“அரையிறுதியில் இந்தியா வெல்ல ஷமிதான் காரணம்” - ரஜினி பாராட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: “இந்த முறை உலக கோப்பை நமக்குதான். அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற 100 சதவீதம் மொகமது ஷமிதான் காரணம்” என்று நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஐசிசி உலகக் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று (நவ.15) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய வீரர் மொகமது ஷமி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு பக்கபலமாக திகழ்ந்தார். இந்த ஆட்டத்தை நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் இணைந்து நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நேரில் கண்டுகளித்தார். இதையடுத்து இன்று அவர் இந்திய வீரர் அஸ்வினை சந்தித்து பேசிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

இந்நிலையில், மும்பையிலிருந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தொடக்கத்தில் கொஞ்சம் டென்ஷனாகத்தான் இருந்தது. ஆனால், பின்னர் நியூசிலாந்து தரப்பில் 2,3 விக்கெட்டுகள் சரிந்ததும் ஆட்டம் நன்றாக சென்றது. கொஞ்சம் டென்ஷன் இருந்தாலும், கண்டிப்பாக இந்த முறை கப் நமக்குத்தான்” என்றார். மேலும் அவரிடம், ‘இம்முறை போட்டியில் வென்றதற்கு மொகமது ஷமிதான் காரணம் என்கிறார்கள்’ என கேட்டதற்கு, “இந்தப் போட்டியில் வெல்ல 100 சதவீதம் மொகமது ஷமிதான் காரணம்” என்றார் ரஜினிகாந்த்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE