காவிரி விவகாரம் | ''இரு மாநில தலைவர்களும் இணைந்து சுமூக தீர்வு காண வேண்டும்'' - கன்னட நடிகர் சிவராஜ்குமார் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

பெங்களூரு: காவிரி பிரச்சினையில் இரு மாநில தலைவர்களும் சுமூக தீர்வை எட்டவேண்டும் என்று கன்னட நடிகர் சிவராஜ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

காவிரியில் தமிழகத்துக்கு விநாடிக்கு 5,000 கன அடி வீதம் நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு தடை கேட்டு உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இன்னொரு பக்கம் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கக் கூடாது என்று வலியுறுத்தி கர்நாடக விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களுக்கு நடுவே காவிரி பிரச்சினையில் வாய் திறக்காமல் மவுனம் காக்கும் கன்னட நடிகர்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பல்வேறு கன்னட அமைப்புகள் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளன. அவர்களது படங்களை புறக்கணிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்தன.

இந்த நிலையில், காவிரி பிரச்சினை தொடர்பாக நடிகர் சிவராஜ்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: விவசாயிகள்தான் நம் நாட்டின் முதுகெலும்பு. காவிரி ஆறு தான் நம் விவசாயிகளின் முதுகெலும்பு. போதிய மழை இன்றி விவசாய சமுதாயம் ஏற்கெனவே போராடி வருகிறது. இரு மாநில தலைவர்களும், நீதித்துறையும் இந்த விவகாரத்தில் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து ஒரு சுமூக தீர்வை எட்ட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்”. இவ்வாறு சிவராஜ்குமார் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE