“உங்களின் ஆணவமும், அகங்காரமும்...” - மன்சூர் அலி கான் மீது குஷ்பூ காட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: “உங்கள் ஆணவமும், எதிர்ப்பு மனப்பான்மையும் நீங்கள் எத்தகைய ஆணாதிக்க, அகங்காரம் கொண்டவர் என்பதை வெளிப்படுத்துகிறது. இதிலிருந்து விடபட முடியும் என நீங்கள் நினைத்தால் அது முடியாது” என மன்சூர் அலி கான் குறித்து நடிகை குஷ்பூ காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “இவர்கள் தாங்கள் செய்த தவறுகளை மறைக்க மற்றவர்களின் தவறுகளை உதாரணங்களாக காட்டி தங்கள் செயல்பாடுகளை நியாயப்படுத்த முயல்கிறார்கள். மற்றவர்களை குறை சொல்லும் முன் முதலில் உங்களை நீங்களே எண்ணிப்பாருங்கள் மன்சூர் அலி கான். உங்கள் ஆணவமும், எதிர்ப்பு மனப்பான்மையும் நீங்கள் எத்தகைய ஆணாதிக்க, அகங்காரம் கொண்டவர் என்பதை வெளிப்படுத்துகிறது.

இதிலிருந்து விடபட முடியும் என நீங்கள் நினைத்தால், மன்னிக்கவும், அது முடியாது. மன்னிப்பு கேட்பதால் உங்கள் ஆண்மையின் அடையாளம் பறிபோகாது. மாறாக உங்கள் வீட்டு பெண்களுக்கு கண்ணியத்தைக் கொடுக்கும். நீங்கள் நடிக்கும் கதாபாத்திரங்களை போலவே தனிப்பட்ட முறையில் இருந்திருக்கலாம். உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

பின்னணி: சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நடிகர் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இந்தப் பேச்சுக்கு திரைத் துறையில் இருந்து மட்டும் அல்லாமல் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டிருந்தன.

இது குறித்து தேசிய மகளிர் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில், “நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலி கான் பேசியது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. இந்த விவகாரத்தில் தாங்கள் தாமாக முன்வந்து, ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு பரிந்துரைக்கிறோம். இதுபோன்ற கருத்துகள் பெண்களுக்கு எதிரான வன்முறையை சாதாரணமாக கருதத் தூண்டுகிறது. இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று” என்று பதிவிட்டிருந்தது.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷாவப் பற்றித் தான் தவறாக ஏதும் பேசவில்லை என்றும் தன்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் நடவடிக்கை எடுத்ததன் மூலம் நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது என்றும் இவ்விவகாரத்தில் தான் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE