Baghdad Messi | Dir: Sahim Omam Kalifa | Belgium | 2023 | 88' | WC - Santham | 1.15 - ஈராக்கில் 2009 ஆண்டில் நடந்த போர் நிகழ்வை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம். போர் ஒரு பக்கம் மக்களை அச்சுறுத்திக்கொண்டிருந்தாலும் மகிழ்ச்சியில் திளைக்கும் சிறுவர்களின் உலகம் தனி உலகமாகவே இயங்குகிறது. தங்கள் கனவை நனவாக்க என்ன வழி என்று தான் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள். அதில் ஹமவ்தி 11 வயது சிறுவன் சர்வதேச கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் பொம்மையை வைத்துக்கொண்டு தானும் அந்த மாதிரி ஒரு நாள் வரப்போவதாக நினைத்து விளையாடிக் கொண்டிருக்கிறான். ஆனால் ஒருநாள் தெருமுனையில் துப்பாக்கிச்சூடு நிகழும்போது குறுக்கே ஓடிச்சென்று காலில் அடிபட்டு கீழே விழுகிறான். அவன் தனது ஒரு காலில் முழங்காலை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். என்றாலும் தனது விளையாட்டு வீரனாகும் கனவை அவன் இழக்க வில்லை.
அவனது தந்தை தீவிரவாதக் குழுக்களுடன் சில காரணங்களுக்காக தொடர்பில் இருக்கிறார். ஒருவிதமான குற்ற உணர்வுடன் தனது மகனின் கனவுகளை ஊக்குவிக்கிறார். போரும் அரசியலும் குடும்பம் நடுத்துவதற்கே போராடிக்கொண்டிருப்பதையும் அவன் உணராமலில்லை. எனவே தனது சிதைந்த கனவுகளுக்காகவும் அவன் போராட தொடங்குகிறான்.
My Neighbor Adolf (My Neighbor Adolf) | Dir: Leon Prudovsk | Israel, Poland, Colombia | 2022 | 96' | WC - Serene | 7.00 - இஸ்ரேல் இயக்குநர் லியோன் ப்ருடோவ்ஸ்கியின் சிறந்த நகைச்சுவைப்படம். கொலம்பியாவின் தொலைதூர கிராமப்புறங்களில் 60களில் நடக்கும் கதை. போலந்து நாட்டைச் சேர்ந்த வயதான யூதர் போல்ஸ்கி. அவர் கிராமத்தில் தனியே வசித்து வருகிறார். அவர் இயல்பாகவே எதையும் யாரையும் நம்பாதவர். கடுகடுவென ஆட்கள்மீது எரிச்சல்படுபவர். ஓய்வு நேரங்களில் தோட்டப் பராமரிப்பு மற்றும் செஸ் விளையாடுவதில் என்று தனது நேரத்தை செலவிடுகிறார். அவரது அண்டை வீட்டுக்காரர் ஒரு ஜெர்மனிக்காரர். அவர் பெயர் ஹெராங்.
போல்ஸ்கி இரண்டாம் உலகப் போரில் சிக்கி தப்பிப் பிழைத்தவர். அதனால் அவர் மனதில் எப்போதும் போர் பற்றிய அச்சம் இருந்துகொண்டே இருக்கிறது. இத்துடன் இப்படத்தில் சில வேடிக்கையான சம்பவங்களும் நடக்கின்றன. ஒரு நாள், அர்ஜென்டினாவில் மொசாட் சம்பந்தட்ட ஆட்கள் நாஜி குற்றவாளியான அடால்ஃப் இச்மேன் கடத்தப்படுகிறார். கடத்தப்படும் சிறிது நேரத்துக்குப் பிறகு, (நினைவிருக்கட்டும் இக்கதை 60களில் நடக்கிறது) போல்ஸ்கி மர்மமான வயதான ஜெர்மன் மனிதர் ஹெர்சாக் வசிக்கும் பக்கத்து வீட்டுக்குச் செல்கிறார்.
பக்கத்துவீட்டில் வசிக்கும் ஹெர்சாக் என்ற அந்த நபர் வேறு யாருமல்ல, அடோல்ஃப் ஹிட்லரே என்று போல்ஸ்கி சந்தேகிக்கத் தொடங்குகிறார், தன்னைத்தானே தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படும் ஹிட்லர்தான் தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டு தென் அமெரிக்காவிற்கு தப்பி ஓடிவந்துள்ளதாக எண்ணிக் கொள்கிறார். யாரும் அவர் கூறுவதை நம்பவில்லை என்றாலும், போல்ஸ்கி தான் நம்பியதை நிரூபிப்பதில் உறுதியாக இருக்கிறார், அதற்கான ஆதாரங்களை சேகரிப்பதற்காக ஹெர்சாக்குடன் நெருங்கி பழக முடிவு செய்கிறார். அதற்கப்புறம் நடப்பது எல்லாம் உச்சபட்ச காமெடிகள். கொலம்பியாவின் மலையழகுக் காட்சிகளும் தனித்தனி கல் வீடுகளும் வெகு அழகாக நம்மை கவரக்கூடியதாக இருக்கிறது ராடெக் லாட்சுக்கின் ஒளிப்பதிவு.
3. Lubo (Lubo) | Dir: Giorgio Diritti | Italy, Switerland | 2023 | 175' | WC - Seasons | 12.00 Noon - சுவிட்சர்லாந்து ஒரு அழகான நாடு. ஆனால் அந்த நாட்டையும் ஒரு அடக்கு முறை அரசாங்கம் ஆட்சி செய்திருக்கிறது என்பது கசப்பான ஒரு உண்மை. லுபா திரைப்படத்தின் கதைக்களன் 1939கள். ஒரு அரசாங்கம் பாரபட்சமான சட்டங்களும் அர்த்தப்பற்ற கொள்கைகளும் கொண்டிருந்தால் அதிகம் பாதிக்கப்படுவது கடைநிலை மக்கள்தான். ஒரு தெருக்கலைஞனான லுபோ மோசர் ராணுவ சேவைக்கு அவன் அழைக்கப்பட வேறு வழியின்றி அவன் செல்ல வேண்டிய நிர்பந்தம்.
உண்மையில் ஒரு தொல்குடி வம்சாவளியை அரசு பழிவாங்குகிறது. ராணுவத்தில் இருக்கும்போது அவனுக்கு தன் குடும்பத்தைப் பற்றி செய்தி கிடைக்கிறது. அரசாங்க கல்விக் கொள்கைகளினால் அவனது குழந்தைகளை போலீஸ் காவலில் எடுத்ததாகவும், அவர்களைத் தடுக்க முயன்ற ராணுவ வீரனின் மனைவி கொல்லப்பட்டதாகவும் தெரியவர துடித்துப் போகிறான்.... அவன் வாழ்க்கையில் திடீரென வீசிய அரசியல் சூறாவளியால் குடும்பம் நிலைகுலைகிறது. தெருக் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான கல்வி வழங்க வேண்டுமென அரசாங்கம் முடிவு செய்கிறது. லுபா வாழ்க்கையில் வீசும் சூறாவளியை அவன் அறச்சீற்றத்தோடு எதிர்கொள்கிறான்.
இத்திரைப்படம் வன்மங்கள், வன்முறைகள் என்ற தளத்தில் மட்டுமே இயங்கவில்லை. வாழ்வின் மிக சிறந்த கணங்களையும் நேசிப்புகளையும் அர்த்தப்படுத்தும் ரசிக்கத்தக்க காட்சிகளையும் கொண்டுள்ளது. அவ்வகையில் பிரான்ஸ் ரோகோவ்ஸ்கியின் நடிப்பில் நம் இதயத்தோடு நெருக்கமாக பேசுகிறது லுபா. அதுவே இப்படத்தை வேறுஒரு தளத்திற்கு நகர்த்துகிறது. மரியோ காவத்தோர் நாவலை ஒரு அழகான நாவல் போலவே படமாக்கியுள்ளார் இயக்குநர் ஜியோர்ஜியோ டிரிட்டி. தனது சிறந்த படங்களுக்காக உலகம் உற்றுநோக்கும் சுமார் சர்வதேச திரைவிழாக்களில் 40 விருதுகளை அவர் பெற்றுள்ளார்.
4. Lost in the Night (Perdidos en la noche) | Dir: Amat Escalante | Mexico, Netherlands, Germany | 2023 | 122' | WC - | 12.00 Noon - இருபது வயது இளைஞன் எமிலியானோவின் தாய் ஒரு பேராசிரியர், ஒரு சமூக செயல்பாட்டாளர். அவர் திடீரென தன் தாய் காணாமல் போகிறார். காவல்நிலையத்திற்கு சென்று தெரிவிக்கிறான் எமிலியானோ. புகார் அளித்து கண்டுபிடித்துத் தருமாறும் கேட்கிறான். அவர்களோ அவனை மிகவும் அலட்சியமாக நடத்துகிறார்கள். நீதி அமைப்புகளும் திறமையற்று இருப்பதையும் அதன்பின்னுள்ள சதிகளையும் உணர்கிறான்.
சர்வதேச சுரங்க நிறுவனத்திற்கு எதிராக உள்ளூர் மக்களின் வேலைகளுக்காக நியாயம் கேட்டு போராடியவர் அவன் தாய். அப்படி போராடிய காரணத்தால்தான் தனது செயல்பாட்டாளரான தாயின் காணாமல் அடிக்கப்பட்டிருக்கிறார் என்பதை எமிலியானோ கண்டுபிடிக்கிறான். அதற்கு காரணமானவர்களைத்தான் முதலில் தேட வேண்டும் என முடிவு செய்து களமிறங்குகிறான். தன் தாய் கடத்திச்செல்லப்பட்டு கொல்லப்பட்ட திசையை சில தடயங்கள் அவனுக்கு கிடைக்கிறது. அதை நோக்கி அவனது பாதை செல்கிறது. நட்பார்ந்த உறவுகளாக அமையும் அந்தக் குடும்பத்தினரின் மிக நல்ல விசுவாசியாக அவன் மாறுகிறான்.
ஒரு பிரபல தொலைக்காட்சி நட்சத்திரமான கார்மென், அவரது மகள் மோனிகா ஆகியோருக்கு சொந்தமான ஒரு நேர்த்தியான நவீன வில்லாவின் மைதானத்தில், இளைஞன் எமிலியானோவின் அம்மாவின் உடல் புதைக்கப்பட்டது நம்பத் தொடங்குகிறான். பூமிக்கடியில் புதைக்கப்பட்டிருக்கும் ரகசியங்களை யாருக்கும் தெரியாமல் வெளிக்கொணர வேண்டும் என்பதில் மும்முரமாக இயங்குகிறான். புதிய உறவுகளுக்கிடையே சிக்கியிருக்கும் உண்மையை ஒரு பின்னலின் சிடுக்குகளைப் போல பிரித்தெடுக்கிறார் இயக்குநர் அமத் எஸ்காலெனெட். இப்படம் கேன்ஸ் விழாவில் பிரிமியர் படமாக திரையிடப்படடது. ஏற்கெனவே 2013ல் கேன்ஸ் திரைவிழாவில் தனது சிறந்த இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் அமத் எஸ்காலெனெட்.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago