சரஸ்வதி சபதம்: கல்வியா செல்வமா, வீரமா..?

By செய்திப்பிரிவு

தமிழ் சினிமாவில் புராணக் கதைகளுக்குத் தனி ரசிகர் கூட்டம் உண்டு. திருவிளையாடல், கந்தன் கருணை, திருமால் பெருமை உட்பட பல சூப்பர் ஹிட் படங்களை இதற்கு உதாரண மாகக் கூற முடியும். அதில் ஒன்றுதான் ‘சரஸ்வதி சபதம்’. ஏ.பி.நாகராஜன் இயக்கிய இதில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்ரி, பத்மினி, தேவிகா, கே.ஆர்.விஜயா உட்பட பலர் நடித்துள்ளனர். ‘திருவிளையாடல்’ படத்தில் நக்கீரனாக வந்து ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று சொல்வாரே, அவர்தான் ஏ.பி.நாகராஜன்.

கலைமகள், மலைமகள், திருமகள் ஆகிய மூன்று தெய்வங்களுக்குள் கலகத்தை ஏற்படுத்திவிடுகிறார் நாரதர். கல்வியா, செல்வமா, வீரமா என்று போட்டி ஏற்படுகிறது மூவருக்கும். வாய்ப்பேச முடியாத ஒருவரை கவிஞனாக்கி கல்விதான் பெரிது என்பதை நிரூபிக்கிறேன் என்று சபதமிடுகிறார் சரஸ்வதி. ஒரு பிச்சைக்காரியை இளவரசியாக்கி, அந்தக் கவிஞனை அவள் காலில் விழச் செய்து செல்வம்தான் பெரிது என்பதை நிரூபிக்கிறேன் என்கிறார் லட்சுமி. ஒரு கோழையைவீரனாக்கி வீரம்தான் சிறந்தது என்பதை நிலை நாட்டுகிறேன் என்கிறாள் மலைமகள். கடைசியில் மூன்றுமே மனிதகுலத்துக்கு முக்கியமானதுதான் என்று முடிப்பார்கள்.

இந்தப் படத்தில் நாரதராக வந்து கலகத்தை ஏற்படுத்தும் சிவாஜி, வாய்பேசமுடியாத வித்யாபதியாகவும் நடித்து அசத்தியிருப்பார். அவரின் வசன உச்சரிப்பும் நடிப்பும் அப்போது அதிகம் பேசப்பட்டது. சரஸ்வதியாக சாவித்திரி, லட்சுமியாக தேவிகா, பார்வதியாக பத்மினி போட்டிப் போட்டு நடித்திருப்பார்கள். படத்தின் ஒவ்வொரு வசனமும் அப்போது பிரபலம்.

கோயில் திருவிழா, கொடை காலங்களில் ஒலிப்பெருக்கியில் இந்தப் படத்தின் வசனத்தைத்தான் ஒலிபரப்புவார்கள். 50 வயதைத் தாண்டிய பலருக்கு இதன் வசனங்கள் மனப்பாடமாகவே ஆகியிருக்கும்.

கே.வி.மகாதேவன் இசையில் பாடல்களை கண்ணதாசன் எழுதியிருந்தார். அகரமுதல எழுத்தெல்லாம், தெய்வம் இருப்பது எங்கே?, கல்வியா செல்வமா வீரமா, ராணி மகாராணி, தாய் தந்த பிச்சையிலே உட்பட அனைத்துப் பாடல்களும் ஹிட். 1966ம் ஆண்டு இதே நாளில்தான் இந்தப் படம் வெளியானது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE