தொடர் தோல்விகள்... பிரபாஸுக்கு கைகொடுக்குமா ‘சலார்’?

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: ‘பாகுபலி 2’ படத்துக்குப் பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நடிகர் பிரபாஸை பிரசாந்த் நீலினின் ‘சலார்’ படம் மீட்டெடுக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘பாகுபலி: தி பிகினிங்’ ரூ.650 கோடி வரை வசூலித்து பெரும் வரவேற்பை பெற்றது. அதையடுத்து 2017-ம் ஆண்டு வெளியான இதன் இரண்டாம் பாகம் ரூ.1800 கோடியை வசூலித்து இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தது. அவ்வளவுதான். அதற்கு பின்னர் பிரபாஸ் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் சோபிக்கவில்லை. 2019-ம் ஆண்டு சுஜித் இயக்கத்தில் ‘சாஹோ’ எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகான பிரபாஸின் படம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது.

அடுத்து 2022-ல் ராதா கிருஷ்ணகுமாரின் ‘ராதே ஷ்யாம்’ படம் வெளியானது. ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.200 கோடியைக்கூட வசூலிக்காமல் தோல்வியைத் தழுவியது. அடுத்து வந்த ‘ஆதி புருஷ்’ ரிலீஸுக்கு முன்பே பல விமர்சனங்களை எதிரகொண்டது. ரிலீஸுக்குப் பின் அந்த விமர்சனங்கள் பன்மடங்கு கூடியது. சுவாரஸ்யமில்லாத திரைக்கதையால் ரூ.600 கோடி வரை செலவு செய்து எடுக்கப்பட்ட படம் ரூ.300 கோடி வசூலுடன் முடங்கி நஷ்டத்தை சந்தித்தது. இந்நிலையில்தான் ‘கேஜிஎஃப்’ புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ‘சலார்’ திரைப்படம் வரும் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஷாருக்கானின் ‘டன்கி’ படத்துடன் மோதுகிறது.

சோபிக்குமா சலார்? - இந்தப் படத்தின் ட்ரெய்லரை பொறுத்தவரை ‘கேஜிஎஃப்’ படத்தில் மற்றொரு வெர்ஷனாகத்தான் இதை பார்க்க முடிகிறது. அதற்கும், இந்தப் படத்துக்கும் தொடர்பில்லை என இயக்குநர் பிரசாந்த் நீல் கூறினாலும் ட்ரெய்லர் அப்படியில்லை. ‘கேஜிஎஃப்’ படத்தின் தாய் பாசத்தை வைத்து எமோஷனலாக ஸ்கோர் செய்த பிரசாந்த் நீல் இந்தப் படத்தில் அதனை நட்பாக மாற்றியிருக்கிறார். அதே சேம் கலர் டோன். அதே ராஜ்ஜியத்தை பிடிக்கும் கதை. ஒரு கட்டத்தில் நட்பு துரோகமாக மாறுவதை லீட் கொடுத்து இரண்டாம் பாகத்தை தொடங்கும் வாய்ப்பிருப்பதையும் ட்ரெய்லர் உணர்த்துகிறது. புதுமையில்லாத ஒரேமாதிரியான மேக்கிங், கதைக்களம் தொடர்ந்து கைக்கொடுக்குமா? என்பது கேள்விக்குறி.

காரணம் ‘கேஜிஎஃப்’ படத்துக்குப் பிறகு வந்த ‘கப்ஜா’ கன்னட படம் அதன் காப்பி என காட்டிக் கொடுத்துவிட்டது. தோல்வியைத் தழுவியது. தமிழில் வெளியான ‘மைக்கேல்’ அதே பாணியில் இருந்ததால் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் நகலுக்கும், அசலுக்கும் வித்திசாயம் உண்டு. அப்படிப்பார்த்தால் தன்னுடைய அசல் படத்தையே மீண்டும் நகலாக்க முயற்சித்திருக்கிறாரா பிரசாந்த் நீல் என்பதை பொறுத்திருந்ததான் பாரக்க வேண்டும். மேலும், ட்ரெய்லரில் ஈர்க்கும் பிரமாண்ட காட்சிகள் சிறிது நேரம் பார்வையாளர்களை தக்க வைக்கலாம். ஆனால் தாக்குப்பிடிக்க வைப்பது என்னமோ கதை தான். ‘சலார்’ பிரபாஸுக்கு வெற்றியைத் தேடித்தருமா என்பது 22-ம் தேதி தெரிந்துவிடும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE