“நானே பொறுப்பு... இது எனக்கு ஒரு பாடம்” - இசை நிகழ்வு குளறுபடிக்கு வருந்தும் ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை அருகே நடந்த ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்காக மிகவும் வருந்துவதாகவும், அதற்கு தானே பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

சென்னை பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நேற்று (செப்.10) நடைபெற்றது. இதற்கான பொறுப்பு, சென்னையைச் சேர்ந்த ஏசிடிசி என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலரும் உள்ளே கூட செல்ல முடியாமல் வெளியிலேயே நிறுத்தப்பட்டனர். இதனால், கிழக்கு கடற்கரை சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோல்டு, பிளாட்டினம், சில்வர் என பல்லாயிர ரூபாய்க்கு டிக்கெட் வாங்கிய பலரும் இசை நிகழ்ச்சியை பார்க்காமல் வீடு திரும்பியதாக குற்றம்சாட்டியுள்ளனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் நிரம்பி வழிந்ததால் பலருக்கும் மயக்கம், மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும் விமர்சித்து பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் ரசிகர்களின் மன்னிப்பு கோரியிருந்தது.

இந்நிலையில், ‘தி இந்து’ ஆங்கில செய்தித் தளத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த சிறப்புப் பேட்டியில், "மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிக்கு சுனாமி போல் வந்த மக்களின் அன்பு வெள்ளத்தை எங்களால் கையாள முடியவில்லை. ஓர் இசையமைப்பாளராக என்னுடைய பணி, ரசிகர்களுக்கு மறக்க முடியாத இசை நிகழ்ச்சியை கொடுக்க வேண்டியதுதான். எனவே, அனைத்து ஏற்பாடுகளும் சரியாக நடக்கும் என்றுதான் நம்பியிருந்தேன். மழை வரவில்லை, அதனால் சந்தோஷத்துடன் இசை நிகழ்ச்சியை நான் நடத்திக் கொண்டிருந்தேன். வெளியே என்ன நடந்தது என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு உற்சாகமான அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கமாக இருந்தது. இசை நிகழ்ச்சிக்கு வந்தவர்களின் விவரங்களை சேகரித்து வருகிறோம். விரைவில், ரசிகர்களை நாங்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்துவோம்.

நடந்த சம்பவத்துக்காக நாங்கள் மிகவும் வருந்துகிறோம். பெண்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புதான் மிகவும் முக்கியம். இந்தக் குளறுபடிகளுக்காக நான் வேறு யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை. அதேநேரம், நகரம் விரிவடையும்போது இசை மற்றும் கலையை நேசிக்கும் ரசனையும் விரிவடைந்துள்ளதை உணர்கிறோம். ரசிகர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்திடும் வகையில்தான், இந்த இசை நிகழ்ச்சி மோசமான வானிலை காரணமாக கடைசி நேரத்தில், ஆகஸ்ட் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த ஏசிடிசி அமைப்பினர், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் 46,000 இருக்கைகளை போட்டிருந்தனர். நிகழ்ச்சியைக் காண வந்த பலரும் ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு, மற்ற இடங்களில் போடப்பட்டிருந்த இருக்கைகளுக்குச் செல்லவில்லை. இதனைப் பார்த்த பணியில் இருந்த காவலர்கள், அரங்கம் நிரம்பிவிட்டதாக கருதி வாயில் கதவுகளை அடைத்துவிட்டனர். இந்த நேரத்தில், இசை நிகழ்ச்சியும் தொடங்கிவிட்டது.

புயல் போன்றதொரு அந்தத் தருணத்தை சமாளிக்க நாங்கள் சரியாக திட்டமிடவில்லை. கடந்த ஆண்டு அமெரிக்காவில் 20 இசை நிகழ்ச்சிகளை நடத்தினோம். அதில் எந்த பிரச்சினையும் குழப்பமும் இல்லை. காரணம், அங்கு பின்பற்றப்படும் நடைமுறைகளை நாங்கள் வெகுவாக நம்பினோம். இதுநாள் வரையில், இந்தியாவில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளில், அதிகளவு டிக்கெட் விற்பனையான நிகழ்ச்சி ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சிதான் என்பது மிகப் பெரிய சாதனை. ஆனால், அதைவிட முக்கியம் நிகழ்ச்சியைக் காண வந்திருந்த ரசிகர்களை எவ்வாறு நடத்தினோம் என்பதுதான். நானும் எந்தப் பாடலை யார் பாடப் போகிறார்கள், அதில் வரும் எந்த இசை ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என்ற மனநிலையில், இசை சார்ந்த பணிகளை மேற்கொண்டிருந்தேன்.

உலக அளவிலான இசை அனுபவத்தைப் பெற உலகத்தரமான அனுபவங்கள் தேவை. இது எனக்கு ஒரு பாடம். ஒரு இசை கலைஞனாக மட்டுமின்றி, நிகழ்ச்சி நடைபெறும் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை பார்க்க வேண்டும் என்பதை தெரிந்துகொண்டேன். நான் உலகின் பல்வேறு வகையான இசை வடிவங்களைப் பார்க்கும்போது, இந்த அனுபவங்களை நம் மக்களுக்கும், குறிப்பாக சென்னையிலும் கொடுக்க வேண்டும் என்று எண்ணியது உண்டு. அதற்கு அவர்கள் தகுதியானவர்களும்கூட. ஆனால், என்ன கொடுக்கிறோமோ, அதுவே நமக்கு திரும்பக் கிடைக்கும் என்பதை நேற்றைய நிகழ்ச்சியின் மூலம் தெரிந்துகொண்டோம்.

கடந்த 30 ஆண்டுகாலமாக ரசிகர்கள் கொண்டாடிய ஹிட்டான பாடல்கள் இடம்பெற்றிருந்த ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியைப் பொறுத்தவரை, 90 சதவீதம் வெற்றி 10 சதவீதம் தோல்வி. ஆயிரக்கணக்கான மக்கள் அரங்கினுள் இசை நிகழ்ச்சியை மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தனர். சென்னை ரசிகர்கள் காட்டிய அன்பு அளப்பறியது.

சென்னை மக்கள் காட்டும் அன்பும் கொண்டாட்டமும் அளப்பரியது. சில நேரம் நான் அதிகம் நேசிக்கும் விஷயம்தான் நம்மை விட்டுச் சென்றுவிடும். இங்கும் அதுதான் நடந்துள்ளது என்றே தோன்றுகிறது. சென்னையை கலைகளின் தலைநகரமாக மாற்றுவதே என்னுடைய லட்சியம். ஆனால் நடந்த நிகழ்வுக்கு, நான் யாரையும் நோக்கி கைகாட்ட விரும்பவில்லை. ஏனெனில், மக்கள் எனக்காக மட்டுமே இசை நிகழ்ச்சிக்கு வருகின்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்காக அல்ல.

நாங்கள் இதை எதிர்கொண்டு சரி செய்வோம். ஏனெனில் ஒவ்வொரு ஆன்மாவும் எனக்கு முக்கியம். நான் என் மகன் அமீனிடம் சொல்வது இதைத்தான்: பார்ட்னர்ஷிப் முறையில் நாம் எதுவும் செய்யலாம். ஆனால், மக்கள் பார்ட்னர் யாரென்று பார்க்கமாட்டார்கள். அவர்களை நம்மைத்தான் பார்ப்பார்கள். பார்ட்னர்ஷிப்கள் மறைந்து விடும். ஆனால் நாம் அப்படியேதான் இருப்போம். இனி நான் ஓர் இசை நிகழ்ச்சியின் அம்சங்களை தாண்டியும் சிந்திக்க வேண்டும். இனி இதுபோன்று எப்போதும் நிகழாமல் பார்த்துக் கொள்வோம் என்று நம்புகிறேன்” இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். - ஸ்ரீநிவாச ராமனுஜம் | ‘தி இந்து’ ஆங்கிலம்

“நானே பலி ஆடு ஆகிறேன்” - இதனிடையே, ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “என்னை சிலர் G.O.A.T (எக்காலத்திலும் சிறந்தவர்) என்று அழைக்கின்றனர். எனவே இந்த முறை நமது விழிப்புணர்வுக்காக நானே பலி ஆடு ஆகிறேன். சென்னையின் கலை உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன், சுற்றுலாத் துறையின் வளர்ச்சி, திறன்மிகு கூட்ட மேலாண்மை, போக்குவரத்து மேலாண்மை, பார்வையாளர்களை விதிகளைப் பின்பற்றச் செம்மைப்படுத்துதல், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான அனுபவத்தை உருவாக்குதல் ஆகியவற்றுடன் செழிக்கட்டும். சென்னையில் ஒரு கலாசார மறுமலர்ச்சியைத் தூண்டி, நமக்கு மிக அவசியமான, உள்ளூர் மற்றும் சர்வதேச திறமைகளைக் கொண்டாடுவோம். இறைவன் நாடினால் நடக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்