எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய ‘அனாதை ஆனந்தன்’

By செய்திப்பிரிவு

பணக்காரர் ஒருவரின் பேரன் ஆனந்தனுக்கு அனாதை விடுதியில் வசிக்கவேண்டிய நிலை. அங்கே ஏற்படும் கொடுமைகளைக் கண்டு தப்பி நகரத்துக்கு வருகிறான். அங்கு சிறுவர்களை வைத்து திருட்டுத் தொழில் நடத்தும் ரத்தினத்திடம் சிக்குகிறார். அங்கு நடனமாடும் மோகினியின் அன்பு கிடைக்கிறது. மோகினியின் காதலன் சேகரும் ரத்தினமும் சேர்ந்து ஆனந்தனைப் பயன்படுத்தி அவன் தாத்தா வீட்டில் கொள்ளையடிக்கத் திட்டம் போடுகின்றனர். பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.

இதில் அனாதை ஆனந்தன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளியிருந்தார் மாஸ்டர் சேகர். மோகினியாக ஜெயலலிதா. முகத்தில் காயத்தழும்புடன் வருவார் ஆர்எஸ் மனோகர். அவர் தோற்றமே மிரட்டும். முத்துராமனும் வில்லனாக நடித்தார். படத்தின் திரைக்கதை, வசனத்தை வி.சி.குகநாதன் எழுதியிருந்தார். பாடல்களை கண்ணதாசன் எழுத, கே.வி. மகாதேவன் இசை அமைத்தார்.

குடும்பக் கதைகளைத் தேர்வு செய்து இயக்கிய இயக்குநர்கள் கிருஷ்ணன்-பஞ்சு மசாலா படமாக இதை இயக்கியிருந்தனர். கலரில் வெளியான இந்தப் படம், 1970ம் ஆண்டு இதே நாளில்தான் வெளியானது.

இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் பற்றி வி.சி.குகநாதனிடம் கேட்டோம்.

“அப்போது ஏவி.எம் செட்டியார் மும்பையில் இருந்தார். அங்கிருந்து போன் செய்து, ஹாலிவுட் படம் ஒன்றைப் பார்க்க என்னையும் இயக்குநர் மாதவனையும் மும்பைக்கு அழைத்தார். நாங்கள் சென்றோம். அதற்குள் ஏவிஎம் செட்டியார் சென்னை திரும்பிவிட்டார். போன் செய்து விசாரித்தார். படம் பார்த்துவிட்டோம் என்றோம். பிறகு அங்கு ‘சந்தா அவுர் பிஜிலி’ என்ற படம் ஓடுகிறது. நான் சொன்ன ஹாலிவுட் படப் பாதிப்பில் உருவான படம்தான் அது. அதையும் பாருங்கள் என்றார். பார்த்தோம். பிறகு, அந்த இந்திப் படத்தை தமிழில் எடுக்கலாம் என்றார்.

நாங்கள் ‘ஹாலிவுட் படத்தில்தான் புதுமை இருக்கிறது. நீங்கள் சொன்ன படம் வேண்டாம்’ என்றோம். செட்டியார் கேட்கவில்லை. பிறகு மாதவன் அதில் இருந்து விலகிவிட்டார். நான் ஒப்பந்தத்தில் இருந்ததால் அந்தப் படத்துக்கு வசனம் எழுதினேன். அப்போதும் ‘இந்தப் படம் சரியாக வராது’ என்றேன். படம் முடிந்து ரிலீஸ் ஆனது. சென்னையில் தமிழ்நாடு என்ற புதிய திரையரங்கை கட்டியிருந்தார்கள். அதில் முதல் படமாக இது திரையிடப்பட்டது. நல்ல கூட்டம். தியேட்டரில் படம் பார்த்த, ஏவி.எம் செட்டியார் என்னை அழைத்து, ‘நல்ல கூட்டம் வந்திருக்கு, நீ சரியா வராது என்று சொன்னியே?’ என்று கேட்டார்.

பிறகு இரண்டு வாரம் கழித்து என்னை மீண்டும் அழைத்தார். ‘அந்த படம் சரியாகப் போகாதுன்னு எப்படி சொன்னே?’என்று கேட்டார். நான் அமைதியாக நின்றேன். அப்போதுதான் என் மீது அவருக்கு நம்பிக்கை வந்தது. நான் தயாரிப்பாளர் ஆனதுக்கு அவர் என் மீது வைத்த நம்பிக்கை தான் காரணம். இன்னொரு விஷயம், இந்தக் கதையில் எம்.ஜி.ஆரும் நடிக்க ஆசைப்பட்டார் என்பது யாருக்கும் தெரியாது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE