சினிமா உலகின் சிரஞ்சீவி நடிகர் சிவகுமார் தனது 80 வயதைக் கடந்த ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதியன்று நிறைவு செய்தார். இதனையொட்டி அவருக்கு வாழ்த்துச் சொல்ல வாய்ப்பொன்று என்.சி. மோகன்தாஸ் புண்ணியத்தில் அடியேனுக்கும் கிட்டியது. பெருந்திரையுலகப் பிதாமகனாக விளங்கி, புரட்சி நடிகராகத் தொடங்கி, மக்கள் திலகமாக மலர்ந்து புகழின் உச்சியில் இருந்தபோதே மறைந்து போன எம்.ஜி.ஆரின் நினைவில்லம் அருகேதான் நடிகர் சிவகுமார் வீடு. தி.நகரில் உள்ள ஆற்காடு சாலையில் இருக்கும் அவரின் இல்லம் வண்ணக் குறு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நுழைவாயிலில் காவலர் காத்திருந்தார்.
“நீங்கள் வந்தால் உடன் உள்ளே அழைத்து வரச்சொல்லி உத்தரவு. எனவே வாருங்கள்” என்று கூறியபடியே காவலர் என்னை அழைத்துக்கொண்டு உள்ளே போனார். சிவகுமாரும் விருந்தினர்களும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த அரங்கினுள் நான் நுழைந்ததும் அனைவரும் என்னுடன் நேசம் பேசி, நலம் விசாரித்தனர். பின்னர் அந்த நிகழ்ச்சியின் நாயகன் சிவகுமாருடனான உரையாடல் தொடர்ந்தது. சிவகுமார் மூச்சுவிடாமல் முழங்கினார். நாங்களோ செவிகளை மட்டுமல்ல; சிந்தையைக் கூடத் திறந்துவைத்து சிவகுமாரின் சிந்தனைகளை பெற்றுப் போற்றிக் கொண்டே மெய்மறந்து அமர்ந்து நிமிர்ந்தோம்.
சிவகுமாரின் உரையாடல்களில் இருந்து வெளியான அவர் சார்ந்த சுவையான தகவல்களை மட்டும் இங்கு வாசக நேசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். அவரைக் கண்டதும் "The History of Journalists Organisations in Madras" என்ற நான் படைத்த ஆங்கில நூலை சிவகுமாருக்கு அன்பின் அடையாளமாக அளித்தேன். இனி சிவகுமாரின் வாய்வழி வாசகங்கள் இதோ…நான் 50-ஆம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடவில்லை. 60-ஆம் ஆண்டு பிறந்த நாளையும் விழா எடுத்து நினைவு கொள்ளவில்லை. 70-ஆம் ஆண்டு பிறந்த நாளும் வந்தது. ஆனால் அப்போதும் நான் விழாவின் நாயகனாகத் திகழ்ந்ததில்லை. 75-ஆம் ஆண்டு பிறந்த நாளும் வந்தது. அப்போதும் கூட நான் எந்தவித சிறப்பு நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்துகொண்ட்தில்லை.
இதோ… இப்போது எண்பதாம் ஆண்டை நிறைவு செய்கிறேன். இப்போதும் கூட இந்த நாளையொட்டி எந்தவித தடபுடல் திருவிழாவையும் நான் நடத்தவில்லை. எல்லா பிறந்த நாட்களும் எனக்கு அமைதியாகவும் எளிமையாகவுமே நடந்தன. இப்போதும் அப்படித்தான்.மனித இனத்தின் வாழ்க்கையை இரு கூறுகளாகப் பிரித்து அலசிப் பார்க்கலாம். முதல் கூறு என்பது நாம் சம்பாதித்து பிள்ளை, குட்டிகளை வாழ வைப்பதாகும். அந்த பணியை நானென் குடும்பத்தில் நிறைவாகச் செய்து முடித்துவிட்ட திருப்தி எனக்குண்டு.
» ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘REBEL’ படத்தின் முதல் தோற்றம் வெளியீடு
» கமல்ஹாசன் - மணிரத்னம் படத்தின் ப்ரொமோ வீடியோ நவ.7-ல் வெளியீடு
இரண்டாம் கூறு என்பது நம் பிள்ளை, குட்டிகள் சம்பாதித்து நம்மை வாழ வைப்பதாகும். அந்த நிலையில்தான் இப்போது நான் இருக்கிறேன். இதோ நான் தற்போது அணிந்திருக்கும் சட்டை, பட்டு வேட்டி என இவற்றை எல்லாம் என் பிள்ளைகள் வாங்கிக் கொடுத்தது தான். இவற்றை நான் மகிழ்வுடன் கட்டிக்கொண்டு குடும்பத்தாரின் சந்தோஷத்தில் பங்கெடுத்துக் கொண்டு இருக்கிறேன்.
சிலர் எண்ணலாம். "அவர்கள் கொடுத்ததை நாம் உடுத்திக் கொள்வதா? நாம் உழைத்துச் சம்பாதித்த தொகையில் இருந்தே உடை பெற்று உடுத்திக் கொள்ளலாமே!" என்று கருதுவதுண்டு. அப்படி நினைப்பது சரியல்ல. நமக்குத் துணிமணிகள் வாங்கிக் கொடுத்து உடுத்திக் கொள்ளுமாறு கூறுவது யாரோ அல்ல. அவர்கள் நம் ரத்தம். நம் வாரிசு. நான் வளர்த்து ஆளாக்கிய பிள்ளைகள். அவர்களின் உழைப்பில், திரட்டிய ஊதியத்தில் இருந்து நமக்கு உடைகள் வாங்கித் தருவதும் அவற்றை நான் அணிந்து கொள்வதும் பரஸ்பரம் பாசம் பேசிக்கொள்ளும் அன்யோன்யமான அன்புணர்ச்சி.
இதோ.. இங்கு செய்தியாளர் நூருல்லா அமர்ந்து இருக்கிறார். அவரைப் போன்ற நிருபர்கள் எந்த கோணத்தில் எப்படி சிந்திப்பார்கள் என்றே எதிர்பார்க்க முடியாது. நான் முதன்முதலில் சினிமாவில் நடித்தபோது ஒரு காதல் காட்சி படமாக்கப்பட்டது. அந்த காட்சி ஷூட்டிங் முடிந்து நான் தளத்தில் அமர்ந்து இருந்தேன். ஒரு நிருபர் என் அருகில் வந்து சில கேள்விகளைக் கேட்டார்.
“முதன்முதலாகக் காதல் காட்சிகளில் நடித்து இருக்கிறீர்கள். முதலாவதாக ஒரு இளம் நடிகையைத் தொட்டுத் தொட்டு நடிக்க வேண்டிய சூழலைத் தாண்டி வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு இந்த அனுபவம் எப்படி இருந்தது?” என்று அந்த நிருபர் கேட்டார்.“எனக்கு இதில் எந்த மாறுதலும் தெரியவில்லை. சாதாரணமாக நாம் நண்பர்களைத் தொட்டுப் பேசுவது போலத்தான் உணர்ந்தேன்” என்று நான் பதில் அளித்தேன்.
மீண்டும் விடாப்பிடியாகப் பேசிய அந்த நிருபர், “உங்களுக்கு அந்த காதல் காட்சியின் போது எந்த உணர்ச்சியும் ஏற்படவில்லையா?” என்று கேட்டார்.நானோ “எதுவும் இல்லை. எல்லாமே நாம் மனதில் என்ன நினைத்துக்கொண்டு செயல்படுகிறோம் என்பதை வைத்துத்தான் உணர்ச்சிகள்” என்று விளக்கம் அளித்தேன்.“அப்படியானால் உணர்ச்சியே இல்லாத இளம் நடிகர் என்று எழுதலாமா?” என்று அந்த நிருபர் விவகாரமான வினாவை வீசினார்.
இப்படித்தான் சில செய்தியாளர்கள் தமக்குத் தேவையான பரபரப்பான செய்திகளைத் திரட்ட விபரீதமாக கேள்விகளையும் கேட்டு விடுகிறார்கள். எனினும் நான் எல்லா செய்தியாளர்களோடும் நேசத்துடன் தான் பழகி வந்தேன். குறிப்பாக தினத்தந்தி சினிமா நிருபரான அதிவீரபாண்டியனை நான் கடைசி வரையிலும் 'அண்ணா' என்ற அடைமொழியை வைத்தே பேசி வந்தேன். இதுபோன்ற பாசப் பரிவர்த்தனைகளால் நான் செய்தியாளர்களின் செல்வனாகத் தொழிலில் கவனம் செலுத்த முடிந்தது. இவ்வாறாக சிவகுமார் தனது தொழில் அனுபவங்களை அடுக்கிக்கொண்டே போனார்.
அவரின் உணர்வினூடே அவர் அவ்வப்போது சங்க இலக்கியங்களின் செய்யுட்களை அடிபிறழாமல் ஒரே மூச்சில் வேகமாக உணர்ச்சி ததும்பப் பேசியபோது எங்களுக்கே சிற்றுடல் சிலிர்த்தது. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கணியன் பூங்குன்றனாரின் செய்யுளை அவர் மனப்பாடமாகச் சொன்னார். அவர் அந்த முதல் அடியைச் சொன்னபின் அடுத்தடுத்த அடிகளைச் சொன்னபோது நானும் சேர்ந்து அவருடன் அந்த செய்யுள் அடிகளைச் சொன்னேன். உடனே அவர், "அடுத்த வரிகளைச் சொல்ல முடியுமா என்று சில குழு விவாதங்களின் போது கேட்டிருக்கிறேன். யாரும் கூறவில்லை. இப்போது கூட அடுத்த வரியை நூருல்லா கூறட்டும். நான் ஆயிரம் ரூபாய் இப்போதே தருகிறேன்” என்றார்.
நானோ “நான் நூறு தான். எனக்கு ஆயிரம் வேண்டாம்” எனக் கூறினேன். என் சிலேடைச் சுவையில் உடனிருந்தோர் திளைத்தனர். பின்னர் அவர் அடுத்தடுத்த அடிகளைச் சொல்லச் சொல்ல நானும் எனக்குத் தெரிந்த வரிகளை உடன் கூறினேன். எனினும் பணம் நோக்கமல்ல. நான் அவரை ஜெயிக்கச் செல்லவில்லை. அவருள் லயிக்கத் தான் சென்றிருந்தேன்.அந்த கோணத்தை விட்டு அடுத்த அம்சத்துக்குள் நுழைந்தார் சிவகுமார்.அவர் “ஒன்றானவன், உருவில் இரண்டானவன்” என்ற கண்ணதாசனின் பாடலை வரிக்கு வரி அப்படியே கவிநயம் தொணிக்கச் சொன்னார். கேட்கவே பிரமிப்பாக இருந்தது. இத்துடன் கண்ணதாசனின் திறமையை அவர் உச்ச ஸ்தாயியில் வைத்து மெச்சிப் பேசினார்.
நிறைவாக அவர் எங்களுக்கு ‘குழந்தைகளுக்கான கம்பராமாயணம்’ என்ற ஆங்கில நூலை அன்பளிப்பாக அளித்தார். கம்பராமாயணத்தின் சில அம்சங்கள் குறித்து சிவகுமார் நிகழ்த்திய உரைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் தான் இந்தப் படைப்பு. இதை அவர் எங்களுக்கு வழங்கியது மட்டுமல்ல, அதனை ஏந்தியவாறு எங்களைத் தோள் தழுவிப் படங்கள் எடுத்துக்கொள்ள வழிவகுத்தும் தந்தார். வெற்று நெஞ்சோடு அவரைச் சந்திக்கச் சென்ற நாங்கள், கற்ற அறிவோடு விடைபெற்றோம்!
- நூருல்லா.ஆர் (மூத்த பத்திரிகையாளர்)
| இன்று - அக்.27- நடிகர் சிவகுமாரின் பிறந்தநாள் |
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago