பணத்தோட்டம்: எம்.ஜி.ஆருடன் நாகேஷ் சேர்ந்து நடித்த முதல் படம்

By செய்திப்பிரிவு

சிவாஜி படங்களைத் தயாரித்து வந்த சரவணா பிலிம்ஸ் ஜி.என்.வேலுமணி, எம்.ஜி.ஆர் நடிப்பில் தயாரித்த படம், 'பணத்தோட்டம். கே.சங்கர் இயக்கிய இந்தப் படத்தில் சரோஜாதேவி கதாநாயகியாக நடித்தார். எஸ்.வி.சுப்பையா, நம்பியார், ஷீலா, அசோகன், நாகேஷ் உட்பட பலர் நடித்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை அமைத்தனர். கண்ணதாசன் பாடல்களை எழுதியிருந்தார்.

'பேசுவது கிளியா? இல்லை பெண்ணரசி மொழியா', 'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே', 'ஜவ்வாது மேடையிட்டு சர்க்கரையில் பந்தலிட்டு’, ‘ஒருநாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை’ ஆகிய பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. ‘ஒருவர் ஒருவராய் பிறந்தோம்’ பாடலில் வெஸ்டன் ஸ்டைலில் எம்.ஜி.ஆர் இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டு நடனம் ஆடியிருப்பார். அப்போது இந்தப் பாடலும் நடனமும் வெகுவாக ரசிக்கப்பட்டது.

இதன் கதையைப் பிரபல எழுத்தாளர் பி.எஸ்.ராமையா எழுதியிருந்தார். திரைக்கதை, வசனத்தை பாசுமணி எழுதியிருந்தார். கள்ளநோட்டு கோஷ்டியால் தவறாகச் சிறை செல்லும் செல்வம், தான் நிரபராதி என்பதை நிரூபிக்க அங்கிருந்து தப்பிக்கிறார். அவருக்குப் பணக்காரர் மகள் அடைக்கலம் கொடுக்கிறார். ஒரு கட்டத்தில் செல்வத்தின் மீது அவர் தாயே சந்தேகப்பட , உண்மைக் குற்றவாளியை அவர் எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்பது கதை.

இதன் கிளைமாக்ஸ் காட்சியை, முதல் நாள் காலை 7 மணிக்குத் தொடங்கி மறுநாள் இரவு 7 மணி வரை தொடர்ச்சியாக எடுத்தார்கள். சி.என்.அண்ணாதுரை எழுதிய ஒரு புத்தகத்தின் பெயர் பணத்தோட்டம். அதையே இந்தப் படத்தின் டைட்டிலாக்கி இருந்தனர். நாகேஷ், எம்.ஜி.ஆருடன்நடித்த முதல் படம் இதுதான். ஆனால்இதில் இருவருக்கும் சேர்ந்து காட்சிகள்கிடையாது. இந்தப் படத்துக்காக வாங்கிய சம்பளத்தில் தான் நாகேஷ், முதன்முதலாக செகண்ட் ஹாண்ட்கார் வாங்கியதாகச் சொல்வார்கள்.

1963-ம் ஆண்டு இதே தேதியில் வெளியான இந்தப் படத்தையும் சிவாஜியின் ‘ஆலயமணி’ படத்தையும் ஒரே நேரத்தில் இயக்கினார் கே.சங்கர். 2 படத்துக்கும் நாயகி சரோஜாதேவி என்பதால் பிரச்சினை இன்றிநடந்தது படப்பிடிப்பு. சில நாட்களில் காலையில் ‘ஆலயமணி’, மதியத்துக்குப் பிறகு பணத்தோட்டம் படப்பிடிப்பு நடந்தது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE