சின்ன படங்கள் தயாரிக்க வரவேண்டாம் என்பதா? - நடிகர் விஷாலுக்கு தயாரிப்பாளர் எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

ஹங்க்ரி வுல்ஃப் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கார்த்திக் வெங்கட்ராமன் தயாரித்துள்ள படம், ‘எனக்கு என்டே கிடையாது’. விக்ரம் ரமேஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராக நடித்துள்ளார். தயாரிப்பாளரான கார்த்திக் வெங்கட்ராமன் இன்னொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கதாநாயகியாக ஸ்வயம் சித்தா நடித்துள்ளார். தளபதி ரத்னம் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலாச்சரண் இசையமைத்துள்ளார். அக். 6-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தை ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் சார்பில் ஜெனிஷ் வெளியிடுகிறார். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. தயாரிப்பாளர் கார்த்திக் வெங்கட்ராமன் கூறியதாவது:

அடிப்படையில் வழக்கறிஞர் என்றாலும் நடிப்பு ஆர்வத்தில் பயிற்சி எடுத்தேன். கடந்த ஏழு வருட தவமாக தற்போது இந்தப் படத்தைத் தயாரித்துள்ளேன். ஒவ்வொரு முறையும் இந்தப் படத்தை தொடங்க முயற்சிக்கும்போது தடங்கல்கள் ஏற்பட்டு தள்ளிப்போனது. ஆனாலும் ‘எனக்கு என்டே கிடையாது’ என்கிற எங்கள் படத்தின் டைட்டிலை எனக்குச் சொல்லி உற்சாகப்படுத்திக் கொண்டேன். இந்தப் படத்தில் மூன்று பேருக்கு இடையே ஏற்படும் சிறிய போராட்டம் ஒன்று இருக்கிறது. இதற்கு ஸ்டன்ட் மாஸ்டரை வைத்து படமாக்கினால் நன்றாக இருக்கும் என்பதால் ஓம் பிரகாஷை அழைத்தோம். அவர் அதை ஒரு பிரமாதமான சண்டைக் காட்சியாகவே அமைத்துக் கொடுத்தார்.

சமீபத்தில் நடிகர் விஷால் பேசும்போது மூன்று கோடி, நான்கு கோடி வைத்துக்கொண்டு சின்ன படங்களைத் தயாரிக்கிறோம் என யாரும் வர வேண்டாம் என கூறியிருந்தார். இதுவே ஒரு விதமான சனாதானம் தான். இப்படி சொல்ல யாருக்குமே உரிமை இல்லை. இவ்வாறு கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE