வன்முறையும், தந்தை மகன் உறவுச் சிக்கலும் - ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

மும்பை: ரன்பீர் கபூர், அனில் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள ‘அனிமல்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா அடுத்து பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் கைகோத்துள்ளார். இப்படத்துக்கு ‘அனிமல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார். அனில் கபூர், பாபி தியோல், சுரேஷ் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மனன் பரத்வாஜ் இசையமைத்துள்ளார். டி- சிரீஸ், சினி ஒன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு அமீத் ராய் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகிறது. இதன் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - தனது முதல் படமான ‘அர்ஜுன் ரெட்டி’யில் காதலர்களுக்கு இடையிலான உறவுச் சிக்கல் குறித்து பேசிய சந்தீப் ரெட்டி வங்கா இதில், தந்தை - மகன் இடையிலான உறவுச் சிக்கலை கையிலெடுத்துள்ளார். ட்ரெய்லரின் தொடக்கத்தில் வரும் காட்சியிலேயே நாயகன் ரன்பீர் - அவரது தந்தையாக வரும் அனில் கபூர் இடையே நிலவும் ‘டாக்சிக்’ ஆன உறவுமுறை காட்டப்படுகிறது.

தொடர்ந்து அடுத்தடுத்து காட்டப்படும் காட்சிகளில், சிறுவயதில் தனது தந்தையால் ரன்பீர் எதிர்கொள்ளும் வன்முறைகள் சொல்லப்படுகின்றன. ஆனால் முரணான வகையில், தனது தந்தை மீது அதீத பாசம் கொண்டிருக்கிறார் ரன்பீர். படத்துக்கு ‘ஏ’ சான்று வழங்கப்பட்டது ஏன் என்பது ட்ரெய்லரில் வரும் வன்முறை காட்சிகளிலேயே தெரிகிறது. ரத்தம் கொப்பளிக்கும் வன்முறைகள் ட்ரெய்லரில் வருகின்றன. படத்தின் நீளம் 3 மணி 21 நிமிடங்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தொய்வில்லாத திரைக்கதையால் மட்டும் இவ்வளவு நீளமான படத்தை உட்கார்ந்து பார்க்க வைக்க முடியும். சிறிது பிசிறு தட்டினாலும், பார்வையாளர்கள் இருக்கையில் நெளியத் தொடங்கி விடுவர்.

‘அனிமல்’ ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE