மாநகரம் - கச்சித சினிமா!

By உதிரன்

மாநகரம் திரையிடல் - டிசம்பர் 20-ம் தேதி | ரஷ்ய கலாச்சார மையம் | மதியம் 3:00 மணி

பிரச்சினைகள், நெருக்கடிகளால் 6 பேரின் சுற்றம், நட்புக்குள் ஏற்படும் மாற்றங்களும் திருப்பங்களுமே 'மாநகரம்'.

திருச்சியில் இருக்கும் ஸ்ரீ வேலை தேடி நம்பிக்கையோடு சென்னை வருகிறார். வேலை கிடைத்தால் காதலிப்பதாக சந்தீப் கிஷனிடம் ரெஜினா சொல்கிறார். மகனின் உடல்நலன் கருதி வாடகை கார் ஓட்டுகிறார் சார்லி. சின்ன ரவுடி கும்பல் தப்பாக ஒரு சிறுவனை கடத்துகிறது. பெரிய தாதா தன் மகனைக் கடத்தியவர்களை பழிவாங்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். ஒரு கும்பல் பெண்களின் முகத்தை பதம் பார்க்கும் நாச வேலையில் ஈடுபடுகிறது. இவர்கள் யார்? எப்படி எங்கு எதனால் சந்திக்கிறார்கள்? விளைவுகள் என்ன? என்பது மீதிக் கதை.

மூன்று பிரச்சினைகளை மையப்படுத்தி, நான்கு கோணங்களில் கதை சொல்லி, இரண்டு காதல் ஜோடிகளின் நிலையைப் பதிவு செய்த விதத்தில் அறிமுக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கெத்து.

பிரச்சினையில் சிக்கி செய்வதறியாது திகைத்து, கெட்ட வார்த்தைக்காக அசௌகரியம் உணர்ந்து, எதற்காக வந்தோமோ அதுவே வேண்டாம் என மறுத்து, நிதானம் இழந்து மீண்டும் நிலைமை புரிந்து, இன்னொரு ஒற்றை வார்த்தையில் அடையாளம் கண்டு அடிக்கும் கதாபாத்திரத்தில் ஸ்ரீயின் நடிப்பு அதகளம்.

காதலியின் அலட்சியத்தைத் தாங்கும் பக்குவம், ஒரு கும்பலின் வெற்று மிரட்டல், வேலைக்கான முயற்சி என சராசரி இளைஞனுக்காக கேரக்டர் ஸ்கெட்ச்சை கண்முன் நிறுத்துகிறார் சந்தீப் கிஷன். உடல்மொழியும், இன்னொருவர் மீதான அக்கறையும், தவறைத் தட்டிக்கேட்கும் கோபமும், சவாலை சந்திக்கும் முறையும் சந்தீப்பை தேர்ந்த நடிகனாகக் காட்டுகிறது.

ரெஜினாவுக்கு வழக்கமும் பழக்கமுமான கதாபாத்திரம். தோழியாக, காதலியாக தன் பாத்திரத்துக்கு நிறைவான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். அவரின் கண்கள் நுட்பமாக காதல் மொழி பேசுகின்றன.

முனீஸ்காந்த் நடிப்பில் பிரித்து மேய்கிறார். அவரின் அநாயசமான நடிப்பிலும், வசனத்திலும் தியேட்டர் வெடித்துச் சிரிக்கிறது. இறுதிக்காட்சியில் முனீஸ்காந்த் அப்ளாஸ் அள்ளுகிறார். சார்லி நடிப்புக்கான களத்தை சரியாக பயன்படுத்திக் கொள்கிறார். சின்ன ரவுடி கும்பலின் தலைவனாக வரும் அருண் அலெக்ஸாண்டரின் நடிப்பு மிரட்டல். மதுசூதனன், அவரது மகனாக வரும் அம்ரீஷ், சதீஷ், தீனா ஆகியோர் பொருத்தமான தேர்வு.

செல்வகுமாரின் ஒளிப்பதிவு மாநகரின் பின்னணியை, இருளின் அடர்த்தியை, வெளிச்ச முகங்களை நமக்குள் கடத்துகிறது. ஜாவுத் ரியாஸின் இசையில் தொல்லை செய்யும் காதல், இரவு வேட்டை ஆடுதே பாடல்கள் கவனிக்க வைக்கின்றன. பின்னணி இசை படத்துடன் பொருந்திப் போகிறது. ஃபிலோமின் கத்தரியால் படத்தை செதுக்கி இருக்கிறார்.

''கோடி பேருங்க இருக்காங்கன்னுதான் பேரு. நடுரோட்ல ஒருத்தனைப் போட்டு அடிச்சா ஏன்னு கேட்க ஒருத்தன் வரமாட்டான். நாம கேட்டிருக்கோமா சார்?, ''இங்கே வேலைதேடி வந்த நிறைய பேர் இந்த ஊரை திட்டிக்கிட்டேதான் இருக்காங்க. ஆனா, யாரும் ஊரை விட்டுப் போனதில்லை'' உள்ளிட்ட பல வசனங்கள் செம ஷார்ப்.

'மாநகரம்' குறித்த பொதுப்புத்தியின் பார்வையை, பாதுகாப்பை கேள்விக்குட்படுத்தி அதற்கான நியாயங்களை தர்க்க ரீதியாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். சென்னை நிழல் உலகத்தை அச்சு அசலாகப் பதிவு செய்திருக்கிறார். பிரச்சினை, ஆள் மாறி அடிப்பது, கடத்துவது என வழக்கமான குழப்பங்களையே முடிச்சுகளாக முன்நிறுத்தி, அதை சரியாக அவிழ்க்கும் விதம் சுவாரஸ்யம்.

ஒரு நபரால் ஏற்படும் பிரச்சினை, தொடர்ந்து இன்னொரு நபருக்கே பாதிப்பாக அமைவதைப் போன்ற காட்சி அமைப்புகள் நம்பும்படியாக இல்லை. அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடிந்தாலும் பரபரப்பு குறையாமல் தெளிவான திரைக்கதையில் நேர்த்தியாக காட்சிப்படுத்தி இருக்கிறார். இரு நாயகர்களின் பெயரை சொல்லாமல் கடைசிவரை கதை நகர்த்திய இயக்குநரின் புத்திசாலித்தனம் பாராட்டுக்குரியது.

மொத்தத்தில் 'மாநகரம்' கச்சித சினிமா!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்