“இந்தி படிக்கக் கூடாது என சொல்லவில்லை; திணிக்க வேண்டாம் என சொன்னார்கள்” - விஜய்சேதுபதி 

By செய்திப்பிரிவு

சென்னை: “தமிழகத்தில் இந்தி படிக்கக் கூடாது என யாரும் சொல்லவில்லை. இந்தியை திணிக்கக் கூடாது என்று தான் சொன்னார்கள். இங்கே எல்லோரும் படித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். யாரும் தடுக்கவில்லை” என்று விஜய் சேதுபதி பேசியுள்ளார்.

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கத்ரீனா ஃகைஃப் நடிப்பில் ஜன.12 திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’. இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஜய்சேதுபதி, “96 படம் பார்த்துவிட்டு இயக்குநர் எனக்கு மெசேஜ் அனுப்பினார். அரை மணிநேரம் பேசினோம். அவருடைய முதல் படம் என்னுடைய பிறந்தநாள் அன்று வெளியானது. அப்போது என் நண்பர் ஒருவர் என்னிடம், “ராம்கோபால் வர்மாவின் உதவி இயக்குநர், ஸ்ரீராம் ராகவன் படம் இயக்கியிருக்கிறார்” என கூறினார். அவரின் முதல் படம் எனக்கு மிகவும் பிடித்தது. ஒருநாள் இவரிடம் பணியாற்ற வேண்டும் என ஆசையிருந்தது.

அவர் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தின் கதை சொன்னார் பிடித்திருந்தது. நடிகர்களுக்கு சுதந்திரம் கொடுப்பார் ஸ்ரீராம் ராகவன். அவர் எப்படி வேலை வாங்குவார் என்பதே தெரியாது. அவருடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது. கத்ரீனா கைஃபை நேரில் பார்த்து எனக்கு ஒரு ஆச்சரியம். நம்மை விட சீனியர் நடிகர் என்ற பயம் எனக்குள் இருந்தது. அவரிடம் எந்த தலைக்கணம் இல்லை. அவருடன் பணியாற்றியது மிகவும் கம்பர்டபிளாக இருந்தது. நாங்கள் எல்லோரும் படத்தைப்பார்த்துவிட்டோம். எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்களுக்கும் பிடிக்கும். ஃபர்சியில் நடிக்கும்போது இந்தியில் பேசுவது கடினமாக இருந்தது. இப்போது பழகிவிட்டது.” என்றார்.

மேலும், செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த விஜய்சேதுபதி, “ஆமிர்கான் வந்தபோது கூட இந்தி தொடர்பான கேள்வியை கேட்டீர்கள். அந்த கேள்வி எதற்கு என்பது எனக்குப் புரியவில்லை. இப்போது என்னிடமும் கேட்கிறீர்கள். தமிழகத்தில் இந்தி படிக்கக் கூடாது என யாரும் சொல்லவில்லை. இந்தியை திணிக்கக் கூடாது என்று தான் சொன்னார்கள். உங்களின் கேள்வியே தவறானது. இங்கே எல்லோரும் படித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். யாரும் தடுக்கவில்லை” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE