அன்பு, பூரிப்பு, செல்ஃபி... விஜய் வழங்கிய நிவாரண உதவி நிகழ்வில் சில தருணங்கள்!

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வு பாளையங்கோட்டை கேடிசி நகரிலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் பங்கேற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

நிவாரண உதவிகளை வழங்குவதற்காக இரு மாவட்டங்களில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் 1,500 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அவர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். அவர்களுக்கு நடிகர் விஜய் நிவாரண உதவிகளை வழங்கினார்.

தூத்துக்குடி வெள்ளப்பெருக்கின்போது பாத்திமா நகரை சேர்ந்த ராபின் சிங் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது குடும்பத்தினரை போனில் தொடர்பு கொண்டு ஏற்கனவே விஜய் ஆறுதல் தெரிவித்திருந்தார். ராபின் சிங் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதியை விஜய் வழங்கினார்.

இதுபோல் வீடுகளை இழந்த வள்ளி, இசக்கி ஆகியோருக்கு தலா ரூ.50 ஆயிரம், சங்கரன் என்பவருக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் வீடுகள் சேதம் அடைந்ததில் பாதிக்கப்பட்டுள்ள 30 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் ரொக்கத்தையும் விஜய் வழங்கினார்.

மேலும், 5 கிலோ அரிசி, சர்க்கரை, ரவை, கோதுமை, சேமியா, உப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் வேட்டி, சட்டை, துண்டு ஆகியவற்றை 1,500 பேருக்கு விஜய் வழங்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு வடை, பாயாசத்துடன் விருந்தும் வழங்கப்பட்டன.

நிவாரணப் பொருட்கள் வழங்கியபோது, மூதாட்டி ஒருவர் நடிகர் விஜயின் கன்னத்தை தொட்டு அவரை வாழ்த்தியதோடு சிரித்த முகத்தோடு நிவாரண பொருட்களை வாங்கினார். நிவாரண பொருட்களின் எடை அதிகம் இருந்ததால் மூதாட்டி தடுமாறினார். இதையடுத்து, மேடையில் இருந்த ஒருவர் மூதாட்டியின் கையில் இருந்த நிவாரண பொருட்களை வாங்கி, பின் அவரை அங்கிருந்து அழைத்துச் செல்ல முயன்றார். அப்போது டென்ஷனான புஸ்ஸி ஆனந்த், அந்த நபரை நோக்கி ‘ஏய்...’ என கடிந்துகொண்டார். உடனே சுதாரித்துக்கொண்ட விஜய், புஸ்ஸி ஆனந்தை நோக்கி அமைதி என்றபடி கைகளில் சைகை காட்டி அந்த சூழலை நிதானமாக கையாண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அடுத்து பெண் ஒருவர் நிவாரண பொருட்கள் வாங்கும்போது தானாக விஜய்யின் கையை எடுத்து கழுத்தில் போட்டு போஸ் கொடுத்து போட்டோ எடுத்துக்கொண்டார். பின்னர் விஜய்யின் அன்போடு கன்னத்தை கிள்ளிவிட்டு, நிவாரண பொருட்களை வாங்கிச் சென்றார்.

இளம் பெண் ஒருவர் விஜய் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். தொடர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டார். அதே வேகத்தில் அங்கிருந்து கிளம்பியவரை பார்த்து, “நிவாரண பொருள் வாங்கவில்லையா” என விஜய் கேட்க, அந்த மாணவி, “செல்ஃபி எடுக்கவே வந்தேன்” என்பது போல சொல்லிவிட்டு கிளம்பினார்.

தொடர்ந்து நேரம் அதிகமானதாலும், அதிகமானோர் காத்துக்கொண்டிருந்ததாலும், மேடையில் பேசிய விஜய், “நம்ம தோழர்களையும் உங்களிடம் கொடுக்க சொல்லவா? சீக்கிரம் முடிஞ்சுடும் அதுக்காக சொல்றேன். தப்பா எடுத்துக்காதீங்க. ரொம்ப நேரமாக வெயிட் பண்றீங்க அதுக்கு சொல்றேன்” என்றார். தொடர்ந்து நிகழ்வுக்கு வந்தவர்களின் போனை வாங்கிய விஜய் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியை முடித்து கொண்டு மண்டபத்திலிருந்து விஜய் கிளம்பியபோது புகைப்படம் எடுக்க பலர் முண்டியடித்தனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE