செங்கல்பட்டு அருகே ரூ.3 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கொடுத்த நடிகர் பாலா

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு: சின்னதிரை நடிகர் பாலா செங்கல்பட்டு அருகே உள்ள கிராமத்துக்கு ரூ.3 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துக் கொடுத்துள்ளார். மனு கொடுத்த 10 நாளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து கொடுத்த அவருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

சின்னத்திரை மூலம் பிரபலமான நடிகர் பாலா தன்னுடைய சொந்த செலவில் மலைகிராம மக்களுக்கு 4 இலவச ஆம்புலன்ஸ்களை வாங்கி கொடுத்தார். சமீபத்தில் மிக்ஜம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களை நேரில் சந்தித்து சுமாா் 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 கொடுத்து உதவினார். இந்நிலையில் தற்போது செங்கல்பட்டு மாவட்டம் கோட்டை கயப்பாக்கம் என்ற கிராமத்தி குடிநீரில் சுண்ணாம்பு கலந்து வருவதால், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து தருமாறு பாலாவிடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து நடிகர் பாலா ரூ.3 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேசுகையில், “என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். அண்மையில் வெள்ள பாதிப்புகளுக்காக என்னிடம் இருந்த ரு.5 லட்சத்தை செலவு செய்தேன். அதனைப்பார்த்துவிட்டு இந்த ஊரின் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராஜேஷ் எங்கள் ஊரிலும் ஒரு பிரச்சினை உள்ளது அதனை சரி செய்து தரமுடியுமா என கேட்டிருந்தார். என்னையும் மதித்து மனு எழுதி ஊர்மக்கள் கையொப்பமிட்டு அனுப்பியிருந்தார்கள்.

அதில் இங்கிருக்கும் தண்ணீரை குடிப்பதால் கிட்னி தொடர்பான பிரச்சினைகள் வருவதாக குறிப்பிட்டிருந்தனர். எத்தனை நாட்களுக்குள் முடியும் என யோசித்தேன். மேலும் வீடியோ ஒன்றையும் அனுப்பினர். தண்ணீரை வடிகட்டும்போது அதில் சுண்ணாம்பு தேங்கியிருந்து. அதனைப்பார்த்து எப்படியாவது குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என முடிவெடுத்து பணம் சேர்த்து அமைத்துக்கொடுத்தேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE