“விஜய் ஒரு மகா கலைஞன்... அப்படித்தான் தலைவணங்கி முத்தம் கொடுக்கணும்” - மிஷ்கின் விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: “விஜய் ஒரு மகா கலைஞன்; அப்படிப்பட்ட ஒருவருக்கு கையைப் பிடித்து தலைவணங்கிதான் முத்தம் கொடுக்க வேண்டும்” என்று இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

மிஷ்கினின் சகோதரரும் ’சவரக்கத்தி’ படத்தின் இயக்குநருமான ஜி.ஆர்.ஆதித்யா எழுதி இயக்கியுள்ள படம் ‘டெவில்’. இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் இயக்குநர் மிஷ்கின். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (நவ.03) சென்னையில் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மிஷ்கினிடம், ‘லியோ’ வெற்றி விழாவில் விஜய்யின் கையை பிடித்து தலைவணங்கி முத்தம் கொடுத்து மிஷ்கின் பணிந்து செல்கிறார் என விமர்சனங்கள் வருகிறதே என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “என்னை எல்லோரும் பணிவில்லாதவன் என்றுதான் சொல்வார்கள். நான் பணிவாக இருப்பதாக சொல்லியிருப்பது எனக்கு மிகவும் சந்தோஷம்.

என் தம்பியை பணிவுடன் நான் முத்தம் கொடுத்தது எனக்கு மிகப் பெரிய சந்தோஷம். நான் சொன்னது போல விஜய் ஒரு பெரிய லெஜண்ட் தான். அந்த லெஜண்டுக்கு நான் முத்தம் கொடுத்தது அவ்வளவு விமர்சத்துக்குரியதா என தெரியவில்லை. என் மனதிலிருந்து தான் எல்லாவற்றையும் செய்வேன். அறிவிலிருந்து எதையும் செய்ய மாட்டேன். அறிவிலிருந்து செய்தது சினிமா மட்டும்தான். மற்றபடி மனிதர்களுடன் பழகும்போது மனதிலிருந்துதான் பழகுவேன்.

என்னுடைய கரியர் தொடங்கியது ‘யூத்’ படத்திலிருந்துதான். என்னுடைய தம்பி விஜய் என்னை ஒரு அண்ணனைப்போல பார்த்துகொண்டார். இன்றும் அப்படித்தான் இருக்கிறார். மகா கலைஞன்; நல்ல மனிதன். அப்படிப்பட்ட ஒரு மனிதனுக்கு கையை பிடித்து தலைவணங்கி தான் முத்தம் கொடுக்க வேண்டும். அவர் ஒரு மகா கலைஞன். நான் ஒரு இசையமைப்பாளராகத்தான் வந்திருக்க வேண்டும். வீட்டில் வசதியில்லாததால் என்னால் இசையை கற்றுக்கொள்ள முடியவில்லை. இலக்கிய வாசிப்பிலேயே இருந்துவிட்டேன். அது என்னை ஒரு வெறிநாய் போல துரத்திக்கொண்டேயிருந்தது. இசையை படிக்க ஆரம்பத்தேன். நம்பிக்கை வந்ததும் இசையமைத்திருக்கிறேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE