இசை ரசிகர்களின் ‘எனர்ஜி டானிக்’ | யுவன் பிறந்தநாள் ஸ்பெஷல்

By செய்திப்பிரிவு

தமிழ் திரை இசையின் அடையாளமான இளையராஜாவின் வாரிசு என்ற பெயரோடு திரைத்துறைக்குள் அடியெடுத்து வைத்தாலும் தனக்கென்று ஒரு தவிர்க்க முடியாத இடத்தை உருவாக்கி, தனக்கென்று ஒரு ‘வெறித்தனமான’ உருவாக்கியவர் யுவன் ஷங்கர் ராஜா. துக்கம், காதல் தோல்வி, மன உளைச்சல் என என்ன பிரச்சினை என்றாலும் 90ஸ் கிட்ஸ் மற்றும் 2கே கிட்ஸ் தேடிச் செல்லும் இசை மருத்துவர் யுவன். அவரது பாடல்கள் இசை ரசிகர்களுக்கான எனர்ஜி பூஸ்டர். இசையுலகில் 25 ஆண்டுகளைக் கடந்து ஆதிக்கம் செலுத்தி வரும் யுவன் இன்று (ஆக.31) தனது 44வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இளையராஜாவின் இளைய வாரிசாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமான யுவனுக்கு முதல் 97ஆம் ஆண்டு வெளியான ‘அரவிந்தன்’. இதில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் இடம்பெற்ற ‘ஈரநிலா’ என்ற பாடல் இன்றுவரை பிரபலம். இப்படத்துக்கு இசையமைத்த யுவனுக்கு அப்போது வயது 14.

அதன் பிறகு 99 ஆம் ஆண்டு சூர்யா -ஜோதிகா நடிப்பில் வெளியான ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ பாடல்கள் யுவனை திரும்பிப் பார்க்க வைத்தன. அதில் இடம்பெற்ற ‘சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே’, ‘இரவா பகலா’ ஆகிய பாடல்கள் இளம் காதலர்களின் ஃபேவரிட் ஆக மாறின. தொடர்ந்து சரத்குமாரின் ‘ரிஷி’, அஜித்தின் ‘தீனா’ ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்தார். எனினும் தனுஷின் முதல் படமான ‘துள்ளுவதோ இளமை’ பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்து யுவனுக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. அப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன.

அதனைத் தொடர்ந்து ‘ஏப்ரல் மாதத்தில்’, ‘மவுனம் பேசியதே’, ‘பாலா’, ‘வின்னர்’ போன்ற படங்களின் மூலம் தனது தனி முத்திரையை பதித்து வந்தார் யுவன். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘காதல் கொண்டேன்’ படம் யுவனின் திரை வாழ்வில் மிக முக்கியமான படமாக அமைந்தது. தமிழ் திரை இசைத் துறையில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்ட கூட்டணிகளில் ஒன்றான யுவன் - நா.முத்துகுமார் கூட்டணி பரவலாக கவனிக்கப்பட்ட முதல் படம் இதுவே. அதற்கு முன்பே ஓரிரு பாடல்களில் இருவரும் இணைந்து வேலை செய்திருந்தாலும், இந்த படம் இருவருக்கும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இதில் இடம்பெற்ற ‘தேவதையைக் கண்டேன்’ பாடல் அக்காலகட்டத்தில் முணுமுணுக்காத வாய்களே இல்லை என்னும் அளவுக்கு ஹிட்டானது.

யுவன் - நா.முத்துகுமார் கூட்டணியில் உருவான பாடல்களில் இசையைத் தாண்டி பாடல் வரிகள் ரசிகர்களால் வெகுவாக கவனிக்கப்பட்டன. ‘7ஜி ரெயின்போ காலணி’ படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் இதற்கு உதாரணம். இதில் இடம்பெற்ற ‘நினைத்து நினைத்து பார்த்தால்’, ‘கனா காணும் காலங்கள்’, ’கண் பேசும் வார்த்தைகள்’ ஆகிய பாடல்கள் பல வருடங்களுக்கு ரசிகர்களின் இதயங்களில் ரிங்டோனாக ஒலித்துக் கொண்டிருந்தன.

யுவனின் அறையில் நா.முத்துக்குமாருக்கென்று ஒரு தனி அறை ஒதுக்கப்பட்டிருந்ததாகக் கூட சொல்லப்படுவதுண்டு. நா.முத்துகுமாரின் மறைவு யுவனுக்கு மட்டுமின்றி இசை ரசிகர்களுக்கே மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் ஆளுமை சர்வதேச அளவில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்த காலகட்டத்தில், புதிய இசையமைப்பாளர்கள் தமிழில் கால் பதித்துக் கொண்டிருந்த நேரத்திலும் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கினார் யுவன். செல்வராகவன், அமீர், லிங்குசாமி, வெங்கட் பிரபு என அப்போது வளர்ந்து கொண்டிருந்த இயக்குநர்கள் அனைவரும் தேடி வந்தது யுவனைத்தான். பிரபலமடையாத பல படங்களின் பாடல்கள் கூட யுவனால் இன்றுவரை பலரது ப்ளேலிஸ்ட்டில் இடம்பெற்று வருகின்றன.

மனம் துவண்டு எதிர்மறை எண்ணங்கள் இதயத்தை ஆக்கிரமித்திருக்கும் வேளையில் இசை ரசிகர்கள் பலரும் ப்ளே செய்வது ‘புதுப்பேட்டை’ படத்தில் இடம்பெற்ற ‘ஒருநாளில் வாழ்க்கை’ பாடலைத்தான். யுவனின் குரலும் இசையும் பாடல் வரிகளும் சோர்ந்து போயிருக்கும் உள்ளத்துக்கு ஒரு ஊக்கமருந்தாக செயல்பட்டு புத்துணர்வை தரவல்லது. இன்றும் இப்பாடல் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ரீல்ஸ்களாகவும் பகிரப்படுவதை பார்க்கலாம்.

2005ஆம் ஆண்டு அமீரின் இயக்கத்தில் வெளியான ‘ராம்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆராரிரோ’ என்ற பாடல் தாய்மார்களின் தியாகத்தை பேசும் பாடல்களில் என்றென்றும் முதலிடத்தில் இருக்கும். சினேகனின் வரிகளில் யுவனின் இசையும் ஜேசுதாஸின் குரலும் கல்நெஞ்சத்தையும் அசைத்துவிடும்.

அதே போல யுவனின் குரலுக்கென்று ரசிகர் கூட்டம் ஏராளம். ‘எஸ்எம்எஸ்’ ’ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘தீபாவளி’ படத்தின் ‘போகாதே’, ‘கற்றது தமிழ்’ படத்தின் ‘உனக்காகத்தானே’, ‘பையா’ படத்தில் இடம்பெற்ற ‘ஒரு காதல் சொல்ல’ ஆகிய பாடல்களை யுவனின் குரல் மேலும் அழகாக்கின.

பாடல்கள் தாண்டி பின்னணி இசையிலும் தனித்து விளங்கினார் யுவன். ‘மவுனம் பேசியதே’, ‘காதல் கொண்டேன்’, ‘7ஜி ரெயின்போ காலணி’, ‘பருத்திவீரன்’, ’மன்மதன்’ ஆகிய படங்களின் பின்னணி இசை மற்றும் தீம் இசைகள் இன்றும் கொண்டாடப்படுபவை.

காலம் கடந்து தொழில்நுட்ப மாற்றங்கள் நிகழ்ந்தாலும் இன்றைய புதிய தலைமுறை இசையமைப்பாளர்களுக்கும் கடுமையான ‘டஃப்’ கொடுத்துக் கொண்டிருக்கிறார் யுவன். 2018 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல் அடைந்த புகழை சொல்லித் தெரியவேண்டியதில்லை. யூடியூபில் உலகப் புகழ் பெற்ற பாடல்களில் மிக முக்கியமான பாடலாக ‘ரவுடி பேபி’ மாறியது.

ரீமிக்ஸ் என்ற பெயரில் பழைய நல்ல பாடல்களை குதறி வைக்காமல் தனது தந்தையின் பாடல்களை ஒருசில சின்ன மாற்றங்களுடன் அதன் அசல்தன்மை சிதையாமல் வழங்குவதில் யுவன் வல்லவர். சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான ‘டிக்கிலோனா’ படத்தில் இளையராஜாவின் எவர்கிரீன் பாடல்களின் ஒன்றான ‘பேர் வச்சாலும்’ பாடல் அழகிய முறையில் ரீமிக்ஸ் செய்யப்பட்டு இந்திய அளவில் ரீச் ஆனது.

இன்றைய புதிய தலைமுறை ரசிகர்களின் மனநிலையை உள்வாங்கி அதற்கேற்ற பாடல்களையும், இசையையும் கொடுக்கவும் அவர் தவறவில்லை. சமீபத்தில் வெளியான ‘மாநாடு’, ‘லவ் டுடே’, ‘விருமன்’ ஆகிய படங்களின் பாடல்கள் இன்றைய 2கே கிட்ஸ் தலைமுறைகளின் மனம் கவர்ந்தன. கிராமிய பாடல்களோ, மேற்கத்திய பாணி இசையோ எதுவாக இருந்தாலும் பெரியவர்கள் முதல் இளம் தலைமுறை வரை அனைவரையும் கொண்டாட வைக்கும் யுவன் ஷங்கர் ராஜாவை அவரது இந்த பிறந்தநாளில் மனமார வாழ்த்துவோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE