“விஜய்... நான் கண்ட லெஜண்ட்!” - ‘லியோ’ வெற்றி விழாவில் மிஷ்கின் புகழாரம்

By செய்திப்பிரிவு

சென்னை: “வாழ்க்கையில் நான் புரூஸ்லீ, மைக்கேல் ஜாக்சன் ஆகிய இரண்டு லெஜண்டுகளை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், நான் கண்களால் பார்த்த ஒரே லெஜண்ட் விஜய்தான். அவர் வாழ்க்கையில் உச்சம் தொட்டுவிட்டார். அவருடன் படம் பண்ண வேண்டும் என்பதற்காக நான் இதைச் சொல்லவில்லை” என மிஷ்கின் பேசியுள்ளார்.

விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் விஜய், த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மிஷ்கின், அர்ஜூன், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், மடோனா, மேத்யூ தாமஸ், மரியம் ஜார்ஜ் 'பிக் பாஸ்' ஜனனி, படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ், கலை இயக்குநர் சதீஷ் குமார், நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கின் நடுவே விருந்தினர்கள் நடந்து செல்வதற்காக ‘ராம்ப்’ (Ramp) அமைக்கப்பட்டுள்ளது. அதில் விருந்தினர்கள் நடந்து வரும்போதே சூழ்ந்திருந்த ரசிகர்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர். குறிப்பாக, விஜய் கையசைத்து நடந்து வரும்போது மொத்த அரங்கமே கரவொலி எழுப்பியது. விழா தொடங்குவதற்கு முன்னதாக இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் விழாவில் பேசிய நடன இயக்குநர் தினேஷ், “நெஞ்னிலே படத்தில் வரும் ‘தங்க நிறத்துக்கு தான் தமிழ்நாட்ட எழுதி தரட்டுமா’ பாடலில் நான் ‘பேக் டேன்சர்’. ‘குஷி’ படத்தில் உதவி நடன இயக்குநர். இப்போது இந்தப் படத்தின் ‘நான் ரெடி தான்’ பாடலில் நடன இயக்குநர். விஜயுடனான எனது பயணம் அற்புதமானது. அன்று தொடங்கி இன்று வரை அவர் மாறவேயில்லை. குத்துப் பாடல்களில் மட்டுமல்ல, மெலோடி பாடல்களில் விஜய் அட்டகாசமாக நடனமாடுவார். ‘துப்பாக்கி’ படத்தில் வரும் ‘வெண்ணிலவே’ பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். படத்திலேயே மன்சூர் அலிகானைத் தான் கஷ்டப்பட்டு ஆட வைத்தேன். நான் ஒன்று சொல்வேன். ஓகேன்னு சொல்லிட்டு வேற ஒண்ணு ஆடுவாரு.” என்றார்.

மிஷ்கின் பேசுகையில், “சில மாதங்களுக்கு முன்பு ஏர்போர்ட் சென்றிருந்தபோது அங்கிருக்கும் ஒருவர் ‘லியோ’ அப்டேட் கேட்டார். கடந்த வாரம் ஸ்வீடன் சென்றேன். அங்கே ஒருவர் விஜய் என்ன சொன்னாரு என்று கேட்டார். வாழ்க்கையில் நான் புரூஸ்லீ மற்றும் மைக்கேல் ஜாக்சன் ஆகிய இரண்டு லெஜண்டுகளை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். விஜய் நான் கண்ணால் பார்த்த ஒரு லெஜண்ட். அவர் வாழ்க்கையில் உச்சம் தொட்டுவிட்டார். அவருடன் படம் பண்ண வேண்டும் என்பதற்காக நான் இதை சொல்லவில்லை.

சில நாட்களுக்கு முன்பு நான் விஜய் பற்றி தவறாக பேசியதால் இறந்துவிட்டேன் என ஒரு போஸ்டர் பார்த்தேன். இதை விஜய் ரசிகர் செய்திருக்க மாட்டார் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். காரணம், விஜய் உடன் இருந்தால் வாழத்தான் முடியும். எப்படி சாக முடியும்? 25 வருடமாக எப்படி ஒரு மனிதர் இப்படி காந்தமாக ஈர்க்க முடியும்? இந்த மேடையில் இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். விஜய் ‘ஜேம்ஸ்பாண்ட்’ போன்ற ஒரு படத்தில் நடிப்பதை நான் பார்க்க வேண்டும்” என்றார் மிஷ்கின்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE