“த்ரிஷாவை ஒரு நடிகையாக மதிக்கிறேன்” - காவல் நிலையத்தில் ஆஜரான மன்சூர் அலிகான்

By செய்திப்பிரிவு

சென்னை: ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் விசாரணைக்காக இன்று ஆஜரானார். விசாரணை முடித்து வெளியே வந்தவர் செய்தியாளர்களிடம், “த்ரிஷாவை நான் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை. ஒரு நடிகையாக அவரை மதிக்கிறேன் என காவல் துறையிடம் சொன்னேன்” என்றார்.

பின்னணி: சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.

இதனையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு காவல் துறையினர் நடிகர் மன்சூர் அலி கான் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் விசாரணைக்கு இன்று (நவ.23) நேரில் ஆஜராக கோரி அவருக்கு ஆயிரம் விளக்கு மகளிர் போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி மன்சூர் அலி கான் இன்று காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.

முன்ஜாமீன் வாபஸ்: இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மன்சூர் அலிகான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முன் ஜாமீன் மனுவை திரும்ப பெறுவதாக வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி, எதற்காக மனுவை தாக்கல் செய்தீர்கள்? எதற்காக தற்போது திரும்ப பெறுகிறீர்கள்? என கேள்வி எழுப்பினர். அப்போது, எதிர் மனுதாரராக ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தை சேர்ப்பதற்கு பதிலாக, தவறுதலாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தை சேர்த்துள்ளதால் மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, “நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம். நீதிமன்றம் விளையாட்டு மைதானம் இல்லை” எனக் கூறி மனுவை வாபஸ் பெற அனுமதியளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE