பிரம்மரிஷி விஸ்வாமித்ரா: ரிலீஸுக்கு பிறகு காமெடி சேர்த்து ரீ-ரிலீஸ் ஆன படம்!

By செய்திப்பிரிவு

விஸ்வாமித்திரரின் கதையை கொண்டு இந்திய சினிமாவில் பல திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. 1921-ம் ஆண்டு காந்திலால் ரத்தோட் என்பவர் ‘விஸ்வாமித்ரா மேனகா’ என்ற மவுனப் படத்தை இயக்கினார். பிறகு 1952-ம் ஆண்டு வங்க மொழியில் ‘பானி பெர்மா’ என்ற பெயரில் இதே கதை உருவானது. அதே ஆண்டு, பாபுராவ் பெயின்டர் என்பவரால் இந்தியில் உருவாக்கப்பட்டது. வி.சாந்தாராமும் இதே கதையை இரண்டு முறை படமாக்கி இருக்கிறார்.

தெலுங்கில் ‘பிரம்மரிஷி விஸ்வாமித்ரா’ என்ற பெயரில் உருவான படத்தில் என்.டி.ராமராவும் தமிழில், ‘ராஜரிஷி’ படத்தில் சிவாஜி கணேசனும் விஸ்வாமித்ரராக நடித்திருக்கின்றனர்.

1948-ம் ஆண்டு உருவான ‘பிரம்மரிஷி விஸ்வாமித்ரா’-வில் விஸ்வாமித்ரராக நடித்தது கே.ஆர்.ராம்சிங். அவரை மயக்கும் மேனகையாக டி.ஆர்.ராஜகுமாரி நடித்தார். (இவரை ‘கொல்லும் விழியாள்’ என்று வர்ணித்திருக்கிறார், கல்கி கிருஷ்ணமூர்த்தி).

கடும் தவத்தால் மிகவும் சக்தி வாய்ந்தவராக மாறும் விஸ்வாமித்திரரை நினைத்து அச்சம் கொள்ளும் இந்திரன், அவரை மயக்க மேனகையை அனுப்புகிறார். நினைத்தபடி தவம் கலைகிறது. அவர்களுக்கு சகுந்தலை பிறக்கிறார். ஆனால், தவத்தைக் கலைத்த மேனகையை சபிக்கிறார் விஸ்வாமித்திரர் என்று கதை செல்லும்.

சில திரைப்படங்கள் வித்தியாசமான முறையில் சாதனைப் படைக்கும். அப்படியொரு சாதனை, ‘பிரம்மரிஷி விஸ்வாமித்ரா’வுக்கும் நடந்திருக்கிறது. படத்தை முதலில் வெளியிட்டு விட்டார்கள். ஆனால், எதிர்பார்த்த வரவேற்பில்லை. உடனடியாக அப்போதைய ஹிட் நகைச்சுவை ஜோடியான என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் நடிப்பில் காமெடி காட்சிகளைச் சேர்த்து படத்தை மீண்டும் வெளியிட்டனர். பிறகு படம் வெற்றி பெற்றது.

இந்தப் படத்தில் டி.ஆர்.ராஜகுமாரி, கே.ஆர்.ராம்சிங், என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், டி.வி.சேதுராமன், டி.இ.கிருஷ்ணமாச்சாரி, என்.ஆர்.நளினி கோசல்ராம் என பலர் நடித்திருந்தனர். என்.ஜெகந்நாத் இயக்கி இருந்தார். பிரபல நடிகர் ரஞ்சனின் சகோதரர் ரீமா இசையமைத்தார். பாடல்கள் பாபநாசம் சிவன். ராஜகுமாரி பாடிய ‘நாதத்திலே ஒன்று கலந்தது உலகம்’ ஹிட் பாடல். 1948-ம் ஆண்டு இதே தேதியில் வெளியானது இந்தப் படம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE