“இந்தியாவையும், பாலிவுட்டையும் தெலுங்கு மக்கள் ஆள்வார்கள்” - ரன்பீர் கபூர் முன் அமைச்சர் பேச்சு

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: “அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவையும் பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டையும் தெலுங்கு மக்கள் தான் ஆளப்போகிறார்கள்” என தெலங்கானா அமைச்சர் பேசியது வைரலாகி வருகிறது.

இந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அனிமல்’. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார். பூஷன் குமார், கிரிஷன் குமாரின் டி சீரிஸ், முராத் கெடானியின் சினி ஒன் ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வங்காவின் பத்ரகாளி பிக்சர்ஸ் இணைந்து வழங்கும் இந்தப்படம், டிச.1-ம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக மகேஷ்பாபு, எஸ்.எஸ்.ராஜமவுலி உள்ளிட்டோருடன் தெலங்கானாவின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் மல்லா ரெட்டியும் கலந்துகொண்டார்.

இதில் பேசிய அவர், “அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவையும் பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டையும் தெலுங்கு மக்கள் தான் ஆளப்போகிறார்கள். நீங்களும் கூட ஹைதராபாத்துக்கு குடிபெயர்ந்து விடுங்கள். காரணம் மும்பை பழைய நகரமாகிவிட்டது. பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துவிட்டது. இந்தியாவிலேயே ஹைதராபாத் தான் சிறப்பான நகரம்” என்றார்.

மேலும் பேசிய அவர், “இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி, தில்ராஜூ ஆகியோருடன் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவும் இணைந்துள்ளார். தெலுங்கு மக்கள் ஸ்மார்ட்டானவர்கள். நமது நாயகி ராஷ்மிகா மந்தனா ‘புஷ்பா’ படம் மூலம் கவனம் ஈர்த்தவர். ‘அனிமல்’ திரைப்படம் ரூ.500 கோடி வசூலை ஈட்டும்” எனத் தெரிவித்தார்.

அமைச்சரின் இந்தப்பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் “அவர் ஒரு அரசியல்வாதி. வாக்குகளுக்காக இப்படி பேசுகிறார். அமைதியாக இதனை கேட்டுகொண்டிருந்த ரன்பீர் கபூருக்கு சல்யூட்” என பலரும் கமென்ட் செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE