’பசிப்பிணி தீர்த்த பொன்மன வள்ளல்’ - விஜயகாந்த் நிகழ்த்தி காட்டிய சமபந்தி சமத்துவத்துக்கு பின்னணி!

By செய்திப்பிரிவு

சென்னை: திரையுலகம் மட்டுமல்லாது தமிழக அரசியல் வரலாற்றிலும் தனக்கென தனி இடத்தைப் பிடித்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (டிச.28) உயிரிழந்துள்ளார். அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல்களையும் அஞ்சலியையும் செலுத்தி வருகின்றனர்.

பல விஷயங்களில் விஜயகாந்த் பாராட்டப்பட்டாலும், பலரும் குறிப்பிட்டு பாராட்டிய விஷயம், “பசியாற்றிய வள்ளல்” என்பது. அனைவருக்கும் பாகுபாடின்றி உணவளித்த அவரது ஈகை குணமே இப்படி பாராட்டப்பட முக்கிய காரணம். நடிகராக கோலோச்சிய காலத்தில் விஜயகாந்தின் அலுவலகம் தி.நகர் ராஜாபாதர் சாலையில் இருந்தது, அப்போது. அவரின் ராவுத்தர் பிலிம்ஸ் அலுவலகமும் அதுதான். அங்கு மதிய வேளையில் யார் சென்றாலும் சாப்பிடலாம் என்ற நிலை இருந்தது. சாப்பாடும் சாதாரண சாப்பாடு இல்லை. விஜயகாந்த், ராவுத்தர் சாப்பிடும் அதே உணவுதான் அனைவருக்கும். அந்தப் பகுதி ஆட்டோ டிரைவர்கள், உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட திரைத்துறையினர் அங்கு சாப்பிடுவதற்காகவே செல்வார்கள்.

சினிமா துறையினர் மட்டுமன்றி பொதுமக்கள், தொழிலாளர்கள் என அனைவருக்கும் அவரது அலுவலகத்தில் நாள்தோறும் சைவ - அசைவ உணவுகள் அளவின்றி பரிமாறப்பட்டன. படப்பிடிப்பின் போது தனக்கு வழங்கப்படும் உயர் தர உணவுகள் அனைத்துமே கடைநிலை தொழிலாளிக்கும் வழங்கப்பட வேண்டும் என்று உறுதியாக இருந்தவர் விஜயகாந்த். இதற்கு தயாரிப்பாளர்கள் சம்மதிக்காத போது தனது ஊதியத்தில் பிடித்தம் செய்துகொண்டு ஊழியர்களுக்கு தரமான உணவு அளிக்க வேண்டும் என்பாராம்.

படப்பிடிப்பு தளத்தில் அனைத்து தரப்புக்கும் ஒரே உணவு என்பது விஜயகாந்த் தமிழ் சினிமாவில் நிகழ்த்தி காட்டிய சமபந்தி சமத்துவம். விஜயகாந்த் வீட்டில் வழங்கப்படும் உணவு என்பது விருகம்பாக்கம் பக்கத்தில் வாய்ப்பு தேடி அலையும் உதவி இயக்குநர்கள் பலருக்கும் கிடைத்த வரப் பிரசாதம். இன்று தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக இருக்கும் இயக்குநர்கள் பலரும் விஜயகாந்த் வீட்டில் உணவு உண்டவர்கள். விஜயகாந்தின் இந்த நல்ல மனதை வெளிப்படுத்தும் நோக்கில்தான் அவரை பற்றி நெகிழும் பலரும் ‘பசிப்பிணி தீர்த்த பொன்மன வள்ளல்’ என அவரை பாராட்டுகின்றனர்.

மற்றவர்களின் பசியாற்ற காரணம்?: இப்படியான சமமான உணவு வழங்குவதை விஜயகாந்த் தொடர்ந்து செய்ததன் பின்னணியில் அவருக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் காரணமாக அமைந்துள்ளது.

கதாநாயகனாக இரண்டாவது படம் ‘அகல் விளக்கு’. இந்த படத்துக்கு பின் ஒரு படத்தின் படப்பிடிப்பின்போது, மேக்கப் எல்லாம் போட்டுவிட்டு அதிகாலை முதலே ஹீரோயினுக்காக காத்திருந்த விஜயகாந்த், காலை உணவு சாப்பிட எழுந்தபோது, அவரை தடுத்த படக்குழுவினர் மதியம் வரை காத்திருக்க வைத்துவிட்டனர். இதன் காரணமாகவே படப்பிடிப்பில் யாரும் பசியுடன் இருக்கக் கூடாது என்றும், தான் சாப்பிடும் அதே உணவையே கடைநிலை பணியாளர்கள் வரை சாப்பிட வேண்டும் என்கிற முறையையும் கொண்டு வந்ததாக பின்னாட்களில் பேட்டி ஒன்றில் விஜயகாந்த் தெரிவித்தார். சில ஆண்டுகளுக்கு முன் ஒருபேட்டியில் இதனை வெளிப்படுத்தியுள்ளார் விஜயகாந்த். அது தற்போது வைரலாகி வருகிறது.

விஜயகாந்தின் ஈகை குணத்துக்கு அவரிடம் இருந்த பணம் அல்ல, அவர் தீவிரமாக பின்பற்றிய எம்ஜிஆரே முக்கிய காரணம். சின்ன வயதிலிருந்தே எம்ஜிஆரின் தீவிர ரசிகரான விஜயகாந்த் அவரைப் போலவே நடிகராக வேண்டும் என்பது மட்டுமில்லாமல், அவரை போலவே ஈகை குணத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காகவே தன்னிடம் உதவி நாடி வருபவர்களுக்கு தவறாமல் உதவுவதை வாடிக்கையாகி கொண்டுள்ளார்.

எம்ஜிஆரின் மறைவுக்கு அவற்றின் மனைவி ஜானகி அம்மையாருடன் நெருங்கிப் பழகியது விஜயகாந்தின் குடும்பம். அந்த சமயத்தில் ஜானகி அம்மையார் விஜயகாந்துக்கு கொடுத்த அறிவுரை, "தானத்திலே சிறந்தது அன்னதானம். ஏழை எளியவர்களுக்கு நிறைய உதவுங்கள். கொடுப்பதால் நாம் குறைந்து போய்விடமாட்டோம்" என்பதுதான். இதை தன் வாழ்நாள் முழுவதும் பின்பற்றி மறைந்துள்ளார் கேப்டன் விஜயகாந்த்.

கருப்பு எம்ஜிஆர் பட்டத்தை ரசிக்காத விஜயகாந்த்: இந்து ஆங்கிலத்துக்கு பத்திரிகையாளர் செய்யாறு பாலு அளித்த பேட்டியில், ‘‘ரசிகர்களும் ஆதரவாளர்களும் தன்னை கருப்பு எம்ஜிஆர் என்று அழைத்தாலும், விஜயகாந்த் அந்த பட்டத்தை ரசிக்கவில்லை. கருணாநிதியால் அவருக்கு ‘புரட்சி கலைஞர்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. விஜயகாந்த் திமுக தலைவர் கருணாநிதியுடன் நல்ல உறவைப் பேணியதுடன், அவரை தனது வழிகாட்டியாக கருதினார்” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

22 mins ago

சினிமா

52 mins ago

சினிமா

58 mins ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்