'மார்க் ஆண்டனி'ல பல சர்பிரைஸ் இருக்கு! - விஷால்

By செ. ஏக்நாத்ராஜ்

விஷால், எஸ்.ஜே.சூர்யா இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் ‘மார்க் ஆண்டனி’ வரும் 15ம் தேதி வெளியாகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கிறார். பான் இந்தியா முறையில் வெளியாகும் இதை, மினி ஸ்டூடியோ சார்பில் வினோத்குமார் தயாரித்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்திருக்கும் இந்தப் படம் பற்றி விஷாலிடம் பேசினோம்.

சயின்ஸ் பிக்‌ஷன் கதைன்னு சொன்னாங்களே?

இது சயின்ஸ் பிக்‌ஷன், டைம் டிராவல் கதையை கொண்ட படம். எல்லோருக்கும் புரியறமாதிரி ஆதிக் இயக்கி இருக்கார். நானும்எஸ்.ஜே.சூர்யா சாரும் சேர்ந்து இதுல ‘டூயல்ரோல்' பண்ணியிருக்கோம். சுனில், செல்வராகவன், ரிது வர்மா, அபிநயா, கிங்ஸ்லின்னு நிறையபேர் நடிச்சிருக்காங்க. கதைப்படி 1975-ல என் அப்பா ஆண்டனி கேங்ஸ்டர். 90-கள்ல மெக்கானிக்கா இருக்கிற அவர் மகன் மார்க் கேங்ஸ்டர். அதே போலஎஸ்.ஜே.சூர்யா சார் 75-ல ஜாக்கிப்பாண்டியன் அப்படிங்கற டான்.90-ல அவர் மகன் மதன் பாண்டியன், கேங்ஸ்டர். இவங்க கதை, டைம் டிராவலோட எப்படி போகும்ங்கறது திரைக்கதை. பக்காவான என்டர்டெயின்மென்ட்டுக்கு கியாரண்டியான படம்.

‘பீரியட்’ படம்னா, அதிகமா செட் போட வேண்டி வந்திருக்குமே?

உண்மைதான். 90 சதவிகிதம் செட்லதான் நடந்தது. மவுன்ட் ரோடு எல்ஐசி கட்டிடத்தை காண்பிக்கணும்னா இப்ப இருக்கிறதை காண்பிக்க முடியாது. அந்தக் காலகடத்துல இயக்கப்பட்ட டபுள் டெக்கர் பஸ்ல இருந்து பல விஷயங்களை உருவாக்கி இருக்கோம். ரசிகர்களுக்கு கண்டிப்பா பல சர்ப்பிரைஸ் காத்திருக்கு. கரோனாவுக்கு பிறகு தியேட்டருக்கு வந்து படம் பார்க்கிறது குறைஞ்சிருக்கு. அவங்களை தியேட்டருக்கு வர வைக்கணும்னா வித்தியாசமான கதைகள் வேணும். அந்த வகையில இந்தப் படம் மக்களுக்கு திருப்தியா இருக்கும்னு நினைக்கிறேன்.

கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி ஷூட் பண்ணும் போது, விபத்து நடந்ததே?

இன்னைக்கு இங்க நான் பேசறேன்னா அது தெய்வ செயல்தான். ஒரு கட்டிடத்தை இடிச்சுட்டு லாரி நேரா வரணும். நானும் எஸ்.ஜே.சூர்யா சாரும் தரையில கிடந்தோம். உடைச்சுட்டு வந்த லாரி, ஒரு இடத்துல நிற்கணும். ஆனா நிற்கலை. நேரா எங்களை நோக்கி வந்தது. வெளியே இருந்து எல்லோரும் கத்தினாங்க. கதவு பூட்டியிருந்ததால டிரைவருக்கு காது கேட்கலை. பிறகு பதற்றத்துல பிரேக்குக்கு பதிலாஆக்ஸிலேட்டரை மிதிச்சிட்டாரு. நல்லவேளையா நேரா வந்த வண்டியை, இடது பக்கமாஅவர் திருப்பினதால நாங்க தப்பிச்சோம்.

எஸ்.ஜே.சூர்யாவோட நடிச்ச அனுபவம்?

அவர் நல்ல நடிகர்னு எல்லாருக்கும் தெரியும்.இந்தப் படத்துல ஒரு காட்சியில எனக்கு சின்ன வசனம்தான். அவருக்கு நாலு பக்க வசனம். நான் வேடிக்கை பார்த்துட்டு நின்னேன். அவர் நடிக்க ஆரம்பிச்சார். கொஞ்ச நேரத்துல கெஞ்ச ஆரம்பிச்சார். திடீர்னு அழ ஆரம்பிச்சார். அடுத்து கோபப்பட்டார். எதிர்ல கேமரா இருக்கிறதை மறந்துட்டு அவரையே மெய்மறந்து பார்த்துட்டு இருந்தேன். நாலு பக்க வசனத்தை அவர் பேசி நடிச்சு முடிச்சதும் என்னையறியாமலேயே கைதட்டத் தொடங்கிட்டேன். அதை எனக்கு ஒரு பாடமா எடுத்துக்கிட்டேன்னா பாருங்க.

இந்தப் படத்தோட ரிலிஸ் தேதியை, ரெட் ஜெயன்ட்ல இருந்து தள்ளிவைக்க சொன்னதா சொல்றாங்களே?

ஒருத்தரோட உழைப்பை யாருமே தள்ளி வைக்க முடியாது. இந்தப் படத்துக்குப் பின்னால 300 பேரோட உழைப்பு இருக்கு. இது செப்.15ம் தேதி ரிலீஸானா நல்லாருக்கும்னு முன்னாலயே முடிவு பண்ணிட்டோம். அதை நோக்கி நாங்க எல்லா விஷயத்தையும் பண்ணிட்டோம். அதைத் தாண்டி எந்தப் படம் வெளியாகுதுன்னு அப்ப தெரியல. சினிமா துறை திறந்தவெளி மைதானம் மாதிரிதானே. இந்தப் படம் வெளியாகும் நேரத்துல இன்னொரு படம் வருதுன்னா வரட்டும். பிடிச்சிருந்தா பார்வையாளர்கள் வெற்றி பெற வைப்பாங்க.

விஜய்யின் ‘லியோ’வுல நடிக்காதது ஏன்?

அப்ப எனக்கு தொடர்ந்து படங்கள் இருந்தது. என்னைப் பொறுத்தவரை ஒரு படம் முடிச்சுட்டுதான் அடுத்த படத்துக்குப் போவேன். அந்தப் படத்துல நடிச்சா முழுமையா கவனம் செலுத்தணும். அது அவ்வளவு பெரிய படம். இயக்குநர் லோகேஷ்கிட்ட சொன்னேன், ‘இதுல நடிக்கிறதை விட நல்ல கதையை சொல்லி, விஜய் நடிக்க சம்மதிச்சார்னா, அதை விட சிறந்த சந்தோஷம் எதுவும் கிடையாது. நடிப்பை விட அதுதான் எனக்கு முக்கியம்’னு சொன்னேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE