விரைவில் முடிவுக்கு வருகிறது ஹாலிவுட் எழுத்தாளர்கள் போராட்டம்

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: நூறு நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் ஹாலிவுட் எழுத்தாளர்கள் போராட்டம் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹாலிவுட் சினிமா எழுத்தாளர்கள் கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பளப் பற்றாக்குறை, ஏஐ அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு எதிராக ‘ரைட்டர்ஸ் கில்ட் ஆஃப் அமெரிக்கா’ என்ற அமைப்பு கடந்த மே மாத தொடக்கம் முதல் போராடி வருகிறது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு அமைப்புகளும் ஆதரவு அளித்து வருகின்றன. சினிமா மற்றும் தொலைகாட்சி தொடர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் கதை எழுதுவதை தடுக்க வேண்டும் எனவும், சம்பள உயர்வு கோரியும் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளில் ஹாலிவுட் திரைப்பட மற்றும் தொலைகாட்சி தொடர் எழுத்தாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது இதுவே முதல் முறை. இந்த போராட்டத்துக்கு ஹாலிவுட் திரைப்பட நடிகர்கள் கூட்டமைப்பும் ஆதரவு அளித்துள்ளது.

இந்த நிலையில் 100 நாட்களுக்கு மேலாக நீடித்து வரும் இந்த போராட்டம் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஹாலிவுட் எழுத்தாளர்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகளும், தயாரிப்பாளர்களும் சந்திந்து பேசியதாகவும், இந்த பேச்சுவார்த்தையில் எழுத்தாளர்களின் கோரிக்கைகளை தயாரிப்பாளர்கள் தரப்பு ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த போராட்டம் முடிவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தங்களுடைய கோரிக்கைகள் முழுமையாக ஏற்கப்படபில்லை என்றால் இந்த போராட்டத்தை ஆண்டு இறுதிவரை நீட்டிக்க ஹாலிவுட் எழுத்தாளர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மே மாதம் தொடங்கிய இந்த போராட்டத்தால் ஹாலிவுட் உலகம் பெருமளவில் முடங்கிப் போனது. இறுதிகட்டத்தில் இருந்த பெரிய படங்களின் பணிகள் அனைத்தும் அப்படியே நின்றன. இதனால் பல படங்களின் வெளியீடுகள் தள்ளிவைக்கப்பட்டன. ஹாலிவுட் நிறுவனங்கள் தாண்டி நெட்ஃப்ளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி நிறுவனங்களின் படைப்புகளுக்கான பணிகளும் இதனால் பாதிக்கப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE