லாத உழைப்பை வழங்கிய படக்குழு திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் ஒரு தரமான கமர்ஷியல் படைப்பாக வந்திருப்பான் ‘அயலான்’.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE