“சாதி/மதத்தை பார்த்து ஓட்டு போடாதீர்கள்” - விவாதத்தை கிளப்பிய ‘ஜவான்’ கிளைமாக்ஸ் வசனம்

By செய்திப்பிரிவு

மும்பை: அண்மையில் வெளியான ‘ஜவான்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தேர்தலில் வாக்களிப்பது குறித்து ஷாருக்கான் பேசும் வசனம் இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. நயன்தாரா, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் நேற்று வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுவரும் நிலையில், உலகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் கிளைமாக்ஸில் பொதுமக்கள் முன் வீடியோவில் தோன்றும் ஷாருக்கான் தேர்தலில் வாக்களிப்பது குறித்து சில வசனங்களை பேசுகிறார். அதில் “காய்கறி வாங்கினால் கூட கடைக்காரரிடம் பலமுறை கேள்வி கேட்டு வாங்கும் நாம் ஓட்டுபோடும் போது சிந்தித்து போடவேண்டும். சாதி அல்லது மதத்தைப் பார்த்து ஓட்டுப் போடாதீர்கள். கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் ஆகியவற்றை மனதில் கொண்டு ஓட்டு போடுங்கள்” என்று பேசுகிறார்.

இந்தக் காட்சி ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வசனம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள் விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஷாருக்கானுக்கு எதிராக ஒரு தரப்பினரும், அவருக்கு ஆதரவாக மற்றொரு தரப்பினரும் பதிவிட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE