தாயின் மடியில்: எம்.ஜி.ஆர், சரோஜாதேவியின் பொய்க்கால் குதிரை நடனம் 

By செய்திப்பிரிவு

தெலுங்கு, இந்தியில் பல படங்களை இயக்கி இருக்கிற, ஏ.சுப்பாராவ் தமிழிலும் சில படங்களை இயக்கி இருக்கிறார். அவர் எம்.ஜி.ஆர் நடிப்பில் இயக்கிய திரைப்படம், ‘தாயின் மடியில்’. அன்னை பிலிம்ஸ் சார்பில் கே.ஆர்.பாலன் தயாரித்த இந்தப் படத்தின் கதை, வசனத்தைச் சொர்ணம் எழுதினார். ஆர்.ஆர்.சந்திரன் ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்தில் சரோஜாதேவி, நம்பியார், எம்.ஆர்.ராதா, பண்டரிபாய், நாகேஷ், மனோரமா உட்பட பலர் நடித்தனர்.

எம்.ஜி.ஆர், சரோஜாதேவியின் பொய்க்கால் குதிரை நடனம்தாயின் மடியில்பிரபல குதிரை ஜாக்கியான ராஜா, அனாதை. அவருக்கும் தொழிலதிபர் பூபதி மகளுக்கும் காதல். இந்நிலையில் இறந்துவிட்டதாக நினைத்த தாய் உயிரோடு இருப்பது தெரிகிறது ராஜாவுக்கு. தொழிலதிபர் பூபதிதான் உன் தந்தை என்கிறார் தாய். ராஜாவுக்கு அதிர்ச்சி. பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.

எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைத்திருந்தார். கண்ணதாசன், வாலி பாடல்களை எழுதியிருந்தனர். ராஜாத்தி காத்திருந்தாள், பார்வையிலே பந்தல் கட்டி, பெண்ணே ஒன்று சொல்லவா, கள்ளிருக்கும் ரோஜா மலர், என்னைப் பார்த்து, தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை ஆகிய பாடல்கள் வரவேற்பைப் பெற்றன.

‘ராஜாத்தி காத்திருந்தாள்’ என்ற பாடலுக்கு எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் பொய்க்கால் குதிரை நடனம் ஆடியிருப்பார்கள். இந்த நடனம் அப்போது பேசப்பட்டது. அதேபோல படத்தில் எம்.ஜி.ஆருக்கான காஸ்ட்யூமும் ஸ்டைலாக வடிவமைக்கப்பட்டிருந்தது. வீல் சேரில் அமர்ந்தபடி எம்.ஜி.ஆரும் நம்பியாரும் மோதும் சண்டைக்காட்சியை ரசிகர்கள் அப்போது அதிகம் பாராட்டினார்கள்.

எம்.என்.நம்பியாரை விட வில்லனாக எம்.ஆர்.ராதா மிரட்டியிருப்பார். நாகேஷும் மனோரமாவும் காமெடி ஏரியாவை பார்த்துக்கொண்டார்கள். இந்தப் படம் வெளியான 26 நாட்களிலேயே ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படம் ரிலீஸ் ஆனதால் இந்தப் படத்தின் வெற்றிப் பாதிக்கப்பட்டது. 1964-ம் ஆண்டு இதே நாளில் வெளியானது இந்தப் படம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE