சந்திரபாபு 2 வேடங்களில் நடித்த ‘சபாஷ் மீனா’

By செய்திப்பிரிவு

தனது பத்மினி பிக்சர்ஸ் மூலம் பி.ஆர்.பந்துலு தயாரித்து இயக்கிய படம், ‘சபாஷ் மீனா’. சிவாஜி ஹீரோவாக நடித்த இந்தப் படத்தின் மூலம், தெலுங்கில் நாயகியாக நடித்து வந்த மாலினி, தமிழில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கில் குறைவான படங்களில் மட்டுமே நடித்துள்ள மாலினி, ‘சபாஷ் மாப்பிள்ளை’ படத்தைத் தயாரித்து இயக்கிய எஸ்.ராகவனை திருமணம் செய்துகொண்டு, பின்னர் சினிமாவுக்கு முழுக்குப் போட்டார்.

சரோஜாதேவி, ரங்காராவ், வி.ஆர்.ராஜகோபால், நடராஜன் உட்பட பலர்நடித்த ‘சபாஷ் மீனா’ படத்தில் பார்வையற்றவராக, இயக்குநர் பி.ஆர்.பந்துலுவும் நடித்திருப்பார். இதன் கதையை எழுதியவர், தாதா மிராசி. வசனம் நீலகண்டன்.

எந்த பொறுப்புமின்றி நாடகம், சினிமா என ஜாலியாக ஊர்ச் சுற்றிக் கொண்டிருப்பவர் சிவாஜி. பணக்கார அப்பாவுக்கு இவர் பெரும் தலைவலியாக இருக்க, சென்னையில் இருக்கும் நண்பர் ரங்காராவிடம் அனுப்பி வைக்கிறார். தனக்குப் பதிலாக ரங்காராவின் வீட்டுக்கு நண்பர் சந்திரபாபுவை அனுப்பிவிடுகிறார் சிவாஜி. அவர் அங்கே ஜாலியாக இருக்க, சிவாஜி பணமில்லாமல் கஷ்டப்படுவார். ரங்காராவ் மகள் சரோஜாதேவிக்கு சந்திரபாபு மீது காதல். ஆனால், சந்திரபாபு அங்கிருந்து தப்பிக்கிறார். அவரைப் பிடிக்கச் செல்லும் ரங்காராவின் ஆட்கள், ரிக்‌ஷா இழுக்கும் இன்னொரு சந்திரபாபுவை அழைத்துச் செல்கிறார்கள். குப்பத்தில் பூ விற்கும் மாலினி மீது சிவாஜிக்கு காதல் வருகிறது. இந்தக் களேபரத்தின் முடிவு என்ன வாகிறது என்பது படம்.

இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார் சந்திரபாபு. படத்துக்காக, மயிலாப்பூரில் கைரிக்‌ஷா ஒன்றை வாடகைக்கு எடுத்து, அதை இழுப்பது பற்றிப் பயிற்சி எடுத்த அவர், அங்குள்ள ரிக்‌ஷாகாரர்களிடம் தினமும் பேசி சென்னைப் பேச்சுவழக்கையும் உடல் மொழியையும் கற்றுக்கொண்டார்.

இதில் தனது தோழனாக, சந்திரபாபுவை நடிக்க வைக்கச் சொன்னது சிவாஜி. இதைக் கேள்விப்பட்ட சந்திரபாபு, ‘ சிவாஜி, என் அருமை தெரிந்தவர் . நான் நடிக்க வேண்டுமானால் சிவாஜியின் சம்பளத்தை விட, ஒரு ரூபாய் அதிகம் வேண்டும்’ என்று கூற, அப்படியே கொடுத்து நடிக்க வைத்ததாகச் சொல்வார்கள்.

டி.ஜி.லிங்கப்பா இசை அமைத்த இந்தப் படத்தில் கு.மா.பாலசுப்பிரமணியன் பாடல்களை எழுதியிருந்தார். ‘சித்திரம் பேசுதடி எந்தன் சிந்தை மயங்குதடி’, ‘காணா இன்பம் கனிந்ததேனோ’, ‘ஆணாக பிறந்ததெல்லாம்’, ‘ஏறுங்கம்மா சும்மா ஏறுங்கம்மா’, ‘ஆசைக்கிளியே கோபமா என் அருகில் வரவும் நாணமா?’ உட்பட பாடல்கள் ஹிட்டாயின.

இந்தப் படம் வெற்றி பெற்றது. தமிழ் மட்டுமின்றி, கர்நாடகாவிலும் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் இந்தியில் ‘தில் தேரா தீவானா’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. அதையும் பி.ஆர்.பந்துலுவே இயக்கி இருந்தார். மலையாளத்தில் ‘சிரிகுடுக்கா’ என்ற பெயரிலும் கன்னடத்தில் ‘அலியா கெளயா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. 1958-ம் ஆண்டு இதே நாளில்தான் ‘சபாஷ் மீனா’ வெளியானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE