நல்லவன் வாழ்வான்: குத்தாலம் அருவியிலே குளிச்சது போல்...

By செய்திப்பிரிவு

‘சதி லீலாவதி’ மூலம் திரை வாழ்வைத் தொடங்கிய எம்.ஜி.ஆரின்50-வது திரைப்படம், ‘நல்லவன் வாழ்வான்’. ப. நீலகண்டன் தனது அரசு பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து, இயக்கிய படம் இது. நா.பாண்டுரங்கனின் கதைக்குத் திரைக்கதை, வசனம் எழுதியவர் சி.என்.அண்ணாதுரை. ஜி.துரை ஒளிப்பதிவு. ராஜசுலோச்சனா எம்.ஜி.ஆரின் மனைவியாக நடித்திருப்பார். ஈ.வி.சரோஜா, லட்சுமி பிரபா உட்பட பலர் நடித்துள்ளனர்.

பெண்ணாசைக் கொண்ட பணக்கார எம்.ஆர்.ராதாவின் சதியால், செய்யாத கொலைக்குக் குற்றவாளியாக்கப் படுகிறார் எம்.ஜி.ஆர். அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. போலீஸிடம் இருந்து தப்பிக்கும் எம்.ஜி.ஆர், உண்மையானக் குற்றவாளியைக் கண்டுபிடித்து தன்னை நிரபராதி என நிரூபிக்கும் கதை.

எம்.ஆர்.ராதா பணக்காரத் தோரணையில் சிறப்பாக நடித்திருப்பார். அவர் உடல்மொழியும் வசனங்களும் பாராட்டப்பட்டன. இதில் பாராட்டப்பட்ட மற்றொரு விஷயம் படத்தின் குறைவான நீளம்.

வெற்றி வெற்றி என்ற சென்டிமென்ட் வசனத்துடன் படம் தொடங்கும். வழக்கமாகக் கொடூர வில்லனாக வரும் எம்.என்.நம்பியார் இதில் நேர்மையான போலீஸ் அதிகாரி.

ஒவ்வொரு எம்.ஜி.ஆர் படத்திலும் சண்டைக்காட்சியில் ஏதாவது ஒரு புதுமை இருக்கும். இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிஅப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்தக் காட்சியைத் தண்ணீருக்குள் அமைத்திருந்தார்கள். ஜி.துரை அதை அருமையாக ஒளிப்பதிவு செய்திருப்பார். இதன் படப்பிடிப்பு முடிந்ததும் எம்.ஆர்.ராதாவுக்கு ஒரு மாதம் காய்ச்சல். அப்போது தினமும் காலையும் மாலையும் நலம் விசாரித்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.

டி.ஆர்.பாப்பா இசையில்,பாடல்களை மருதகாசி, ஆத்மநாதன், வாலி, சந்தானம், கவி ராஜகோபால் ஆகியோர் எழுதியிருந்தனர். எம்.ஜி.ஆருக்குவாலி எழுதிய முதல் பாடல்இந்தப் படத்தில்தான் இடம்பெற்றது.

வாலியின், ‘குத்தாலம் அருவியிலே குளிச்சது போல்’, ‘சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்’, ஆத்மநாதனின் ‘அடிச்சிருக்கு நல்லதொரு சான்ஸு’, ‘ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்’, கவி ராஜகோபாலின் ‘நித்தம் நித்தம் மனது’ உள்ளிட்ட பாடல்கள் வரவேற்பைப்பெற்றன. 1961-ம் ஆண்டு இதே நாளில்தான் இந்தப் படம் வெளியானது.

இந்தப் படத்தில் பாடல் எழுதிய அனுபவம் பற்றி வாலி கூறும்போது, “சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்’ என்ற பாடலை முதலில் எழுதியிருந்தேன்.எம்.ஜி.ஆரிடம் காண்பித்தனர். அண்ணாதுரைக்குப் பிடித்திருந்தால் பிரச்சினையில்லை என்றார் எம்.ஜி.ஆர். அண்ணாதுரை பார்த்துவிட்டுப் பாடலின் சில வரிகளை மாற்றவே கூடாது என்றார்.ஆனால், பாடல் ரெக்கார்டிங் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. ஒரு நாள் ரெக்கார்டிங் எனமுடிவு செய்து சுசீலாவை அழைத்தனர். கடைசி நேரத்தில் உடல் நிலைசரியில்லை என்று அவர் வரவில்லை.

இதனால் இயக்குநர், ‘இந்தப் பாட்டுக்கு ராசியே இல்லை. மருதகாசியை எழுத வைக்கலாம்’ என்று சொல்லிவிட்டார். மருதகாசி அந்தப் பாடலை வாசித்துவிட்டு, ‘இந்தப் பையன் சிறப்பாக எழுதியிருக்கான். அவன்வாழ்க்கையை நான் கெடுக்கவிரும்பலை’ என்று சொல்லிவிட்டார். அவரால்தான் இன்று நானாக இருக்கிறேன்” என்றார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE