ரத்தம் Review: சி.எஸ்.அமுதனின் ‘சீரியஸ்’ முயற்சி எடுபட்டதா?

By டெக்ஸ்டர்

‘தமிழ்ப் படம்’, ‘தமிழ்ப் படம் 2’ என்ற முழு நீள ஸ்பூஃப் வகை திரைப்படங்களை தமிழுக்கு அறிமுகம் செய்து, அதில் வெற்றியும் பெற்ற சி.எஸ்.அமுதன் முதன்முறையாக தனது நகைச்சுவை பாணியை கைவிட்டு சீரியஸ் கதைக்களத்துடன் இறங்கியிருக்கும் படம் ‘ரத்தம்’.

மனைவி இறந்த பிறகு கொல்கத்தாவில் தன் மகளுடன் வசித்து வருகிறார் முன்னாள் இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸ்ட் குமார் (விஜய் ஆண்டனி). தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த சோகத்தால் கடந்த காலத்தின் தொடர்புகளில் இருந்து முற்றிலுமாக விலகி இருக்கிறார். சென்னையில் அவரது நண்பர், மர்ம நபர் ஒருவரால் பத்திரிகை அலுவலகத்திலேயே கொடூரமாக கொல்லப்படுகிறார். தனது வளர்ப்புத் தந்தையும் பத்திரிகை நிறுவன அதிபருமான நிழல்கள் ரவியின் வேண்டுகோளின்படி மீண்டும் சென்னைக்கு வருகிறார். வந்தவர், தனது நண்பன் செழியனின் கொலைக்கான பின்னணியை ஆராய தொடங்கும்போது அவருக்கு பல தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றன. செழியனின் கொலையைத் தொடர்ந்து ஒரு மாவட்ட ஆட்சியரும் கொல்லப்படுகிறார். இந்தக் கொலைகளுக்குப் பின்னால் ஒரு குழு செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்கிறார். அந்த கும்பல் யார், அவர்களது நோக்கம் என்பதைக் கண்டறிவதற்கான ஹீரோவின் பயணமே ‘ரத்தம்’ படத்தின் திரைக்கதை.

ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான ஸ்பூஃப் வகைப் படங்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழில் மிகவும் குறைவு. ஒரு சில படங்களில் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டிருந்தாலும், முதன்முதலாக சிவா நடித்த ‘தமிழ்ப் படம்’ மூலம் தான் முழு நீள ஸ்பூஃப் வகை படம் சாத்தியமானது. அதனைத் தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான ‘தமிழ்ப் படம்’ இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பை பெற்றது. தன்னுடைய முந்தைய பாணியிலிருந்து முழுமையாக விலகி, மிகவும் சீரியஸான ஒரு கதைக்களத்தை தேர்வு செய்த சி.எஸ்.அமுதனின் முயற்சி எடுபட்டதா என்று கேட்டால், இல்லை என்பதே பதிலாகும்.

படம் தொடங்கியது முதலே எந்தவொரு ஒட்டுதலும், சுவாரஸ்யமும் இல்லாமல் பயணிக்கிறது திரைக்கதை. மிகவும் செயற்கையான காட்சியமைப்புகள், அமெச்சூர்த்தனமான மேக்கிங் என முதல் பாதி ஆமை வேகத்தில் நகர்கிறது. தொடக்கத்தில் பத்திரிகை ஆபீஸிலேயே ஒரு கொலை நடக்கிறது. அது குறித்த பின்னணியை ஆராய வரும் நாயகன் நூல்பிடித்தபடி ஒவ்வொரு விஷயமாக கண்டுபிடிக்கும் கதையில் நம்மை நிமிர்ந்து உட்காரவைக்கும்படியான, பரபரப்பான காட்சி என்று ஒன்று கூட இல்லை.

படத்தின் பத்திரிகை ஆபீஸ் என்று ஒன்றை காட்டுகிறார்கள். இப்படி ஒரு பத்திரிகை ஆபீஸை தமிழகம், இந்தியா மட்டுமல்ல, பூமி தாண்டி மார்ஸ், ஜூபிடர், ப்ளூட்டோ வரை சென்றாலும் கிடைக்காது. இந்தப் படம் என்று மட்டுமல்ல, இதுவரை தமிழ் சினிமாவில் வரும் பெரும்பாலான படங்களில் ஊடக அலுவலகங்களை காட்டும்போது உண்மைக்கு பக்கத்தில் கூட வருவதில்லை. அதற்கு இந்தப் படமும் விதிவிலக்கல்ல.

பத்திரிகை அலுவலகம் என்றாலே உள்ளே இருப்பவர்கள் எப்போதும் சீரியஸ் முகத்துடன் ஆங்கிலம் கலந்து தமிழில் ஏதேனும் குற்றச் சம்பவம் குறித்தோ அல்லது அரசியல் குறித்தோதான் சீரியஸாக உரையாடிக் கொண்டிருப்பார்கள் என்று தமிழ் இயக்குநர்களிடம் யாரோ தவறாக சொல்லியிருக்கிறார்கள். அதாவது பரவாயில்லை, இந்தப் படத்தில் ஒருபடி மேலே போய், நிருபர்களை மிரட்டுபவர்கள் போன் செய்தோ அல்லது தலைமை நிர்வாகத்தில் இருப்பவர்களிடமோ எல்லாம் பேசுவதில்லை. ஷாப்பிங் மாலில் நுழைவது போல நேரடியாக ஆபீசுக்குள் புகுந்து ஸ்ட்ரெய்ட்டாக அடிதடிதான்.

இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸ்ட்டாக வருகிறார் விஜய் ஆண்டனி. பாதி படத்தில் எல்லாம் அவர் பத்திரிகையாளரா அல்லது போலீஸ்காரரா என்ற குழப்பம் ஏற்பட்டுவிடுகிறார். அந்த அளவுக்கு நினைத்தை செய்கிறார். ஒரு காலத்தில் அந்தப் பத்திரிகை அலுவலகத்தில் விஜய் ஆண்டனி எடிட்டராக இருந்தாராம். அதனால் அவர் மீதான பாசத்தில் அவர் வேலையை விட்டுப் போனபிறகு அந்த எடிட்டர் பதவிக்கு வேறு யாரையும் கொண்டுவராமலே பத்திரிகையை நடத்துவதாக ஒரு காட்சியில் சொல்கிறார் ஓனர் நிழல்கள் ரவி. இதெல்லாம் எந்த நினைப்பில் காட்சியாக வைத்தார்கள் என்று தெரியவில்லை.

அதேபோல காட்சிக்குக் காட்சி ‘அவர் ஒரு வேர்ல்டு ஃபேமஸ் ஜர்னலிஸ்ட்’ என்று விஜய் ஆண்டனிக்கு பில்டப் கொடுக்கிறார்கள். அப்படி உலக ஃபேமஸ் ஆகும் அளவுக்கு என்ன செய்தார் என்கிற எந்தத் தகவலும் படத்தில் இல்லை. 7 வருடங்களுக்குப் பிறகு தான் வேலை செய்த நிறுவனத்துக்கு மீண்டும் வேலைக்கு வரும் அவர் எதற்காக ஜேம்ஸ் பாண்ட் போல சீக்ரெட்டாக யாரிடமும் சொல்லாமல் வேலை செய்ய வேண்டும்?

விஜய் ஆண்டனி தான் இதுவரை மற்ற படங்களில் எப்படி நடித்தாரோ, அப்படியே இதிலும் சீரியஸான முகத்துடன் எந்த உணர்ச்சியும் காட்டாமல் நடித்திருக்கிறார். நந்திதா ஸ்வேதா, மஹிமா நம்பியார், நிழல்கள் ரவி என யாருடைய கதாபாத்திரமும் ஆழமாக எழுதப்படவில்லை. கண்ணனின் பின்னணி இசையும், பாடல்களும் ஈர்க்கவில்லை.

படம் முழுக்கவே ஒருவித அமெச்சுர்த்தனமான திரைமொழி துருத்திக் கொண்டு தெரிவது மிகப் பெரிய மைனஸ். பார்வையாளர்களுக்கு காட்சி வழியாக தாக்கத்தை ஏற்படுத்த வேண்டிய இடங்களில் எல்லாமே வசனங்களை இட்டு நிரப்பி வைத்திருக்கிறார்கள். ‘தமிழ்ப் படம் 2’-ல் ஒரு காட்சி உண்டு. அதாவது, தமிழ் சினிமாவில் குற்றவாளியை போலீசார் ட்ராக் செய்வதை ஸ்பூஃப் செய்த காட்சி அது. பைக்கில் தப்பிச் செல்லும் வில்லனை கேமராவில் பார்த்துக் கொண்டிருக்கும் சிவா, மற்றொரு அதிகாரியிடம், ‘அந்த பைக்கின் டேங்க்கில் மண்ணை கொட்ட முடியுமா?’, ‘வில்லனுக்கு இரண்டு அத்தைப் பெண்கள் இருந்தால் எப்படி இருப்பார்கள்?’ என்றெல்லாம் கேட்டுக் கோண்டிருப்பார். அதே போன்ற சீரியஸான (?) ட்ராக்கிங் காட்சிகள் எல்லாம் இதில் உள்ளன.

மஹிமா நம்பியார் போலீஸ் அதிகாரிகளை லெஃப்ட் ஹாண்டில் டீல் செய்யும் காட்சி, க்ளைமாக்ஸில் விஜய் ஆண்டனி கமிஷ்னர் ஆபீஸில் குதிரையில் வலம் வரும் காட்சிகள் எல்லாம் இது உண்மையில் சீரியஸ் படமா அல்லது இயக்குநரின் முந்தைய படங்களைப் போல ஸ்பூஃப் படமா என்ற குழப்பமே வந்துவிட்டது. விஜய் ஆண்டனி குதிரை ஓட்டும் காட்சியில் முகத்தை கட்டிக் கொண்டு குதிரை ஓட்டுகிறார். அவருக்கு குதிரை ஓட்டத் தெரியாது; அதனால் அப்படி ஒரு காட்சியை வைத்திருக்கலாம் என்று கூட விட்டுவிடலாம். ஆனால், விஜய் ஆண்டனியின் உருவத்தை ஒத்த ஒருவர் கூட கிடைக்கவில்லை. அவரது உடல் வாகுக்கு சம்பந்தமே இல்லாத ஒருவரை ‘டூப்’ ஆக போட்டு காமெடி செய்திருக்கிறார் இயக்குநர்.

வெறுப்புப் பேச்சு, ஆணவக் கொலை, சாதி அரசியல் பல விஷயங்களை பேச முயற்சி செய்திருந்தாலும், அதற்கான நியாயங்களை செய்யாததால் அவை பார்ப்பவரிடம் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. தொய்வான திரைக்கதை, அழுத்தமில்லாத காட்சியமைப்புகளால் தன்னுடைய முதல் சீரியஸ் முயற்சியில் கோட்டை விட்டுள்ளார் இயக்குநர். ‘ரத்தம்’ சுத்தமாக எடுபடவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

23 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்