’ரஜினி 171’ தனி படம்தான்; LCU கிடையாது - லோகேஷ் கனகராஜ் உறுதி

By செய்திப்பிரிவு

சென்னை: ரஜினி நடிக்கும் 171-வது படம் தனிப் படமாகத்தான் இருக்கும் என்றும், அது LCU-வில் வராது என்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

ரஜினி நடிக்கும் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது திருநெல்வேலி, தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளி நடைபெற்று வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 171வது படத்தை லோகேஷ் கனக்ராஜ் இயக்குகிறார். இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பை சமீபத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் இரட்டையர்களான அன்பறிவ் ஸ்டண்ட் இயக்குநர்களாக பணியாற்றுகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படம் லோகேஷ் கனகராஜின் LCU-வில் (லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்) வருமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிவந்தனர். இதற்கு சமீபத்திய பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் விளக்கமளித்துள்ளார். அப்பேட்டியில் அவர், “நிச்சயமாக ‘ரஜினி 171’ தனிப் படம் தான். அது LCU-வில் வராது. அதில் குழப்பமே வேண்டாம். என்னுடைய வழக்கமான பாணியிலிருந்து முற்றிலும் வித்தியாசமான முறையில் ஒரு படம் பண்ண வேண்டும் என்று எனக்கு ஒரு எண்ணம் இருந்தது. இது அப்படியான ஒரு படமாக இருக்கும்.

இந்தப் படத்தை இயக்க நான் மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறேன். நடிகர் தேர்விலும் கூட நிறைய சர்ப்ரைஸ்கள் உள்ளன. மலையாள சினிமாவை சேர்ந்தவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ‘ரஜினி 171’ படத்தில் மலையாள சினிமா எழுத்தாளர்களில் ஒருவருடன் நான் பணியாற்ற வாய்ப்புள்ளது” என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE