ODI WC 2023 | இது ‘ஷமி’ ஃபைனல்! - இந்திய அணிக்கு திரையுலக பிரபலங்கள் பாராட்டு

By செய்திப்பிரிவு

மும்பை: உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி 106 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இது அவருக்கு 50-வது சதமாக அமைந்தது. இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்திருந்த இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் சாதனையை முறியடித்தார் விராட் கோலி.

இந்த நிலையில் அரை இறுதியில் வெற்றிபெற்ற இந்திய அணிக்கும், புதிய சாதனை படைத்த விராட் கோலிக்கும் பிரபலங்கள் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகர் ஷாருக்கான்: டீம் ஸ்பிரிட் மற்றும் சிறப்பான ஆட்டத்தின் என்னவொரு காட்சி. இறுதிப் போட்டியில் வெல்வதற்கு வாழ்த்துகள் இந்தியா!

இயக்குநர் ராஜமவுலி: சாதனைகள் உடைக்கப்பட வேண்டியவைதான். ஆனால் சச்சின் தனது ஓய்வை அறிவித்தபோது, அவரது சாதனை உடைக்கப்படும் என்று யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். சூப்பர் செவன் ஷமி. ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தைக் காண காத்திருக்கிறேன்.

நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்: அதிக ஸ்கோர்கள் கொண்ட ஒரு ஆட்டத்தில் பவுலர் ஒருவர் ஆட்டநாயகனாக ஆவதன் சாத்தியங்கள் என்ன? ஏழு விக்கெட்களை குவித்த ஷமிக்கும், அபார வெற்றி பெற்ற இந்திய அணிக்கும் வாழ்த்துகள்

நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா: அபாரமான வெற்றி! நாம இறுதிப் போட்டியில் நுழைந்துவிட்டோம். இந்த போட்டியின் நடுவே சிறிய தடங்கல்கள் இருந்தன. இப்போது இதனை வெற்றிகொள்ள நாம தயாராகிவிட்டோம். இந்த ஆதிக்கம் இதுவரை யாரும் செய்யாதது.

இயக்குநர் மதுர் பண்டார்கர்: இன்று விராட் கோலியின் 50வது ODI சதத்தை காண்பது பெரும் கவுரவம். அவருடைய அர்ப்பணிப்பு, திறமை, ஸ்போர்ட்மேன்ஷிப் அனைத்தும் உண்மையில் பிரமிக்கவைக்கிறது. அவருக்கு ஒரு மிகப்பெரிய வாழ்த்து.

நடிகர் ஜூனியர் என்டிஆர்: உடைக்கமுடியாத சாதனை. ஒரு இந்தியரால் உடைக்கப்பட்டிருக்கிறது. அதுவும் இந்தியாவிலேயே. உலகக் கோப்பை அரையிறுதியில். இதை விட சிறப்பான விஷயம் எதுவும் இருக்க முடியாது. வாழ்த்துகள் கோலி!

நடிகர் மோகன்லால்: உலகக் கோப்பை அரை இறுதியில் வெற்றிபெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்! சாதனை படைத்த விராட் கோலிக்கு, ஷமியின் மாஸ்டர்கிளாஸ் ஆட்டத்துக்கும் வாழ்த்துகள். இதை இப்படியே தொடர்ந்து, இறுதிப் போட்டியிலும் வரலாறு படைப்போம்.

இயக்குநர் ரிஷப் ஷெட்டி: இது ‘ஷமி ஃபைனல்’.. இந்திய அணிக்கு வாழ்த்துகள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE