பாசிட்டிவ் விமர்சனம் எதிரொலி: ‘சித்தா’ காட்சிகள் அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சித்தார்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சித்தா’ படத்துக்கு தொடர்ந்து நேர்மறை விமர்சனங்கள் வந்துகொண்டிருப்பதால் அப்படத்துக்காக காட்சிகளை திரையரங்க நிர்வாகங்கள் அதிகரித்துள்ளன.

நடிகர் சித்தார்த் தனது இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து நடித்துள்ள படம் ‘சித்தா’. இதை ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கியுள்ளார். திபு நினன் தாமஸ் இசை அமைத்துள்ளார். சித்தார்த்துக்கும் அவர் அண்ணன் மகளுக்குமான பாசப்பிணைப்பு தான் படத்தின் கதை. கடந்த 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து நேர்மறை விமர்சனங்களை பெற்று வருகிறது.

இப்படம் வெளியான அதே தேதியில் ராகவா லாரன்ஸ் நடித்த ‘சந்திரமுகி 2’ மற்றும் ஜெயம் ரவி நடித்த ‘இறைவன்’ ஆகிய இரண்டு படங்களும் வெளியாகின. ஆனால் இந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்தச் சூழலில், ‘சித்தா’ படம் தொடர்பாக பாசிட்டிவ் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரவியதால் சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள திரையரங்க நிர்வாகங்கள் ’சித்தா’ படத்துக்கான காட்சிகளை அதிகரித்துள்ளன.

இந்த நிலையில், ‘சித்தா’ திரைப்படம் வெளியான ஐந்து நாட்களில் உலகம் முழுவதும் ரூ.11.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE