‘லியோ’ படத்தின் அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லை: சென்னை உயர் நீதிமன்றம்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ படத்தின் 4 மணி காட்சிக்கு அனுமதி இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கதில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், ’லியோ’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. அதாவது, நேரம் குறிப்பிடாமல் ஒரு நாளுக்கு ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி வழங்கியிருந்தது.

இந்த சூழலில் சென்னை உயர் நீதிமன்றத்தில் செவன் ஸ்கீரின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் நேற்று (அக்.16) ஆஜரான, வழக்கறிஞர் கர்னல் கணேசன், நீதிபதி அனிதா சுமந்த் முன்பு ஆஜராகி அவசர முறையீடு செய்தார். லியோ படத்தின் ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சியை காலை 4 மணிக்கு திரையிட அனுமதிக்க வேண்டும். அதேபோல் காலை 9 மணி என்பதை 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் எனக் கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளோம். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கு விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு (அக்.17) தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த மனு இன்று முதல் வழக்காக நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த அவர், ‘லியோ’ படம் வெளியாகும் நாளில் அதிகாலை 4 மணி காட்சிக்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க முடியாது என்று தெரிவித்தார். 9 மணிக்கு காட்சிக்கு பதிலாக படத்தை 7 மணிக்கு தொடங்க அனுமதி கோரி மனு அளிக்குமாறு பட தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்ட அவர், இது குறித்த உரிய உத்தரவை பரிசீலித்து நாளை மதியத்துக்குள் தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என்று ஆணையிட்டார்.

இந்த விசாரணையின் போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்," 4 மற்றும் 7 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிப்பதில் சிக்கல்கள் உள்ளதாகவும், எந்த படத்துக்கும் 4 மணி மற்றும் 7 மணி காட்சிகளுக்கு அரசு அனுமதியளிக்கவில்லை என்று வாதிட்டார். மேலும், “9 மணிக்கு காட்சிகளை தொடங்க வேண்டும் என்பது தான் அரசு வகுத்துள்ள விதி. அதனை மீற முடியாது. 20 நிமிடங்களுக்கு இடைவெளி விட வேண்டுமென்ற எந்த கட்டாயமும் இல்லை. இடைவெளி நேரத்தை குறைத்துக் கொள்கிறோம் என பட தயாரிப்பு நிறுவனம் கூற முடியாது. அதனை தியேட்டர் நிர்வாகம் தான் கூற முடியும். கடந்த முறை ஒரு படத்திற்கு 4 மணி காட்சிக்கு சென்ற ரசிகர் உயிரிழந்தார். இதில் சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளது. அதனை நாங்கள் பார்க்க வேண்டும். லியோ படத்தின் ட்ரைலர் வெளியிட்ட போது ஒரு தியேட்டர் சேதப்படுத்தப்பட்டது" என்று தனது வாதத்தில் குறிப்பிட்டார்.

செவன் ஸ்கீரின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கர்னல் கணேசன், "விதிவிலக்கு அளிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. அதன்படி எங்களுக்கு விலக்கு அளிக்கலாம் என்று கூறினார். இதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் தான் விலக்கு அளிக்க முடியும். சாதாரண நாட்களில் அளிக்க முடியாது. அனைத்துப் படங்களுக்கும் 5 காட்சிகளுக்கு அனுமதி அளிக்கிறோம்" என்று கூறினார்.

ரசிகர்களுக்காகத்தான் 4 மணி காட்சிக்கு தான் அனுமதி கேட்கிறோம் என்று தயாரிப்பு நிறுவனத்தின் வழக்கறிஞர் கூறியபோது, குறுக்கிட்ட நீதிபதி அனைத்து காட்சிகளும் ரசிகர்களுக்காகத்தானே திரையிடப்படுகிறது எனக் கூறியதும் நீதிமன்றத்தில் சிரிப்பலை எழுந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE