திரை விமர்சனம்: சித்தா

By செய்திப்பிரிவு

பழநியில் துப்புரவு ஆய்வாளராக இருக்கும் ஈஸ்வரன் (சித்தார்த்), அண்ணி (அஞ்சலி நாயர்), அண்ணன் மகள் சுந்தரி (சஹஸ்ர ஸ்ரீ) ஆகியோருடன் வாழ்கிறார். சுந்தரி மீது உயிரையே வைத்திருக்கிறார். காவல்துறையில் பணியாற்றும் தன் நண்பன் வடிவேலுவின் அக்கா மகளும் சுந்தரியின் வகுப்புத் தோழியுமான பொன்னி (அபியா தஸ்நீம்) மீதும் பாசத்துடன் பழகுகிறார். ஆனால், பொன்னி பாலியல் வன்முறைக்கு உள்ளாக, பழி ஈஸ்வரன் மீது விழுகிறது. அதிலிருந்து ஈஸ்வரன் விடுபடும் தருணத்தில், சுந்தரியை அடையாளம் தெரியாத நபர் கடத்திச் செல்கிறார். சுந்தரி கிடைத்தாளா? பொன்னியை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியது யார்? இந்தத் தேடுதல் பயணத்தில் ஈஸ்வரனுக்கு நிகழ்வது என்ன? என்பது மீதிப் படம்.

சிறார் மீதான பாலியல் வன்முறை, அது குடும்பங்களிலும் சமூகத்திலும் ஏற்படுத்தும் தாக்கங்கள், அதைக் கையாள்வதற்குத் தேவையான புரிதல் ஆகியவை தொடர்பான சமூக விழிப்புணர்வுப் படத்தைப் பிரச்சார நெடி இல்லாமல் கொடுத்திருக்கிறார் இயக்குநர் அருண்குமார். ஒரு த்ரில்லருக்கேற்ற பரபரப்பான திரைக்கதை, அழுத்தமான வசனங்கள், அபாரமான காட்சிமொழி, தெளிவான சமூக - அரசியல் புரிதல் ஆகியவற்றுடன் மேம்பட்ட படைப்பாகக் கொடுத்திருக்கிறார்.

பாலியல் குற்றத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் அதிலிருந்து மீண்டுவந்து நிம்மதியாக வாழ்வதற்கானச் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்குப் பதிலாகக் குற்றவாளிகளைப் பழிவாங்குவதில் சில ஆண்கள் முனைப்புக் காண்பிப்பதையும், குடும்ப கவுரவம், வீரம், மானப் பிரச்சினை என அதன் பின்னால் இயங்கும் ஆணாதிக்க விழுமியங்களை அழுத்தமாகப் பதிவு செய்திருப்பதும் வரவேற்புக்குரியது. பொன்னியும் சுந்தரியும் தனியாக ஓர் இடத்துக்குப் பயணிக்கும் இடத்தில் தொற்றிக்கொள்ளும் பரபரப்பு, இறுதிவரை தொய்வின்றித் தொடர்கிறது. குறிப்பாகச் சுந்தரி தொலைந்துபோகும் இடைவேளைக் காட்சியும் இரண்டாம் பாதியில் வரும் வாகனப் பரிசோதனைக் காட்சியும் பரபரப்பின் உச்சிக்கே கொண்டு சென்றுவிடுகின்றன.

இத்தகைய திரைக்கதையில் உணர்வுபூர்வமான உச்சங்களைத் தொடும் காட்சிகளுக்கும் பஞ்சமில்லாமல் இருப்பது மேம்பட்ட திரைக்கதைக்குச் சான்று. ஈஸ்வரன் மீது பழி விழுந்திருக்கும் நேரத்தில் அவன் ஏன் சுந்தரியை விட்டுவிட்டுப் பொன்னியைத் தனியாக அழைத்துச் சென்றான் என்னும் கேள்வியை இயல்பாக அவன் காதலி சக்தி (நிமிஷா சஜயன்) கேட்க, அதற்கு ஈஸ்வரனின் எதிர்வினை, பொன்னிக்கு நேர்ந்த கொடுமைக்குப் பிறகு சுந்தரியின் அம்மாவிடம் வெளிப்படும் மாற்றங்கள் எனப் பல நுட்பமானத் தருணங்கள் வியக்க வைக்கின்றன.அதே நேரம், பாலியல் குற்றத்தின் தீவிரத்தை விரிவாக உணர்த்திவிட்ட பிறகு குற்றவாளியின் செயல்பாடுகளை இவ்வளவு விரிவாகக் காண்பித்திருக்க வேண்டுமா? என்னும் கேள்வி எழுகிறது.

சித்தார்த், சிறுநகரத்து இளைஞனாக மாறியிருக்கிறார். அண்ணன் மகளிடம் அன்பு காண்பிப்பது, பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்வது, தன் மீது காண்பிக்கும் கோபத்தைக் கடந்துசெல்வது எனக் கனிவும் முதிர்ச்சியும் மிக்கவராக மனதில் பதிகிறார். தனக்கென்று சமூகப் பார்வை உள்ளவராகவும் நாயகனை நல்வழிப்படுத்துபவராகவும் அமைக்கப்பட்டுள்ள சக்தி கதாபாத்திரத்தின் மூலம் நிமிஷா சஜயனுக்கு தமிழில் சிறப்பான அறிமுகம் அமைந்துள்ளது.
குழந்தைகள் சஹஸ்ரா ஸ்ரீ, அபியா தஸ்நீம் இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

அஞ்சலி நாயர் உட்பட அனைவரும் நடிப்பைக் குறையின்றித் தந்துள்ளனர். திபு நிணன் தாமஸ் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை காட்சிகளுக்கு வலுசேர்த்திருக்கிறது. பாலாஜி சுப்ரமணியனின் ஒளிப்பதிவும் சுரேஷ் ஏ.பிரசாத்தின் படத்தொகுப்பும் திரைக்கதைக்குத் தக்க துணை புரிந்திருக்கின்றன.சிறார் பாலியல் வன்முறையை எப்படித் தடுப்பது. அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி உதவுவது என்பது குறித்த புரிதலை மேம்படுத்திக் கொள்ள அனைவரும் பார்க்க வேண்டிய படம் ‘சித்தா’.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE