கிடா Review: நேர்த்தியாக ஈர்க்கும் உணர்வுபூர்வ படைப்பு

By கலிலுல்லா

தன் பேரனுக்கு புது துணியை வாங்கித் தர முடியவில்லையே என்ற சோகத்தில் வீட்டுக்குச் செல்வதை தாமதப்படுத்தும் தாத்தாவும், மறுபுறம் புதுத்துணியை வாங்கித் தர தாத்தா வருவார் என்ற எதிர்பார்ப்புடன் ஏங்கி தவிக்கும் பேரனுமாக விரியும் காட்சிகள் உணர்வுகளின் வெவ்வேறு கோணங்களையும், ‘நுகர்வு கலாசார’த்தின் வீரியத்தையும் அழுத்தமாக உணர்த்துகின்றன. இந்த உணர்வு நிலைகளிலிருந்து பல்வேறு விஷயங்களை பேசியிருக்கிறார் இயக்குநர் ரா.வெங்கட். சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை அள்ளிய இப்படம் நவம்பர் 11-ல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பெற்றோர் விபத்தில் உயிரிழக்க, பேரனை அரவணைப்புடன் பார்த்துக் கொள்கிறார் செல்லையா (பூ ராமு). வயது முதிர்ச்சி காரணமாக உரிய வேலை கிடைக்காமல் வறுமையில் துவண்டு கொண்டிருக்கும் தாத்தாவிடம் பேரன் கதிர் தீபாவளிக்கு துணி எடுத்து தர சொல்லி கேட்கிறார். பேரனின் ஆசையை மறுக்க முடியாத செல்லையா கடன் வாங்கியாவது புது துணியை எடுத்து தர வேண்டும் என பல வழிகளில் போராடுகிறார். எல்லா போராட்டங்களும் ஒரு கட்டத்தில் தோல்வியைத் தழுவுகின்றன. இறுதியில் குலதெய்வத்துக்காக நேர்ந்துவிட்ட ‘கிடா’யை விற்கும் முயற்சியில் இறங்குகிறார்.

மறுபுறம் கறி கடையில் வேலை பார்க்கும் வெள்ளைச்சாமி (காளிவெங்கட்), அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு வருவதால் பணியிலிருந்து நீக்கப்படுகிறார். இதை எதிர்த்து தான் வேலைபார்த்த கடைக்கு எதிரிலேயே தீபாவளியை முன்னிட்டு புது கடையை திறந்து வியாபாரம் செய்வதாக சவால்விட்டு, அதற்கான கிடா’வை தேடி அலைகிறார். ஒரு வழியாக செல்லையாவின் ‘கிடா’வை வெள்ளைச்சாமி வாங்க வரும்போது கிடா களவாடப்படுகிறது. இறுதியில் கிடா கிடைத்ததா, இல்லையா? பேரனுக்கு செல்லையா துணி எடுத்து கொடுத்தாரா? வெள்ளைச்சாமியின் சவால் நிறைவேறியதா? - இப்படி பல கேள்விகளுக்கு உணர்வுபூர்வ காட்சிகளுடன் பதில் சொல்கிறது திரைக்கதை.

தாத்தா, பேரன் இடையில் நிகழும் கதையில் ‘கிடா’(ஆடு)வையும் ஒரு கதாபாத்திரமாக்கி அதன் வழி உணர்வுகளை கடத்தியிருப்பது அழகியல். எந்த இடத்திலும் அயற்சியை ஏற்படுத்தாமல் கிராமத்தின் அன்றாட நிகழ்வுகளை அருகிலிருந்து பார்ப்பது போன்ற காட்சிகளை அடுக்கியிருந்ததும், திணிக்காமலும், சோகத்தை கசக்கி பிழியாமலும் கதையோட்டத்துடன் பொருந்திப்போகும் எமோஷனல் காட்சிகள் உரிய தாக்கம் செலுத்துவது பலம்.

அதேபோல இஸ்லாமியர் கதாபாத்திரங்களை எந்தவித துருத்தலும் இல்லாமல் கதைக்குள் கொண்டு வந்து, ‘நல்லிணக்கத்தை’ நுணுக்கமாக பேசியிருப்பது தமிழ் சினிமாவின் அரிய காட்சியமைப்பு. பெண் கதாபாத்திரங்களுக்கு தொடக்கத்தில் முக்கியத்துவம் இல்லாமல் போனாலும், ஆண்களால் ஏற்படும் சிக்கல்களை இறுதியில் பெண் கதாபாத்திரங்கள் மூலம் தீர்வு காண வைத்திருந்தது பாராட்டத்தக்கது.

தீபாவளி பண்டிகையை எளிய மக்களின் வாழ்க்கையிலிருந்து அணுகியிருக்கும் இப்படைப்பு உணர்வுக் குவியலாக ஆக்கிரமிக்கிறது. 5 ஆயிரம் ரூபாய் இருந்தால் செல்லமுத்துவால் இந்த தீபாவளியை கொண்டாடி விட முடியும். ஆனால், அதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. பண்டிகைகளைச் சுற்றி எழுப்பபட்டிருக்கும் கொண்டாட்ட மனநிலை, அது பொய்த்துப்போகும்போது ஏற்படும் ஏமாற்றம், அதீத விளம்பரம் மூலமாக பொருட்களை வாங்க வைக்கும் நுகர்வு கலாசாரம் என யதார்த்ததை பிரதிபலிக்கும் படத்தின் இறுதியில் பண்டிகைகளை அழகாக்குவது உடைகளோ, இன்னபிற கொண்டாடங்களோ அல்ல, ‘மனிதம்’ தான் என்பதை நிறுவும் இடம் அட்டகாசம்.

‘குடிக்கணும்னு கூப்டா ஓடிவந்து காசு கொடுப்பாங்க... உதவி கேட்டா ஒரு பைய வரமாட்டான்’, ‘எல்லா போராட்டமும் தீபாவளிக்கு தானே’, சாமிக்கு நேர்ந்துவிட்ட கடாவ போய் விலை பேசிட்டு இருக்க’ என கேட்கும்போது, ‘நான் கடா கிடைக்காம அலையும்போது எந்த சாமி வந்து உதவி செஞ்சுச்சு’ போன்ற வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.

படத்தின் மிகப் பெரிய பலம் நடிகர்கள். இயலாமை, சோகம், வலி, அவமானங்களை சுமந்து பேரனுக்காக துணிவாங்க போராடும் ‘பூ’ராமு செல்லையாவாக வாழ்ந்திருக்கிறார். சொல்லப்போனால் அவர் நடிகர் என்பதை அறியாத பார்வையாளர்கள் படம் பார்க்கும்போது, அவரை நிஜ செல்லையாவாக உள்வாங்கிகொள்ளும் அளவுக்கான நடிப்பு அது. பேரனாக கதிர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாஸ்டர் தீபனின் சிறப்பே அவரது மொழி. ‘ல’, ‘ழ’ உள்ளிட்ட அழுத்தம் கொடுக்கும் வார்த்தைகளை உச்சரிப்பின் வேகத்தில் கடந்து செல்லும் அவரின் தனித்துவ ஸ்லாங்கும், அப்பாவித்தன பாவனைகளும் ஒன்றுகூடுமிடத்தில் நாமே துணிவாங்கி கொடுத்திடலாம் என நினைக்க வைக்கிறார். இறந்து போன தனது அம்மா அப்பாவின் புகைப்படங்களை பார்த்து அழும் காட்சியிலும், இறுதியில் ‘கருப்பே.....’ என கத்தும் காட்சியிலும் களங்கடிக்கும் நேர்த்தியான நடிப்பு.

மது போதையில் தள்ளாடுவதும், திருந்தி வாழும் வைராக்கிய போராட்டமும் காளிவெங்கட்டை வெள்ளைச்சாமியாகவே கண்முன் நிறுத்துகின்றன. ‘அநீதி’ படத்துக்குப் பிறகான மற்றொரு கிராமத்து கதாபாத்திரத்தில் முத்திரை பதிக்கிறார். தவிர, பாண்டியம்மா, லட்சுமி, ஜோதி, பாண்டி ஆகியோர் பிசிறில்லாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். நீரில் கரையும் உப்பைப்போல தீசனின் பின்னணி இசை காட்சிகளில் கரைந்து உணர்வுகளுக்கு உரமிட்டு வளரச்செய்கிறது. வெண் திரையில் வெயில் மனிதர்களையும், சூடேறிய நிலத்தையும், கிராமத்து அழகியலையும் காட்டும் ஜெயப்பிரகாஷின் ஒளிப்பதிவில் வைடு ஆங்கிள் ஷாட்டும், ஓரிடத்தில் வரும் லோ - ஆங்கிளும் ரசனைமிகு ஃப்ரேம்கள். ஆனந்த் ஜெரால்டு ‘கட்ஸ்’ கதை சொல்லலை இன்னும் கச்சிதமாக்கியிருக்கிறது. 2 மணிநேரத்தில் மொத்த உணர்வுகளையும் கடத்த உதவியிருக்கிறார்.

இடைவேளைக்குப் பிறகு சேஸிங்கில் நுழையும் படத்தின் நடுவில் வரும் காதல் போர்ஷன் தேவையா என்ற கேள்வியும் எழுகிறது. இருப்பினும், மொத்தமாக படம் முடிந்து வெளியே வரும்போது சிலருக்கு காற்றில் பறக்கும் இறகைப் போல லேசான மனமும், சிலருக்கு கண்களில் ஈரம் காய்ந்த கண்ணீரும் இருக்கலாம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

மேலும்