குரங்கு பொம்மை திரையிடல் - டிசம்பர் 20 | ரஷ்ய கலாச்சார மையம் | மாலை 6:00 மணி
தமிழில் உலக சினிமாக்கள் தோன்றவே முடியாது என்ற அங்கலாய்ப்புக்குச் சமீப காலத்தில் ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’ போன்ற படங்கள் பதிலாக அமைந்தன. அந்த இரண்டு படங்கள் பற்றிய உரையாடல் ஓய்ந்திருக்கும் தருணத்தில் வந்திருக்கிறது ‘குரங்குபொம்மை’. சினிமாவை நேசித்து அதை ரசனையுடன் அணுகத் துடிக்கும் புதுமுக இயக்குநர்களும், நல்ல சினிமாவை எடுக்கவேண்டும் என்ற துடிப்புடன் முன்வரும் புதிய தலைமுறை தயாரிப்பாளர்களும் அதிகரித்திருக்கிறார்கள் என்பதற்கான அடையாளமாகவே ‘குரங்கு பொம்மை’யைப் பார்க்கவேண்டியிருக்கிறது.
அடிப்படை நியாயம் குறைவாக இருக்கும் கதைகளில் நடிக்க கொஞ்சமும் கூச்சம் கொள்ளாத முன்னணிக் கதாநாயகர்களின் இரும்புக் கோட்டையாகவே தமிழ் சினிமா தொடர்ந்தாலும் அந்த நிலைமை மெள்ள மாறிக்கொண்டு வருவதை ‘குரங்கு பொம்மை’ போன்ற சமீபத்திய சிறு முதலீட்டில் தயாராகும் உள்ளடக்க ரீதியான பெரிய படங்கள் உறுதிப்படுத்துகின்றன. நட்சத்திர முகங்களைவிட, கதாபாத்திரங்களும் திரைக்கதையும்தான் எல்லாமும் என்ற நிலையை நோக்கி இது போன்ற படங்கள்தான் தமிழ் சினிமாவை நகர்த்தமுடியும். ‘குரங்கு பொம்மை’ தனது செய்தி நேர்த்தியால் சிறந்த பொழுதுபோக்கு உணர்வு, சிறந்த சினிமா அனுபவம் இரண்டையும் ஒருசேர வழங்கத் தவறவில்லை.
மக்கள் கூட்டத்துள் நிறைந்திருக்கும் நிஜக் கதாபாத்திரங்களை திரைக்குள் கொண்டுவரும்போது, சினிமாத்தனமும் சேர்ந்தே ஒட்டிக்கொண்டுவிடுகிறது. ‘வணிக ரீதியாக வெற்றிபெற வேண்டும்’ என்ற முன் தீர்மானத்துடன், கதாபாத்திரங்களின் இயல்பான கச்சாத் தன்மைக்கு பெரும்பாலான இயக்குநர்கள் வண்ணம் தீட்டிவிடுகிறார்கள். இதுவரையிலும் ஆகி வந்திருக்கும் இந்த விதியைத் தனது முதல் படத்திலேயே தகர்க்க முடியும் என்று காட்டியிருக்கிறார் ‘குரங்கு பொம்மை’ படத்தின் மூலம் அறிமுகமாகியிருக்கும் நித்திலன்.
மொத்தமே நான்கு முக்கிய கதாபாத்திரங்கள்தான். செஞ்சோற்றுக் கடனுக்காக கூடா நட்பால் வீழ்ந்த கர்ணனை நினைவூட்டும் கிராமத்துச் சாமானியனாக ஒரு நடுத்தர வயதுக்காரர். சேரக்கூடாத இடத்தில் இருக்கும் தன் தந்தையின் மீது அதற்காக கோபத்தைக் காட்டினாலும் வெறுப்பைக் காட்டாத ஒரு பாச மகன், கெட்ட வாழ்க்கை வாழ்ந்தாலும் நண்பனுக்காகத் துடித்துப்போகும் துரியோதனனை நினைவுபடுத்தும் பெரிய மனிதர், பணத்தின் மீது பேராசை கொண்டு அழிவைச் சந்திக்கும் நகர்ப்புறத்தின் சாமானியன்.
இந்த நான்கு கதாபாத்திரங்களில் மூன்றினை ஏற்று நடித்திருப்பவர்கள், தமிழ்ப் பார்வையாளர்கள் நன்கு அறிந்த பாரதிராஜா, விதார்த், நாடகக் கலைஞரான இளங்கோ குமரவேல். ஆனால் இவர்கள் மூவரை மட்டுமல்ல, புதுமுக நடிகர்களையும் கதாபாத்திரங்களாக மட்டுமே தெரியும்படி செய்ததில் தன் ஆளுமையை வெளிப்படுத்தியிருக்கிறார் நித்திலன்.
நடிகர்களை கதாபாத்திரங்களில் பொருத்திக்கொள்ளச் செய்வதிலும் கதாபாத்திர வடிவமைப்பு நடிகர்களிடம் ஏற்படுத்தும் தாக்கமும் அழுத்தமும் முக்கியமானவை. விதார்த் பல படங்களில் கிராமத்து இளைஞன், சில படங்களில் நகரத்து இளைஞன் என்று தனக்கான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் கதிர் கதாபாத்திரமாகத் தன்னைப் பொருத்திக்கொண்டுவிடுகிறார்.
ஒரு இயக்குநராக பாரதிராஜா தனது படப்பிடிப்பு தளங்களில் மிகை நடிப்பைக் கற்றுத்தருபவர் என்று கூறப்படுவதுண்டு. ஆனால் சுந்தரம் எனும் எளிய மனிதனாகத் தன்னை வெகு இயல்பாக வெளிப்படுத்திச் சென்றுவிடுகிறார். சிறு கதாபாத்திரமே என்றாலும் பாரதிராஜாவுக்கான வாழ்நாள் கதாபாத்திரம்போல் நின்றுவிடுகிறார் சுந்தரம். எதிரே இருப்பவன் தன்னைக் கொல்லப்போகிறான் என்று தெரிந்ததும் “ எம்மகன் இங்கதான்யா டிரைவரா இருக்கான்… அவனை ஒரு தடவை பார்த்துட்டு வந்துர்றேன்.
என்னைவிட நீ வயசு கம்மியா இருக்க தம்பி. இல்லன்னா நான் உன் கால்ல விழுந்துருவேன். நீ என்னக் கொல்லப்போறேன்ற விஷயத்த என் மகன்கிட்ட சொல்லமாட்டேன்” என்று தீனமான குரலில் சுந்தரமாகவே மாறி பாரதிராஜா கெஞ்சும் காட்சி உலுக்கிவிடுகிறது. இந்தக் காட்சியில் மிக உயர்ந்த நீதிபோதனையை மறைமுகமாக, ஆனால் வலுவாகச் சொல்லிவிடுகிறது படம். இரண்டு மணி நேரத்துக்கும் குறைவான படத்தில் இதுபோன்ற தருணங்க கலங்க வைத்துவிடுகின்றன.
இதற்குமுன் ஒருசில சின்ன கதாபாத்திரங்களில் தோன்றியிருந்தாலும் ஏகாம்பரமாக தயாரிப்பாளர் தேனப்பன் தந்திருக்கும் நடிப்பு மிக நம்பகமானது. பணத்துக்காகக் கொலையும் செய்யும் இந்தக் கதாபாத்திரம், உயிர் நண்பனைப் பகடையாக்கினாலும் அவனைக் காணவில்லை எனும்போது பணத்தை இரண்டாமிடத்தில் வைக்கும் கட்டத்தில் இழந்த மரியாதையில் கொஞ்சம் ஈட்டிவிடுகிறது.
எத்தனை தீய வழியில் என்றாலும் தனக்கு பணம் கிடைத்தால் போதும், தன்னை இயக்குபவன் தரும் பையில் பஞ்சலோகச் சிலையோ அல்லது அறுக்கப்பட்ட மனிதத் தலையோ எதுவென்றாலும் அதைச் சுமந்துசெல்ல மனத்தடை இல்லை என நினைக்கும் கிருஷ்ணமூர்த்தியும், ஒரு கோடிப் பணத்தை படுக்கையில் விரித்துத் தூங்க அலையும் கல்கியும்கூட நமக்கு மத்தியில் நடமாடும் கதாபாத்திரங்கள்தான்.
காதல் காட்சிகளில் இருக்கும் குறைகளைக் கடந்து, சுவாரஸ்யமான கதை சொல்லல், நுணுக்கமான விவரங்கள், நேர்த்தியான திரைமொழி ஆகியவற்றின் மூலம் ஒரு க்ரைம் த்ரில்லர் கதையை நேர்மையான படமாகத் தரமுடியும் என்று நிரூபித்திருக்கிறார் இயக்குநர். திரை ஒரு இயக்குநரின் ஊடகம் என்பதற்கு மேலும் ஒரு தேர்ந்த சாட்சியம் ‘குரங்கு பொம்மை’. இது ஒதுக்க முடியாத சினிமா.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago