30 ஆண்டுகளுக்குப் பின் திரையில் ‘மணிச்சித்திரதாழு’ - கொட்டும் மழையில் குவிந்த கேரள ரசிகர்கள்

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: கேரள மக்களால் க்ளாசிக் என கொண்டாடப்படும் ‘மணிச்சித்திரதாழு’ (Manichithrathazhu) திரைப்படம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையிடப்பட்டது. படத்தைக் காண 2,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்ததால் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டன.

கேரளாவில் நடைபெற்று வரும் கலாசார பெருவிழாவான ‘கேரளீயம் 2023’ விழாவின் ஒருபகுதியாக மலையாளத்தின் க்ளாசிக் திரைப்படங்கள் மீண்டும் திரையிடப்படுகின்றன. அந்த வகையில் கடந்த 1993-ம் ஆண்டு ஃபாசில் இயக்கத்தில் வெளியான ‘மணிச்சித்திரதாழு’ (Manichithrathazhu) திரைப்படம் (தமிழ் ரீமேக் - சந்திரமுகி) மலையாள மக்களால் அதிகம் கொண்டாடப்பட்டது. இப்படத்தில் ஷோபனா, மோகன்லால், சுரேஷ் கோபி, இன்னசென்ட், கேபிஏசி லலிதா, நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் தேசிய விருது மற்றும் கேரளாவின் மாநில அரசின் விருதையும் பெற்றது. மேலும், இப்படத்தில் கங்கா கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஷோபானாவுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், மலையாள மக்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்த இப்படம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு திருவனந்தபுரத்தில் உள்ள கைரலி (Kairali theatre) திரையரங்கில் நேற்று (நவ.3) மாலை 7 மணிக்கு திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் மதியம் 3 மணி முதல் திரையரங்குக்கு வெளியே மக்கள் கூட்டம் குவியத் தொடங்கியது. கொட்டும் மழையைக் கூட பொருட்படுத்தாமல் ஏராளமானோர் குவிந்ததால் திரையரங்கில் உள்ள 443 சீட்டுகள் நிமிடத்தில் நிரம்பின.

மேலும், திரையரங்கின் நடைபாதையிலும் மக்கள் அமர்ந்து படத்தை பார்த்தனர். 2000-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தால் பலராலும் படத்தை பார்க்க முடியாமல் போன சூழலில் மேலும், மூன்று திரையரங்குகளில் படம் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டது. கேரள மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகத்துடன் (KSFDC) சலசித்ரா அகாடமி இந்த திரைப்பட விழாவை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE