இறுதி நிகழ்வுகளைக் கூட செய்யவிடாமல் தடுப்பது எந்த விதத்தில் சரி? - நடிகர் சங்கம் கேள்வி

By செய்திப்பிரிவு

சென்னை: எதிர்பாராத இழப்பினால் அதிர்ச்சியில் உறைந்து கிடக்கும் குடும்பத்தினர், ஊடக நெருக்கடியில் சிக்கி இறுதி நிகழ்வுகளைக்கூட முழுமையாக செய்யவிடாமல் தடுப்பது எந்த விதத்தில் சரியானது? என்று தென்னிந்திய நடிகர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: திரையுலகில், நடிகர்களின் படைப்புகளும் செயல்பாடுகளும் பொது மக்களின் பாராட்டுகளிலும், கவனிப்புகளிலுமே புகழடைகிறது. அதற்கு பெரும் பங்காற்றுவது ஊடகத்துறையும், ஊடகவியலார்களும்தான். அக்கலைஞர்களை, படைப்புகளைத் தாண்டி அவர்களது குடும்பம் மற்றும் திறமைகள், குணாதிசயங்கள், சமூக பங்களிப்புகள் போன்றவற்றை மக்களுக்கு கொண்டு செல்வதில் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி, இணைய ஊடகங்களின் பங்களிப்பு பெரும் பங்காற்றுகிறது.

ஆனால் சமீபத்தில் எதிர்பாராமல் மறைந்த மாரிமுத்து, விஜய் ஆண்டனி அவர்களின் மகள் இழப்பின் போது ஊடகத்துறை நண்பர்கள் நடந்து கொண்டது பலரையும் முகம் சுழிக்கவைத்துள்ளது. இறுதி நிகழ்வில் நடந்த ஊடகத்துறையினரின் செயல்பாடுகள் எல்லை மீறி பலரையும் சங்கடத்திலும், விமர்சனத்திற்கு உள்ளாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறோம்.

துயரம் தரும் செய்திகள் சம்பந்தப்பட்டோரை சேரும் முன்பே, தவறான தகவலால் பரபரப்பாக்குவதும், அதிர்ச்சியால் உடைந்து துயரத்தில் நிற்கும் குடும்பத்தை ஊடக நெருக்கடிக்கு உள்ளாக்குவதும் எந்தவிதத்தில் நியாயப்படுத்துவது? துயரத்தால் தாக்குண்டோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல வரும் கலைஞர்களையும், ஊடக பரபரப்பிற்கு உள்ளாக்குவது எந்தவிதத்தில் சரியானது?

எதிர்பாராத இழப்பினால் அதிர்ச்சியில் உறைந்து கிடக்கும் குடும்பத்தினரும், துக்கம் விசாரிக்க வந்த உறவினர்களும் அவர்களுக்கு உதவ வந்த கலைத்துறை நண்பர்களும், ஊடக நெருக்கடியில் சிக்கி, இறுதி நிகழ்வுகளைக்கூட முழுமையாக செய்யவிடாமல் தடுப்பது எந்த விதத்தில் சரியானது?

கலைஞர்களின் இறுதி நிகழ்வை மக்களுக்கு கொண்டு சென்று நிரந்தர புகழ் சேர்க்கவேண்டும் என்ற ஊடக நண்பர்களின் செயல்பாட்டின் எல்லைகள் எதுவரை? எதிர் காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க ஊடக செயல்பாட்டின் எல்லைகளை தீர்மானிக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

எங்கள் கலைஞர்களின் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பொறுப்புணர்ந்து உங்களுக்குள் தீவிரமான சுயக்கட்டுப்பாட்டை ஊடகத் தோழர்கள் கொண்டு வர வேண்டும். அரசும் இதை கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்பதே எம் வேண்டுதல்” இவ்வாறு நாசர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE