ராபின் ஹூட் ஸ்டைலில் உருவான ‘நீலமலைத் திருடன்’

By செய்திப்பிரிவு

சாண்டோ சின்னப்பா தேவர், தனது நண்பர் எம்.ஜி.ஆர் நடிப்பில் உருவாக்க நினைத்த படம், ‘நீலமலைத் திருடன்’. அவருக்குப் பொருத்தமான கதை இது. ஆனால், எம்.ஜி.ஆர் அப்போது தனது சொந்த தயாரிப்பான ‘நாடோடி மன்னன்’ உட்பட சில படங்களில் பிசியாக இருந்ததால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. இதனால் ஆர்.ரஞ்சனை நாயகனாக்கி, தேவர் உருவாக்கிய படம் ‘நீலமலைத் திருடன்’.

‘தாய்க்குப் பின் தாரம்’ படத்தின் தெலுங்கு டப்பிங்கில் தனக்கு வேறு ஒருவரின் குரலை ‘டப்’ செய்து தேவர் வெளியிட்டது தொடர்பாக, எம்.ஜி.ஆருக்கும் சின்னப்பா தேவருக்கும் ஊடல் ஏற்பட்டிருந்த காலம் அது. அதனால் ரஞ்சனை ஹீரோவாக நடிக்க வைத்ததில் எம்.ஜி.ஆருக்கு வருத்தம் என்பார்கள். (பிறகு எம்.ஜி.ஆர் நடித்த ‘தாய் சொல்லைத் தட்டாதே’, ‘தாயைக் காத்த தனயன்’, ‘தர்மம் தலைகாக்கும்’ என்று பல வெற்றிப் படங்களை எடுத்த தேவர், நட்பைக் கடைசி வரை தொடர்ந்தார்).

ராபின் ஹூட் ஸ்டைலில் உருவாக்கப்பட்ட ‘நீலமலைத் திருடன்’ படத்துக்குக் கதை, வசனத்தை அய்யா பிள்ளை எழுதினார். வழக்கம்போல எம்.ஏ.திருமுகம் இயக்கினார். ரஞ்சனுக்கு ஜோடியாக அஞ்சலி தேவி, பி.எஸ்.வீரப்பா, டி.எஸ்.பாலையா, கே.ஏ.தங்கவேலு, எம்.கே.ராதா, கண்ணாம்பா, ஈ.வி.சரோஜா உட்பட பலர் நடித்தனர்.

எம்.கே.ராதாவின் சகோதரி கண்ணாம்பா, சகோதரர் பி.எஸ்.வீரப்பா. ராதாவின் மகன் ரஞ்சன், கண்ணாம்பா மகள் அஞ்சலி தேவி. குடும்பச் சொத்து முழுவதும் தனக்கே வேண்டும் என்ற எண்ணம் வீரப்பாவுக்கு. தம்பியின் தீய எண்ணத்தை அறிந்த ராதா, மகனை கண்ணாம்பாவிடம் பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டுத் தப்பிக்கிறார். தனது ஆட்களிடம், அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, கொல்லச் சொல்கிறார் வீரப்பா. வளர்ந்த சிறுவன் ரஞ்சன், வீரப்பாவின் சதியை எப்படி அம்பலப்படுத்துகிறார் என்பது கதை. அதோடு இக்பால் என்ற குதிரையும் டைகர் என்ற நாயும் இதில் கதாபாத்திரங்களாகவே நடித்தன.

ஒரு காட்சியில், ரஞ்சனை வில்லன் ஆட்கள் பிடித்துவிடுவார்கள். இதைக் கவனிக்கும் நாய், குதிரையைத் தேடிக் கண்டுபிடித்து அதன் மீதமர்ந்து ரஞ்சனை நோக்கி வரும். இரண்டும் சேர்ந்து ரஞ்சனைக் காப்பாற்றும் காட்சி அப்போது அதிகமாக ரசிக்கப்பட்டது.

கே.வி.மகாதேவன் இசையில் தஞ்சை ராமையா தாஸ், ஏ.மருதகாசி, புரட்சித்தாசன் பாடல்கள் எழுதியிருந்தனர். ‘சித்திரை மாத நிலவு’, ‘கொஞ்சும் மொழி பெண்களுக்கு’, ’வெத்தலை பாக்கு’, ‘சத்தியமே லட்சியமாய்’,‘சிரிக்கிறான் முறைக்கிறான்’உட்பட பாடல்கள் வரவேற்பைப் பெற்றன.

ரஞ்சனின் நடிப்பு, இனிமையான இசை , குதிரை மற்றும் நாயின் சாகசம் ஆகியவை படத்தை ரசிக்க வைத்தன. 1957ம் ஆண்டில் இதே நாளில்தான் இந்தப் படம் வெளியானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE