‘துருவ  நட்சத்திரம்’ படத்துக்கு ரூ.60 கோடி கடன் பிரச்சினை: தயாரிப்பாளர் கே.ராஜன் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: அறிமுக இயக்குநர் கிஷன்ராஜ் இயக்கியுள்ள படம், 'எமகாதகன்'. பிரைம் ரீல்ஸ் நிறுவனம் வழங்கும் இதில் கார்த்திக், மனோஜ் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். ரஷ்மிகா திவாரி நாயகியாக நடித்துள்ளார். ‘வட்டகரா’சதீஷ், அனுஷ்கா உட்பட பலர் நடித்துள்ளனர். சிங்கப்பூரைச் சேர்ந்த கிருஷ்ணமணி தயாரித்துள்ளார். விக்னேஷ் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது கூறியதாவது: இன்றைக்கு எத்தனையோ சின்ன பட்ஜெட் படங்கள் தயாராகி சென்சார் சான்றிதழ் பெற்றும் ரிலீஸ் ஆக முடியாமல் தவிக்கின்றன. பெரிய படமான ‘துருவ நட்சத்திரம்’ கூட ரிலீசாக முடியாத அளவுக்குப் பொருளாதார பிரச்சினை. அதற்கு காரணம் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு இருக்கும் ரூ.60 கோடி கடன். திரைப்பட சங்கத்தில் இது தொடர்பாக புகார் இருக்கிறது.

வருடத்துக்கு 30 பெரிய படங்கள் வரை தான் ரிலீஸ் ஆகின்றன. மற்ற நேரங்களில் தியேட்டர்காரர்கள் சின்ன படங்களின் ரிலீஸுக்கும் இடம் கொடுக்கிறார்கள். படம் எடுக்க வருபவர்கள் ரிலீஸ் பண்ணும் சக்தி இருந்தால் மட்டும் வாருங்கள். இன்று பெரிய படங்கள் 800 தியேட்டர்கள் வரை ஆக்கிரமித்து விடுவதால் சிறிய படங்களை ரிலீஸ் செய்ய முடியவில்லை. தியேட்டர்காரர்களும் பெரிய படங்களுக்கே ஆதரவு தருகிறார்கள். அவர்களுக்கு வருடத்தில் ஏற்படும் இழப்பை அதை வைத்துதான் சரி செய்கிறார்கள். சினிமாவுக்கு இன்று சிரமம் தலைக்கு மேல் இருக்கிறது.

இவ்வாறு கே.ராஜன் கூறினார். நடிகர் எஸ்.வி.சேகர் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE