போதும் உந்தன் ஜாலமே: கடன் வாங்கி கல்யாணம்

By செய்திப்பிரிவு

தமிழ், தெலுங்கில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் முன்னோடி இயக்குநர், தயாரிப்பாளர், எல்.வி.பிரசாத். கல்யாணம் பண்ணிப்பார், மனோகரா, மிஸ்ஸியம்மா உட்பட பல படங்களை இயக்கிய இவர், காமெடி நையாண்டியை மையமாக வைத்து உருவாக்கிய படம், ‘கடன் வாங்கி கல்யாணம்’.

இதன் திரைக்கதையை சக்கரபாணி, பிரசாத், சதாசிவபிரம்மம் என 3 பேர் அமைத்திருந்தார்கள். வசனம், பாடல்களை தஞ்சை ராமையாதாஸ் எழுதினார்.ஜெமினி கணேசன், சாவித்திரி, டி.எஸ்.பாலையா, தங்கவேலு, ரங்காராவ், ஈ.வி.சரோஜா, டி.ஆர்.ராமச்சந்திரன்உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெமினி கணேசன் பெயர், ஆர்.கணேசன் என்றே டைட்டிலில் போட்டிருக்கும்.

கண்டபடி கடன் வாங்கிவிட்டு அதைத் திருப்பித் தராதக் குணம் கொண்டவர் டி.எஸ்.பாலையா.கடன் வாங்குவதைத் தொழிலாகவே செய்பவர். அவர் மகன் டி.ஆர்.ராமச்சந்திரன். மருமகள்ஜமுனா. ஜமுனாவின் அண்ணன் ஜெமினி கணேசன். அவர் காதலி சாவித்திரி. டி.எஸ்.பாலையாவின் கிளர்க் தங்கவேலு. அவர் காதலி, ஈ.வி.சரோஜா. இவர்களைச் சுற்றி நடக்கும் கதைதான் படம். ஜெமினி - சாவித்திரி, டி.ஆர்.ராமச்சந்திரன்- ஜமுனா, தங்கவேலு- ஈ.வி.சரோஜா என 3 காதல்ஜோடிகள்.

இவர்கள் காதலுக்கு ஏகப்பட்ட தடைகள். கடன் வாங்கி சொகுசாக வாழும் பாலையா உள்ளிட்டவர்களுக்குப் பாடம் கற்பிக்க, ஜெமினி பல மாறுவேடங்களைப் போட்டு எப்படி திருத்துகிறார் என்பதுதான் கதை. அந்தக் காலகட்ட நடைமுறைகளை வைத்து காமெடி பண்ணியிருப்பார்கள் படத்தில்.

இப்போது பார்த்தாலும் சுவாரஸ்யமாகவே இருக்கிறது. எஸ்.ராஜேஷ்வர ராவ் இசை அமைத்திருந்தார். ‘கையும் கையும் கலந்திடவா ஜாலியாகவே’, ‘காலமில்லாத காலத்திலே’, ‘எங்கிருந்துவீசுதோ’, ‘போதும் உந்தன் ஜாலமே’, ’ராமராமசரணம்’, ‘தூத்துக்குடி சாத்துக்குடி நான் சொல்லுறத ஏத்துக்கடி’,‘ஆனந்தம் பரமானந்தம்’, ‘தாராவின் பார்வையிலே ஓ வெண்ணிலாவே’ உட்பட அனைத்துப் பாடல்களும் வரவேற்பைப்பெற்றன. அதிலும் ‘தூத்துக் குடி சாத்துக்குடி’ செம ஹிட்.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் உருவானது இந்தப் படம். தெலுங்குக்கு சாவித்திரி, ஜமுனாவை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற நடிகர்களை மாற்றி விட்டார்கள். ‘அப்பு சேசி பப்பு கூடு’ (Appu Chesi Pappu Koodu)என்ற அந்தத் தெலுங்குப் படத்தில் ஹீரோவாக என்.டி.ராமராவ் நடித்தார். தெலுங்கில் 1959-ம் ஆண்டு ஜன.14-ல் வெளியான இந்தப் படம், தமிழில் 1958-ம் ஆண்டில் இதே தேதியில்தான் வெளியானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE