“என் ஆரம்பகால போராட்டங்கள் மோசமானவை” - நடிகர் மனோஜ் பாஜ்பாய் பகிர்வு

By செய்திப்பிரிவு

கோவா: “மும்பையில் என்னுடைய ஆரம்ப காலக்கட்ட போராட்டங்கள் மிகவும் மோசமாக இருந்தன” என்று தன்னுடைய தொடக்க கால சினிமா பயணம் குறித்து பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய் பேசியுள்ளார்

கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் ஓடிடி தொடர்பான நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் மனோஜ் பாஜ்பாய், “நான் நாடகத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போது சம்பளமே இல்லாமல் பணியாற்றினேன். அப்போது மிகவும் பிஸியாக இருந்தேன். எந்த அளவுக்கு என்றால், நாங்கள் சுரண்டப்படுகிறோம் என்பது கூட தெரியாத அளவுக்கு தொடர்ந்து வேலை இருந்தது. திரும்பிச் செல்ல பேருந்துக்கு கூட பணமில்லை என்பதை நினைக்க விடாமல் நாடக குழுவினர் எங்களை வேலை வாங்கிக்கொண்டிருந்தனர். நாங்கள் ஆர்வத்துடன் பணியாற்றினோம். ஊதியமே வாங்காமல் வேலை செய்தோம். பணமில்லாமல், தெரிந்த நபர்கள் யாருமில்லாமல், சாப்பாட்டுக்கு வழியில்லாமல், வேலையில்லாமல் தான் மும்பை வந்தேன். 10 வருடங்கள் நாடகங்களில் வேலை பார்த்தேன்.

மும்பையில் என்னுடைய ஆரம்ப காலக்கட்ட போராட்டங்கள் மிகவும் மோசமாக இருந்தன. ‘சத்யா’ படத்துக்கு பிறகு காலம் மாறியது. அடுத்தடுத்த வாய்ப்புகளுக்கு என்னை தயார்படுத்திக்கொள்ள கடுமையாக உழைக்க ஆரம்பித்தேன். எனவே, வாழ்வின் நெருக்கடியான காலக்கட்டங்கள் நல்லது என்றுதான் நினைக்கிறேன். இல்லாவிட்டால் உங்களுக்கான வாய்ப்புகளை நீங்கள் எப்படி பயன்படுத்திக்கொள்வீர்கள்?. ஆகவே, தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும்” என்றார்.

இதனிடையே, ராகுல் வி.சித்தெல்லா எழுதி இயக்கிய ‘குல்மோஹர்’ என்ற இந்திப் படம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. குடும்பக் கதையை அடிப்படையாக கொண்ட இப்படத்தில், மனோஜ்பாஜ் பாய், ஷர்மிளா தாகூர், சிம்ரன், அமோல் பாலேகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் குறித்து பேசிய நடிகர் மனோஜ் பாஜ்பாய், “குடும்பத்தையும், உறவுகளையும் பேசும் இப்படத்தில் நடித்தது சிறப்பான அனுபவமாக இருந்தது. குல்மோஹர் என்ற மலர் மிக விரைவாக பூத்து விழுந்துவிடும். அதன் தன்மை இக்கதைக்கு பொருத்தமாக இருந்ததால் படத்துக்கு ‘குல்மோஹர்’ என பெயரிடப்பட்டுள்ளது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE