விஜயகுமாரி ரத்தம் சிந்தி நடித்தப் படம் ‘பூம்புகார்’

By செய்திப்பிரிவு

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் 'கோவலன்' என்ற பெயரில் நாடகமாக நடத்தப்பட்டு வந்தது. அதை, 1942-ம் ஆண்டு ஜுபிடர் பிக்சர்ஸ் ‘கண்ணகி’ என்ற பெயரில் படமாகத் தயாரித்தது. கண்ணகியாக கண்ணாம்பாவும், கோவலனாக பி.யு.சின்னப்பாவும் நடித்தனர். இதே கதையை இன்னும் கொஞ்சம் கற்பனைக் கலந்து அருமையான வசனங்களோடு உருவாக்க நினைத்தார், முன்னாள்முதல்வர் மு.கருணாநிதி. அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘பூம்புகார்’.

கண்ணகியாக விஜயகுமாரி, கோவலனாக எஸ்.எஸ்.ராஜேந்திரன், மாதவியாக ராஜஸ்ரீ, கவுந்தியடிகளாக கே.பி.சுந்தராம்பாள் நடித்தனர். நாகேஷ், மனோரமாவும் உண்டு. ப.நீலகண்டன் இயக்கிய இந்தப் படத்துக்கு ஆர். சுதர்சனம் இசை அமைத்தார். பாடல்களை உடுமலை நாராயண கவி, மாயவநாதன், ஆலங்குடி சோமு, மு.கருணாநிதி, ராதாமாணிக்கம் எழுதி இருந்தனர்.

ராதாமாணிக்கம் வரிகளில் ‘என்னை முதன் முதலாகப் பார்த்தபோது’, உடுமலை எழுதிய ‘பொன்னாள் இது போல’, மு.கருணாநிதி எழுதி, கே.பி.சுந்தராம்பாள் பாடிய ‘வாழ்க்கை எனும் ஓடம்’, மாயவநாதன் எழுதிய, ‘தப்பித்து வந்தானம்மா’, ‘அன்று கொல்லும் அரசின் ஆணை’, ‘காவிரி பெண்ணே’, ‘தமிழ் எங்கள் உயிரானது’, ‘துன்பமெல்லாம்’. ஆலங்குடி சோமு எழுதிய ‘இறைவா’, ‘பொட்டிருந்தும் பூவிருந்தும்’ உட்பட 11 பாடல்கள் படத்தில். இதில் ‘என்னை முதன் முதலாகப் பார்த்தபோது’ பாடலும் ‘வாழ்க்கை எனும் ஓடம்’ பாடலும் செம ஹிட்.

தீவிர முருக பக்தையான சுந்தராம்பாள் எப்போதும் நெற்றியில் திருநீறு அணிந்தபடி இருப்பார். ஆனால், இதில் திருநீறுஇல்லாமல் சமணத்துறவி கவுந்தியடிகளாக அவர் நடிக்க வேண்டும் என்பதால் முதலில் நடிக்க மறுத்துவிட்டார்.

இந்தி எதிர்ப்புக்காகக் கைது செய்யப்பட்ட மு.கருணாநிதியை, மதுரை சிறையில் இருந்து திருச்சி சிறைக்குக் கொண்டு சென்றுகொண்டிருந்தனர். சாலையில் சுந்தராம்பாளின் வாகனம் சென்றதைப் பார்த்த கருணாநிதி, போலீஸாரிடம் அதை நிறுத்தச் சொன்னார். அப்போது அவரைச் சமாதானப்படுத்தி, நெற்றியில் ஒரு கோடாக நாமத்தைப் போட்டு இதில் நடிக்கச் சம்மதிக்க வைத்தாராம்.

படத்தில் இடம்பெற்ற ‘அன்று கொல்லும் அரசின் ஆணை வென்றுவிட்டது/நின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்று விட்டது?’ என்ற பாடல் வரியைப் பாட மறுத்துவிட்டார் சுந்தராம்பாள். இறைவனைக் கேலி செய்வதாக அந்த வரிகள் வருகிறது எனக் கூறிவிட்டார். பிறகு, "அன்று கொல்லும் அரசின் ஆணை வென்றுவிட்டது/ நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது” என்று மாயவநாதன் எழுதிய வரியைக் கருணாநிதியே மாற்றினாராம். பிறகுதான் அவர் பாடினார்.

இந்தப்படத்தில் நடிக்கும்போது விரதம் இருந்து நடித்ததாகக் கூறியிருக்கிறார், கண்ணகியாக நடித்த விஜயகுமாரி. அந்தக் காலத்தில், நடிக்கும்போதே குரல் பதிவும் நடக்கும். படத்துக்காகப் பிரம்மாண்ட தர்பார் செட்அமைத்திருந்தார்கள். மைக் மிகவும் உயரத்தில் கட்டப்பட்டிருந்தது. சத்தம் துல்லியமாகக் கேட்க வேண்டும் என்பதற்காகக் கத்தியபடியே பேசியிருக்கிறார், விஜயகுமாரி. இதனால், ஒரு முறைகத்திப்பேசும்போது அவர் தொண்டையில் இருந்து ரத்தம் வர ஆரம்பித்துவிட்டது. ரத்தம் சிந்தி நடித்த படம் இதுஎன்று அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

சென்னை, கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த, கண்ணகி சிலை இந்தப் படத்தில் விஜயகுமாரி நின்ற தோற்றத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டதுதான். கருணாநிதியின் அனல் பறக்கும் வசனத்தாலும் எஸ்.எஸ்.ஆர், விஜயகுமாரி ஆகியோரின் சிறந்த நடிப்பாலும் மறக்க முடியாத ‘பூம்புகார்’, இதே நாளில்தான் 1964-ம் ஆண்டு வெளியானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE